மூன்றும் ஒன்று, மூன்றில் ஒன்று !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஸ்ரீதிரிநாம கண்ட மகரிஷி

ஒரு மனிதக் குழந்தை கர்ப்பத்தில் வாழும் ஐந்தாவது மாதத்தில் கை, கால், முகம் என்ற உறுப்புகளைப் பெறுகிறது, எட்டாவது மாதத்தில் சுவாசம் மூலம் உயிர் அந்தக் குழந்தையை அடைகிறது. இது ஒரு பொதுவான விதியே தவிர, மரணத்தைப் போல மனித ஜனனத்திலும் ஆயிரமாயிரம் மனித மூளையால், அறிவால் புரிந்து கொள்ள முடியாத விஷயங்கள் உண்டு.

எப்படி நீரைப் பற்றி சற்றும் புரிந்து கொள்ள முடியாத அனைத்து ஜீவ ராசிகளும் தங்கள் அன்றாட வாழ்வில் நீரைப் பயன்படுத்தி பயன்பெறுகிறார்களோ அது போல் ஜனன மரண இரகசியங்களைப் பற்றி புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் மனிதப் பிறவி நல்லவிதமாக அமைய வழிகாட்டுபவர்களே சிலக்காகித சித்தர்கள் ஆவர்.

திருக்கச்சூர்

உயிர்களுக்கு உருவம் என்பது மிகவும் அத்தியாவசியமானது என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. எனவே இந்த உருவமானது சிறப்பாக இருக்க அருள்புரிபவர்களே சிலக்காகித சித்தர்கள். அதனால்தான் சிலக்காகித சித்தர்களை ஐந்தாவது மாதமும், எட்டாவது மாதமும் வணங்கி நல்லருள் பெற வழிகாட்டுகிறார் நம் சற்குரு.

உலக மக்கள் சமுதாயத்திற்கு நல்லருள் பொலிய உருவாக்கிய திருஅண்ணாமலை ஆஸ்ரமத்திற்கு அடிக்கல் விழாவான பூமி பூஜையில் அடியார்களுக்கு முதலில் நம் சற்குரு சிலகாகித சித்தர்களின் தரிசனத்தையும் அருளாசியையும் பெற்றுத் தந்தார். அன்று மாலை ஏழு மணி அளவில் அடியார்கள் சிலகாகித சித்தர்களின் சுமார் 60 தரிசனங்களைப் பெற்றனர்.

3000 முதல் 30,000 வரையும், சில உற்சவ சமயங்களில் மூன்று லட்சம் வரையும் தங்கள் உருவத்தால் வெவ்வெறு விதமாக காட்சி அளிக்கக் கூடியவர்களே சிலக்காகித சித்தர்கள். பார்ப்பதற்கு மேகக் கூட்டம் போல் இவர்களின் தரிசனம் அமைந்தாலும், சற்குரு ஒருவரே நாம் காண்பது மேகக் கூட்டமா, சித்தர்கள், மகான்களின் அணிவகுப்பா, இல்லை சிலக்காகித சித்தர்களின் தோற்ற அனுகிரகமா என்பதைக் கூற முடியும். தேவர்கள், மகான்கள், சித்தர்கள் போன்ற உயர்நிலை ஜீவன்கள் தங்கள் ஒளி பொருந்திய வாகனங்களில் திருஅண்ணாமலையாரைத் தரிசனம் செய்ய வரும்போது அவர்களின் வாகனங்களைக் காணும் நாம், நம் கண் ஒளியை இழந்து விடக் கூடாது என்பதற்காக மேகக் கூட்டங்கள் அவர்களையும், அவர்கள் வாகனங்களையும் மறைத்து விடுவதும் உண்டு. பெரும்பாலும், கார்த்திகை தீப வைபவத்தின்போது இத்தகைய காட்சிகளை நாம் காணலாம்.

ஸ்ரீநந்தீஸ்வரர் திருக்கச்சூர்

உதாரணமாக, நீங்கள் தரிசனம் செய்த திருஅண்ணாமலையாரின் தோன்றாநிலை மேகக் கூட்டங்களால் உருவாக்கப்பட்டதே தவிர அது சிலகாகித சித்தர்களின் தரிசன அனுகிரகம் கிடையாது. காரணம், பூமியின் காலநிலையில் மூன்றிலிருந்து ஆறு விநாடி நேரத்திற்கு நிரவி நிற்கக் கூடியவையே சிலகாகித சித்தர்கள் உருவாக்கும் அண்ணாமலை தரிசனங்கள். நம் சற்குரு அருளிய ஒரு மான் பாயும் தரிசனம், சில நொடிகளில் குடும்பியான் மலை தரிசனம் என்பதாக மாறியது. அதாவது ஒரு சிவலிங்கம் எதிரே ஒரு மான் வேகமாக ஓடிக் கொண்டு இருப்பதைப் போன்ற ஒரு மேகக் கூட்டங்கள் சேர்ந்த காட்சி, சற்று நேரத்தில் சுவாமி அண்ணாமலையாராக, சிவலிங்க ரூபத்தில் ஒரு கிரீடத்தை அணிந்திருப்பது போன்ற ஒரு தோற்றத்தைக் காட்டி அருளினார்.

ஜடபரத மகரிஷி தான் ஒரு ராஜாவாக முந்தைய பிறவியில் விளங்கி, வைராக்யம் ஏற்பட்டு ஒரு ரிஷியாக மாறினார். காட்டில் உள்ள நதியில் ஒரு நாள் அர்க்யம் அளித்துக் கொண்டிருந்தபோது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மான் ஒன்று புலியின் தாக்குதலுக்குப் பயந்து அவர் கையில் குட்டியை ஈந்து விட்டு தான் நதியில் விழுந்து இறந்து விட்டது.

ஜட பரதரும் அந்த மான்குட்டிக்கு அளிக்க பாலுக்காக தேடி அலைந்து அளித்து அந்த மான் குட்டியை வளர்ப்பதிலேயே தன் எஞ்சிய வாழ்க்கையை செலவிட்டு விட்டு, இறுதியில் அந்த மானைப் பார்த்துக் கொண்டே இறந்து விட்டார். இருந்தாலும் பல்லாண்டுகள் இயற்றிய கடுந் தவத்தால் தன்னுடைய தவற்றை உணர்ந்து அடுத்த பிறவியில் அவர் மானாகப் பிறந்தாலும், தன்னுடைய வைராக்யத்தை விடாமல் தக்க வைத்துக் கொண்டு ஜடபரதராக பூலோகத்தில் தோன்றி இறைவனின் சிரசை அலங்கரிக்கும் கிரீட நிலைக்கு உயர்ந்தார் என்பதே இந்த சில நிமிட சிலகாகித சித்தர்களின் தரிசனம் கூட்டும் புராண வரலாறாகும்.

ஆனால், இந்த வரலாற்றை நாம் அறிந்து கொள்ள உதவியது சற்குருவின் வழிகாட்டுதல் ஒன்று மட்டுமே என்று தெளிவுபடுத்துவதும் சிலக்காகித சித்தர்களின் பெருங்கருணையாகும். இந்த புராண வரலாற்றிலிருந்து மனிதனின் ஐந்தாம், எட்டாம் மாதங்களின் கர்ப்பவாசம் நன்முறையில் அமைய உதவும் சிலகாகித சித்தர்களின் அனுகிரகம் தெளிவாகுமே.

இதே போல் அங் உங் சிங் என்ற மூன்று சித்தர்களின் குழாம் ஸ்ரீஅங்உங்சிங் சித்தர்கள் என்ற அழைக்கப்படுகின்றனர். சிலக்காகித சித்தர்களைப் போலவே இந்த மூன்று சித்தர்களின் உருவமும் ஒன்றாக இணைந்து ஒரே சித்த உருவமாகத் தென்படும். இந்த சித்த குழாம் நம் சற்குருவால் தினமுமே பூஜிக்கப்பட்டவர்கள் ஆவார்கள், பூஜிக்கப்படுபவர் ஆவர். இந்த N2023 நூபுர ஆண்டு நாம் வழிபட வேண்டிய சித்தர்கள் குழாமே நவநாத சித்தர்கள் ஆவர்.

திருக்கச்சூர்

அனைத்து இறை சக்திகளும் ஒன்றாய்க் குழுமிய, அனைத்து இறை சக்திகளும் ஒன்றாய்த் துலங்கி அருள்புரியும் கோலத்தையே நாம் நவநாத சித்தர்கள் என்கிறோம்.
ஸ்ரீகோரைக்கால் சித்தர்
ஸ்ரீகோட்டைக்கால் சித்தர்
ஸ்ரீவடுகநாத சித்தர்
ஸ்ரீவாணிபலா சித்தர்
ஸ்ரீபாணபாண சித்தர்
ஸ்ரீபாணகத்ர சித்தர்
ஸ்ரீபாணகித்ர சித்தர்
ஸ்ரீபாணவாலை சித்தர்
ஸ்ரீவிதர்பகால சித்தர்
என்ற நவநாத சித்தர்கள் ஸ்ரீஅங்உங்சிங் சித்தர்களைப் போல் ஒன்றாய்த் தோன்றி அருளாட்சி புரிந்தாலும் பூலோக மக்களின் நலன் கருதி இந்த நவநாதசித்தர்களின் அருள்சக்தி என்ற ஒரே சக்தி மட்டும் ஸ்ரீதிரிநாமகண்ட மகரிஷி என்ற வடிவம் கொண்டு பூலோக மக்களுக்கு இந்த N2023 ஆண்டில் அருள்புரியும் என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் நவநாத சித்தர்களின் பெருங்கருணையாகும்.

திரிநாமம் ஒரு நாமமே

இறைவனைக் குறிக்கும் பலவிதமான கொள்கைகளுள் த்வைதம், அத்வைதம் என்ற இரண்டு கொள்கைகளும் முக்கியமானவையாகும். இதில் அத்வைதம் என்பது ஒரே இறைவன் பல உயிர்களாக விரிந்துள்ளான் என்பதும், இறைவன் வேறு, உயிர்கள் வேறு என்றவாறு த்வைத தத்துவமாகவும் ஒளிர்வது நீங்கள் அறிந்ததே. இவ்வாறு அத்வைதம் என்பது நடைமுறையில் பின்பற்றுவது மிகவும் கடினம் என்பதால் த்வைத தத்துவமே பல குருமார்களால் சிபாரிசு செய்யப்படுகிறது. ஆனால், எவ்வளக்கெவ்வளவு இந்த த்வைத கருத்துக்களை ஒருவர் தீவிரமாக பின்பற்றுகிறாரோ அவர் நிச்சயமாக இறுதியில் இறைவன் ஒருவரே உண்மை என்ற அத்வைத தத்துவத்தில் ஒன்றி நிலைப்பார் என்பது மறுக்க முடியாத உண்மையே.

ஸ்ரீதியாகராஜர் திருக்கச்சூர்

இந்தக் கருத்தை மையமாகக் கொண்டு உலகில் தோன்றியவரே ஸ்ரீதிரிநாமகண்ட மகரிஷி ஆவார். மதுரையில் ஜீவசமாதி கொண்டு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீநடனகோபால நாயகி சுவாமிகளும் கழுத்து என்னும் கண்டப் பகுதியில் மூன்று நாமங்களுடன் துலங்குவார். சுவாமிகள், ஸ்ரீதிரிநாமகண்ட மகரிஷியின் வழிவந்தவர் என்பதால் ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீநடனகோபால நாயகிகளின் அருள்மண்டபம் தோன்றிய இடத்திலேயே நம் கேந்த்ராலயா கிளை எழுந்தருளி உள்ளது என்பது நம்மை பிரமிக்க வைக்கும் இரகசியம் ஆகும்.

ராகுவிற்கு ஏழாம் இடமாக கேது இருப்பதும், கேதுவிற்கு ஏழாம் இடத்தில் ராகு இருப்பதும் ஒருவருக்கொருவர் நேர் பார்வையாக எழுந்தருளி உள்ளது கேதுவிற்கு உரிய வருடமான N2023ல் கண்டத்தில் மூன்று இடங்களிலும் நெற்றியில் ஒரு நாமமும் தரித்திருக்கும் ஸ்ரீதிரிநாம கண்ட மகரிஷிக்கு உரித்தானதாகிறது என்பதும் எண் கணித சக்திகளின் இணைப்பு இரகசியமாகும்.

ஸ்ரீதிரிநாமகண்ட மகரிஷியின் கண்டத்தில் திகழும் மூன்று நாமங்களை தொடர்ந்து தியானித்து வந்தால் இந்த மூன்று நாமங்களும் ஒன்றில் ஒன்று இலயமாகி ஒரே நாமமாகத் திகழும். பின்னர் இந்த ஒரு நாமமும் சுசும்னா நாடியில் ஒன்றி ஒரே சக்தியாகவும், இறுதியாக இதுவும் இறைவனிடம் ஐக்யமாகும் குண்டலினி சக்தியாக, திருஅண்ணாமலை ஜோதியாக மாறும் என்பதும் சுவையூட்டும் ஒரு அத்வைத தத்துவமே.

துவித அதுவித சாளரம் திருக்கச்சூர்

இத்தகைய ஒரு வழிபாட்டிற்கு வழிகாட்டுவதே சென்னை சிங்கப்பெருமாள் கோயில் அருகே உள்ள திருக்கச்சூர் திருத்தலமாகும். பெருமாள் கச்சபம் என்ற ஆமை வடிவில் இறைவனை வழிபட்டு அருள்பெற்ற தலம். நீரிலும் நிலத்திலும் சமமாக வாழ்ந்து ஜீவிக்கக் கூடிய ஜீவன்களுள் ஆமை என்ற ஜீவ வடிவமும் ஒன்று. இதன் ஆதி வடிவமே பெருமாளின் கூர்ம அவதாரமாகும்.

பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைய முற்பட்டபோது மேருமலையை மத்தாக வைத்து இந்த அருஞ்செயலை நிறைவேற்ற அவர்கள் எண்ணம் கொண்டபோது ஒரு லட்சம் மைல்கள் உயரம் உடைய அவ்வளவு பிரம்மாண்டமான மத்தை நிலையாக வைத்து பாற்கடலைக் கடைவது எப்படி என்று தேவர்கள் பெருமாளை அணுகிக் கேட்டபோது தான் ஆமையாக பாற்கடலின் அடித்தளத்தில் அமர்ந்து கொள்ள அந்த ஆமை வடிவின் மேல் மேருமலையை வைத்துக் கடையும்படி ஆலோசனை அளித்தார்.

அவ்வாறு பாற்கடலின் அடித்தளத்திற்கு சென்று தான் அமர்ந்து கொள்வதற்கு ஒரு நிலையான இடத்தை தேர்ந்தெடுக்க நினைத்தபோது பெருமாளுக்கு எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டதாம். “அங்கே நின்றால் மேரு மலையின் பாரம் தாங்க முடியாமல் நீ அமிழ்ந்து விடுவாய்...”, என்ற தெளிவான தாயினும் சாலப் பரிந்து ஒரு குரலைக் கேட்டு பிரமித்து, ஆளரவம் இல்லாத பாற்கடலில் எங்கிருந்து அந்தக் குரல் வந்தது என்று சுற்றும் முற்றும் பார்த்தாராம்.

தொலைவில் எங்கோ ஒரு மூலையில் ஒரு பெரிய ஆமை நிற்பதைப் போன்ற இலோசான தோற்றம் ஒன்று தெரிந்ததாம். தன்னுடைய கண் பார்வையை கூர்மை ஆக்கி, ஆக்கி அந்த ஆமையை நோக்கி நெடுநேரம் நீந்திச் சென்ற பின்னரே அந்த ஆமையின் தெளிவான தோற்றம் தெரிந்ததாம். பெருமாளுக்கு ஆச்சரியம் எல்லை மீறியது...

காரணம் ...

அதுவரையில் ஆமை என்ற அவதாரமே தோன்றாத காலம் ... பெருமாள் மட்டும்தான் அவ்வாறு ஆமை என்ற ஜீவராசியின் வடிவம், இறை அவதாரம் எடுத்து பாற்கடலில் புகுந்தால் அங்கு தன்னைப் போன்ற ஒரு பெரிய ஆமையின் வடிவத்தைக் கண்டால் அவருக்கு எப்படி ஆச்சரியம் தோன்றாமல் இருக்கும்... மெதுவாக அந்த ஆமையின் அருகாமைக்குச் சென்றபோது பெருமாளுக்குப் புரிந்து விட்டது, இவர் நாம் நினைப்பதுபோன்ற ஒரு சாதாரண ஆமை அல்ல என்று...உடனே அந்த பெரிய ஆமையின் திருவடிகளில் பெருமாள் என்ற சிறிய ஆமை வீழ்ந்து வணங்கியதாம்.

பதினாறுகால் மண்டபலம்
திருக்கச்சூர்

“சுவாமி, தாங்கள் யார் என்றே தெரியவில்லையே...?” என்று பெருமாள் கூறியவுடன் அந்தப் பெரிய ஆமையும் நகைத்து, “பெருமாளே, தாங்கள் கூர்ம அவதாரம் எடுத்து ஆமை வடிவில் இங்கு தோன்றப் போவதாக பல யுகங்களுக்கு முன்னரே எம்பெருமான் அடியேனுக்குத் தெரிவித்திருந்தார். அதன்படி அடியேனும் பல யுகங்கள் இந்த பாற்கடல் முழுவதையும் நீந்தி, அலசி ஆராய்ந்து ஒரு சரியான இடத்தைத் தேர்வு செய்து வைத்திருக்கிறேன், அந்த இடத்தில் ஆமை வடிவில் நான்கு கால்களையும் திரமாக வைத்து நீங்கள் நின்று கொண்டால் மேருமலையின் பளுவை உங்களால் தாங்க முடியும்...”, என்று தெரிவித்தாராம்.

இவ்வாறு தொடர்ந்தது பாற்கடல் கடையும் பரம வைபவம்... ...
அமிர்தம் பெற்றவுடன் அதைத் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மோகினி அவதாரம் மூலம் அளித்த பெருமாள் தான் கூர்ம அவதாரத்தின் மூலம் அடைந்த அமிர்த சக்திகளை எல்லாம் பல லோகங்களுக்கும் தாரை வார்த்து அளித்தார். அதில் முதன்மையான தலம் பூலோகத்தில் உள்ள திருக்கச்சூர் என்ற புனிதத் தலமாகும். திருக்கச்சூர் திருத்தலத்தில் அமைந்துள்ள துவித அதுவித சாளரமும் கூர்ம தீர்த்தமும் 16 கால் கூர்ம மண்டபமும் அமிர்த சக்திகளை அனைத்து உயிர்களும் பெறும் வகையில் அமைந்துள்ளன என்பதே திருக்கச்சூர் தலத்தின் பெருமைகளுள் ஒன்றாகும்.

திருக்கச்சூர் திருத்தலத்தில் மூலவர் ஸ்ரீகச்சபேஸ்வரருக்கும் நந்தி மூர்த்திக்கும் இடையே அமைந்துள்ள சாளரமே துவித அதுவித சாளரம் என்பதாகும். சாதாரணமாக பார்ப்பதற்கு ஒரே கல்லில் அமைந்துள்ள சாளர அமைப்புபோல் இது தோன்றினாலும் இதில் அமைந்துள்ள தத்துவங்களை யுகக் கணக்கில் அமர்ந்து நோக்கினாலும் மனித அறிவிற்கு அப்பாற்பட்டது என்பதே இந்த காலம் கடந்த தத்துவ அமைப்பாகும்.

ஸ்ரீஅஞ்சனாட்சி சமேத ஸ்ரீகச்சபேஸ்வரர் திருக்கச்சூர்

இந்த சாளரத்தை கூர்ந்து நோக்கினால் இவற்றில் எவை ஒளியை அனுமதிப்பவை, எவை ஒளியை தடுப்பவை என்ற பாகுபாட்டையே அறிய முடியாது. நீங்கள் நந்தி மூர்த்தியை வணங்கி விட்டு பிரதட்சிணமாக வலம் வந்து மீண்டும் நந்தி மூர்த்தியை அடைந்தால் இந்த சாளரங்கள் சில ஒளியை பிரதிபலிக்கும், சில ஒளியை உள்ளே அனுமதிக்கும். நீங்கள் மீண்டும் வலம் வந்து நோக்கினால் இவ்வாறு ஒளியை அனுமதிக்கும் சாளரங்கள் மீண்டும் அதிகப்படியான ஒளியை அனுமதிப்பதாகத் தோன்றும்.

ஸ்ரீநடராஜப் பெருமான்
திருக்கச்சூர்

இவ்வாறு மீண்டும் மீண்டும் நீங்கள் வலம் வந்து வணங்கிக் கொண்டு, வழிபட்டுக் கொண்டிருந்தால் இந்த சாளரங்கள் வழியே பிரகாசிக்கும் ஒளியின் தன்மை மாறுபாடு அடைந்தவாறே இருக்கும். இறுதியில் இந்த சாளரத்தில் எது ஒளி சாளரம், எது இருள் சாளரம் என்ற பாகுபாடே இருக்காது. ஒளியும் இருளும் ஒன்றாய் இணைந்து விடும் அற்புதத்தை கண் கூடாகக் கண்டு இரசிக்கலாம், பிரமிப்படையலாம். ஆனால், இந்த அற்புதத்தை அனுபவிக்க எத்தனை நிமிடங்கள், நாட்கள், வருடங்கள் ஆகும் என்பதை சற்குரு ஒருவரே கூற முடியும்.

இருப்பினும் இந்த சாளரங்களில் ஏற்படும் ஒளி மாற்றத்தைக் கொண்டு தற்போதைக்கு உங்கள் சற்குருவின் மேல் உள்ள நம்பிக்கை ஆழமாகப் பிரகாசித்தால் அதுவே எத்தனையோ பிறவிகளை வேரறுத்து விடுமே? இதுதான் துவிதம் அத்வைதமாக பிரகாசிக்கும் சாளரத்தின் மகிமை. இந்த அத்வைத ஞானத்தைப் பெற்றவர்கள் ஸ்ரீகச்சபேஸ்வரர் இறைவனை கோயிலினுள் சென்று தரிசிக்கும்போது இறை தரிசனம் என்றால் என்ன என்பதை முழுமையாக உணர முடியும்.

இத்தகைய அவகாசம் இல்லாதவர்கள் நந்தீஸ்வர மூர்த்தியின் முன் தங்கள் பிரார்த்தனையை வைத்து விட்டு இறைவன் ஸ்ரீகச்சபேஸ்வரரை வணங்கிச் செல்வதால் ஏதாவது ஒரு பிறவியில் அவர்கள் பிரார்த்தனை தொடர்ந்து வந்து அவர்களை உரிய நேரத்தில் இறை மார்கத்தில் செலுத்தும் என்பதும் இத்தல மகிமையாகும்.

திருக்கச்சூர் சிவாலயத்தில் இறைவன் ஸ்ரீகச்சபேஸ்வரர் கிழக்கு நோக்கியும் அம்பிகை ஸ்ரீஅஞ்சனாட்சி அம்மன் தெற்கு நோக்கியும் அருளாட்சி செய்வர். பக்தர்கள் மேல் உள்ள பெருங்கருணையால் இந்த N2023 ஆண்டில் இறைவனும் இறைவியும் திருமணக் கோலத்தில் அருகருகே அமர்ந்து அருளாட்சி செய்வது என்பது அரிதிலும் அரிய அருந்தவப் பேறே. எனவே பக்தர்கள் காணக் கிடையா இந்த கவின்மிகு காட்சியைக் கண்டு பயனடையும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.

நம் தமிழ்த் திருநாட்டில் மட்டும் எத்தனையோ ஆயிரம் ஆயிரம் சுயம்புலிங்க மூர்த்திகள் எழுந்தருளி இருந்தாலும் ஒவ்வொரு மூர்த்தியின் தன்மைகளும் அனுகிரக சக்திகளும் பல விதங்களில் மாறுபட்டு தனித்தன்மை கொண்டு துலங்குகின்றன அல்லவா? அதுபோல் பதினாறு கால் மண்டபங்கள் கீழ்க்கண்ட பல திருத்தலங்களில் எழுந்தருளி இருந்தாலும் திருக்கச்சூர் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள பதினாறுகால் மண்டபம் இவைகளிலிருந்து வேறுபட்டு தனித்தன்மையுடன் பொலிவதே.

பதினாறுகால் மண்டபம்
திருக்கச்சூர்

1. வட்டமலை
2. தக்கோலம்
3. திருமால்பேறு
4. உய்யக்கொண்டான்மலை

இந்த 16 கால் மண்டபத்தின் அமைப்பே பலவிதமான வாஸ்து தோஷங்களை நீக்கவல்லதாகும். மண்டபத்தின் கிழக்கு பகுதியில் ஸ்ரீபிள்ளையார் மூர்த்தியும் வடக்கில் கூர்ம தீர்த்தமும் தலவிருட்சமான ஆலமரமும் அமைந்துள்ளன. ‘ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி...’ என்பது பழமொழி அல்லவா? பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்றுதானே நம் முன்னோர்களும் ஆசீர்வதிக்கிறார்கள். திருஆலம்பொழில், திருக்கச்சூர் போன்ற குறிப்பிட்ட தலங்களில் மட்டுமே ஆலமரம் தலவிருட்சமாக விளங்குகிறது என்றாலும் திருக்கச்சூர் ஆலமரமே செழித்து நிலவி இன்றும் பக்தர்களுக்கு அருள்வழங்கும் தன்மையில் நிலவுகின்றது.

16 கால் மண்டபம்
திருமால்பேறு

ஒரு பிரம்மாண்டமான யாக குண்டத்தை நினைவில் கொண்டு வந்து அதை திருக்கச்சூர் 16 கால் மண்டபத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இதன் அருமையை ஓரளவு புரிந்து கொள்ளலாம் என்பதே சித்தர்கள் கூட்டும் தெளிவு. மண்டபத்தின் வெளிப்புறமாக உள்ள 12 தூண்களையும் இணைக்க இது கூர்ம குண்டம் என்பதாகும். நடுவே உள்ள நான்கு தூண்களையும் இணைக்க இது வியாச குண்டமாகும். இந்த நான்கு தூண்களுக்கு இடையே அமர்ந்துதான் ஸ்ரீவியாச பகவான் வேத சக்திகளை கூர்ம மூர்த்தியான பெருமாளுக்கு அர்ப்பணிக்கிறார்.

வியாசாய விஷ்ணு ரூபாய என்று வியாச மகரிஷியைப் புகழ்வது எத்துணை பொருத்தமானது?

வேதம் என்பது அநாதியான ஒலி சக்தியே. இவை யுகங்கள் தோறும், ஆண்டுகள் தோறும், ஏன் சொல்லப் போனால் ஒவ்வொரு நொடியும் இவ்வுலகில் தோன்றி பரிணமிப்பவையே. நம் சற்குருவைப் போன்ற அவதார புருஷர்கள் இவ்வாறு ஒவ்வொரு நொடியும் பிரபஞ்சத்தில் தோன்றும் வேத சக்திகளை வேத சொரூபியான இறைவனிடம் இருந்து பெற்ற அதை பூலோக ஜீவன்களுக்கு அர்ப்பணிக்கும் திருப்பணியை மேற்கொள்கின்றனர்.

வியாசர் ஏன் வேதங்களை நான்கு பாகமாக, நான்கு வேதங்களாக ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களாகத் தொகுத்தார் என்பதற்கு நம் பகுத்தறிவை விஞ்சிய பல்வேறு காரணங்கள் இருந்தாலும் நம்மால் எளிதில் உணர்ந்து தெளிவடையக் கூடியது நிலம், நீர், நெருப்பு, காற்று என்ற பஞ்சபூதங்களுக்கு வேத சக்திகளை பரிமாறும் விதமாகவே அவருடைய பகுப்பு அமைந்தது என்பதே ஆகும். வியாச பகவான் இவ்வாறு கூர்ம அவதார மூர்த்திக்கு வேத சக்திகளை அர்ப்பணிக்கும்போது சுவாமி தான் திரமான நான்கு பாதங்களில் கூர்ம வடிவத்தில் நின்று எம்பெருமானுக்கு இந்த வேதசக்திகளை அபிஷேகமாக நிறைவேற்றுகிறார்.

“நானேயோ தவம் செய்தேன்
சிவாயநம எனப் பெற்றேன்”

ஒரு ஆமை தன்னுடைய சுவாசம் ஒன்றிற்கு நான்கு நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும் என்பதும் வேத சக்தியைப் பிரதிபலிக்கும் ஒரு செயலே. இந்த நான்கு நிமிட நேர சக்தியை வெவ்வேறு அளவுகளில் மாற்றி நான்கு வேதங்களையும் கிரகிக்கவல்லவைகளே ஆமைகள். நட்சத்திர ஆமைகள் என்பவை கூர்ம பெருமாள் மூர்த்தி ஸ்ரீகச்சபேஸ்வரர் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் வேத சக்திகளை சிவப் பிரசாதமாகப் பெற்று அதை தங்கள் சுவாசம் மூலமே நட்சத்திர மண்டலங்கள் அனைத்திற்கும் அனுப்பவல்லவையே. நட்சத்திரங்கள் நாம் நினைப்பதுபோல் வெறும் 27 மண்டலங்கள் மட்டும் கிடையாது, நட்சத்திர மண்டலங்கள் கோடி கோடியே.

ஆமைகள் கடலோரத்தில் மணலைத் தோண்டி அதில் நூற்றுக் கணக்கான முட்டைகளை இட்டு அந்த முட்டைகள் அனைத்தையும் தங்களின் நினைவு ஆற்றலினாலேயே குஞ்சு பொரிக்கும் அதிசயத்தைப் பலர் அறிந்திருக்கலாம். ஆமைகள் வேத சக்திகளையும் தங்கள் நினைவால் கிரகிக்க வல்லவை என்பவை உணர்ந்தோர் நம் சற்குருவைப் போன்ற உத்தம மகான்கள் மட்டுமே.

மார்கழி மாதத்தில் தோன்றும் வெண்பனி சக்திகளை நாம் ஓசோன் என்று அழைத்தாலும் உண்மையில் இவை திருஅண்ணாமலையில் தோன்றும் வேதசக்திகளின் செறிவே. அதனால்தான் மார்கழி மாதம் முழுவதும் திருத்தலங்களில் இறைவனை விடியற்காலையில் தரிசனம் செய்தாலே ஒரு வருடத்திற்கு தேவையான ஆரோக்ய சக்திகள் மனிதனுக்குக் கிட்டிவிடுகின்றன என்று பெரியோர்கள் தெளிவுபடுத்தினர். இந்த ஓசோன் செறிவை சிறுவனான நம் சற்குரு பெறும் முகமாகவே ஒரு மார்கழி மாத விடியற்காலையில் நம் சற்குருவை திருக்கச்சூர் திருத்தலத்திற்கு வருமாறு பணித்தார் நம் கோவணாண்டி.

இத்தகைய அரிதிலும் அரிய வேத சக்திகள் அனைத்தையும் கிரகிக்கும் எண்ணம் கொண்ட அடியார்கள் மார்கழி மாதத்தில் விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் திருக்கச்சூர் திருத்தலத்தில் கணபதி மூர்த்தியை வணங்கி கூர்ம தீர்த்தத்தில் நீராடி நெற்றிச் சின்னங்கள் அணிந்து, தலவிருட்சமான ஆலமரத்தை வலம் வந்து வணங்கி, பதினாறு கால் மண்டபத்தில் வெளிப்புறமாக உள்ள 12 கூர்ம குண்ட தூண்களுக்கும் தங்கள் கையால் அரைத்த சந்தனம் மஞ்சள் பொட்டிட்டு வணங்க வேண்டும்.

மண்டபத்தையும் ஆலமரத்தையும் எத்தனை முறை வேண்டுமானாலும் வலம் வந்து வணங்கி வேத சக்திகளைப் பெறலாம் என்றாலும் குறைந்தது மூன்று முறை வலம் வருதல் சிறப்புடையதாகும். வலம் வரும்போது “மறையுடையாய் தோலுடையாய்...” என்ற தேவாரப் பதிகத்தை ஓதுதல் சிறப்பு.

தியாகராஜன் நிழலில்
பூத்திருக்கும் தியாக
நட்சத்திரங்கள் திருக்கச்சூர்

மறை உடையாய் தோல் உடையாய் என்ற 12 அட்சரங்களே இந்த கூர்ம குண்டத்தில் எழும் வேத சக்திகளை கிரகிக்கவல்லவை என்றால் இந்தப் பதிகம் அனைத்தும் அருளும் வேத சக்திகளின் மகிமையை வாய் விட்டு விவரிக்க முடியுமா? இடர்களையும் பதிகத்தை ஓதினால் நான்கு வேதங்களையும் ஓதிய பலன் கிட்டும் என்ற நம் சற்குருவின் அரிய வார்த்தைகளில் பொதிந்துள்ள இரகசியம் எவ்வளவு பிரம்மாண்டம் என்பதைப் பார்த்தீர்களா?

வெளியில் உள்ள 12 கூர்ம குண்டத் தூண்களுக்கு பொட்டிட்டு அலங்கரித்த பின்னர் உள் பீடமான நான்கு வியாச குண்ட தூண்களுக்கும் சந்தன குங்குமப் பொட்டுக்கள் இட்டு அலங்கரிக்க வேண்டும். அதன் பின்னர் மண்டபத்தின் நடுப்பகுதியில் திருக்கச்சூர் இறை மூர்த்திகளை நோக்கி வணங்கி நன்றி செலுத்த வேண்டும்.

சிவாலயங்களில் பிரதோஷ நேரங்களில் இயற்றப்படும் சோம சூக்த வலங்களில் நிரவும் பலவிதமான குழப்பங்களைத் தீர்க்கும் விதமாக நம் சற்குரு சோம சூக்த சுந்தர வலம் என்ற குரு பிரசாதத்தை அளித்தார். இதிலும் பலவிதமான குழப்பங்கள் அடியார்கள் இடையே நிலவுவதால் இதைச் சரி செய்யும் விதமாக திருக்கச்சூர் போன்ற திருத்தலங்களில் நிலவும் 16 கால் மண்டபங்களை வழிபட்டு சோம சூக்த வலப் பலன்களை பெறும் முறையை அளித்துள்ளார். இதன்படி பிரதோஷ நேரமான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை 16 கால் மண்டபத்தில் கூர்ம குண்டமாக விளங்கும் 12 தூண்களையும், மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை வியாச குண்டமான நான்கு தூண்களையும் வலம் வந்து வணங்குவதால் சோம சூக்த வலப் பலன்களைப் பெறலாம் என்பதே தாயினும் சாலப் பரிந்து ஊட்டும் குரு கருணையாகும்.

“பல்லாண்டுகள் கஷ்டப்பட்டு உழைத்து சாமவேதம் ஓதும் பலனை ஒரு கப் டீயில் அளித்து விட எங்களால் முடியும்...,” என்பார் நம் சற்குரு. உதாரணமாக, ஆஸ்ரமத்தை விட்டு வெளியவே வராத மாதா அமிர்தானந்தாவின் சீடர்கள் பிரதோஷ வழிபாட்டுப் பலனை இழந்து விடுவார்களா என்ன? அதே போல ஒரு அரசியல் தலைவரையோ, நடிகையையோ சற்குருவாக ஏற்றும் ஒருவர் இறை தரிசனத்தைப் பெறலாம் என்பார் சற்குரு. தேவை அந்த 16 வயது நடிகையை, இளம் பெண் என்று பார்க்காது தன்னைக் கரையேற்ற வந்திருக்கும் உத்தம சற்குரு என்று சீடன் கொள்ளும் நம்பிக்கை ஒன்றே.

நவகிரக ராசி மண்டலம்
திருக்கச்சூர்

திருத்தலப் பிரகாரங்களில் எழுந்தருளி உள்ள நவகிரகங்கள் அல்லாது பிரம்மாந்திரம் என்ற மேற்கூரைகளிலும், வானத்திலும், தலவிருட்சங்களிலும் எழுந்தருளிய நவகிரக தேவதைகள் கோடி கோடியே. இவ்வகையில் அபூர்வமாக திருக்கச்சூர் திருத்தலத்தில் தூண் ஒன்றில் இராசி மண்டலம் எழுந்தருளி இருக்கும் அதிசயத்தைக் காணலாம். இது சம்பந்தமான ஒரு சுவையான நிகழ்ச்சி. சனி பகவான் பிள்ளையார் மூர்த்தியைப் பிடிப்பதற்காக, பீடிக்க பல முறை முயன்றும் தோல்வி அடைந்த வைபவங்கள் பலவற்றையும் நீங்கள் அறிவீர்கள்.

ஒரு முறை அவ்வாறு சனி பகவான் வந்தபோது பிள்ளையார் அவரிடம், “நீயும் பல தடவை வந்து முயன்று தோல்வி அடைகிறாயே ... அதனால் நாளை கட்டாயம் வருவதாக இங்கு எதிரில் இருக்கும் சுவற்றில் எழுதி வைத்து விட்டுப் போ, அதைக் கண்டு நானும் உனக்கு துணை புரிய தயாராக இருப்பேன்...”, என்று கூறவே சனி பகவானும் பிள்ளையார் கூறியபடி சுவற்றில், “நாளை தங்களைத் தரிசிக்க வருகிறேன்...”, என்று எழுதிவிட்டுச் சென்று விட்டார்.

ஸ்ரீபிள்ளையார் ஜனன ஜாதகம்

மறுநாள் பிள்ளையாரைத் தரிசிக்க வந்த சனி பகவானிடம் பிள்ளையார் சுவற்றில் எழுதிய வாசகத்தைக் காட்டி, “நாளை வருவதாக நீயேதான் வாக்குறுதி அளித்து இருக்கிறாய், இன்று என்ன செய்ய முடியும்?” என்ற கேட்கவே சனி பகவானும் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்.

இவ்வாறு சனி பகவானின் பீடிப்பு வைபவம் தொடர்ந்தது... இறுதியில் ஒரு நாள் பிள்ளையார் மூர்த்தி எண்ணெய் குளியலுக்கு தயாராக இருந்தார்... இருந்தாலும் சனி பகவானைப் பார்த்து, “சரி சரி, உன்னை எத்தனை நாள்தான் அலைய விடுவது... எண்ணெய் தேய்க்காத இடம் என்னுடைய கால் பாதம் ஒன்றுதான்... அதைப் பிடித்து உன்னுடைய பிரார்த்தனையை பூர்த்தி செய்து கொள்...”, என்றாராம். சனி பகவானும் மிகவும் உவகையுடன் பிள்ளையாரின் திருப்பாதங்களைப் பிடித்து, பீடித்து தன் நீண்ட நாள் அவாவைப் பூர்த்தி செய்து கொண்டாராம்.

இவ்வாறு ஒரு சில நொடிகளே நிகழ்ந்தாலும் இந்த சனி பீடிப்பு வைபவம் பூலோகக் கணக்கில் பல ஆண்டுகள் தொடரும் என்பதால் நம் முன்னோர்கள் இந்த சனி பீடிப்பு வைபவத்தை இராசி மண்டல நவகிரக சாயையாக திருக்கச்சூர் திருத்தலத்தில் பதித்து வைத்துள்ளனர். இந்த ராசி மண்டல தேவதைகளுக்கு தங்கள் கையால் அரைத்த மஞ்சள் காப்பு இட்டு, சந்தனப் பொட்டிட்டு வணங்குவதால் எண்ணெய் தேய்த்து குளிக்கும் நிலையில் உள்ள ஒருவரை தரிசனம் செய்வதால் ஏற்படும் கிரக தோஷங்கள், சகுன தோஷங்கள் அண்டாமல் காத்துக் கொள்ளலாம்.

அன்று பிள்ளையார் மூர்த்தி அளித்த அனுகிரக சக்திகளை தம் அடியார்களுக்கு அளிக்கவே ஜன்ம லக்னத்தில் சனி பகவான் எழுந்தருளிய ஜனன முகூர்த்தத்தில் தோன்றிய நம் சற்குரு தம் பாதங்களில் எண்ணெய் தடவ அடியார்கள் யாரையும் அனுமதிப்பதில்லை என்ற இரகசியத்தை உணர்ந்து கொள்ளலாம். தாயின் கருணையை மிஞ்சிய இந்த கருணைக்கு ஈடு இணைதான் உண்டோ, சொல்லுங்கள்.

பிள்ளையாரின் ஜனன ஜாதகத்தில் லக்னத்திலிருந்து ஏழாம் இடத்தில் சனி பகவான் எழுந்தருளி இருப்பதையும் நம் சற்குருவின் ஜாதகத்தில் லக்னத்தில் சனி பகவான் எழுந்தருளி இருப்பதையும் ஆத்ம விசாரம் செய்து பார்த்தால் இந்த உண்மை பளிச்சென விளங்கும்.

பாத பத்ம பங்கஜம்

திருக்கச்சூர் மருந்துமலையை கிரிவலமாக வலம் வந்து வணங்குதல் என்பது கிடைத்தற்கரிய ஒரு பாக்யமே. வேறு எந்த திருத்தலத்திலும் கிட்டாத பாத பத்ம பங்கஜம் என்ற அனுகிரக சக்திகளை அருட்பிரசாதமாக அருளவல்லதே திருக்கச்சூர் கிரிவலமாகும். சுமார் 3 கிமீ தூரமே வியாபிக்கும் இந்த கிரிவலம் அருளும் பலன்கள் கோடி கோடியே.

திருப்பதி மலையில் படி ஏறிச் சென்றே வெங்கடாஜலபதியை வணங்க வேண்டும் என்று நம் சற்குரு உட்பட அனைத்து குருமார்களும் வலியுறுத்துகின்றளனர். அது மட்டுமல்லாமல் தங்கள் வாழ்க்கை நிகழ்ச்சிகள் மூலமாகவும் இந்த உண்மையை அனைவருக்கும் வெளிப்படுத்தியும் வந்தனர். காரணம் திருமலையில் படியேறிச் செல்லும்போது அடியார்களின் ஒரு பாத அடி கூட தரையில், படியில் படியாது என்பதே இத்தலத்தில் நம்மை பிரமிக்க வைக்கும் உண்மையாகும். கூட்டுவதற்காக, பெருக்குவதற்காக செல்லும் தொழிலாளர்களின் பாதங்கள் கூட திருமலையில் உள்ள படிகளில் படிவதில்லை.

திருக்கச்சூர்

அடியார்கள் வைக்கும் ஒவ்வொரு பாத அடியையும் தங்கள் திருக்கரங்களால் தாங்கி அந்த அடியார் அடுத்த படிக்கு செல்ல அவர்களை ஆயத்தப்படுத்துகிறார்கள் ஒவ்வொரு படியிலும் தவம் கிடக்கும் அடியார்கள். ‘படியாய்க் கிடந்து நின் பவள வாய் காண்பேனா...”, என்று ஒரே ஒரு அடியார் பாடியதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். இது ஒவ்வொரு அடியாரின் உள்ளக் கிடக்கை ஆகும். இந்த விதியை மீறி திருமலைப் படிகளில் தம் பாதங்களைப் பதித்துச் சென்ற ஒரு பெருந்தகை ராமானுஜ ஆச்சாரியார் மட்டுமே.

காரணம் என்ன ?

ராமானுஜரின் சீரிய பாதங்களைத் தாங்கும் பெருமை பெற்ற அடியார் யாருமே இல்லை என்பதே ராமானுஜ ஆச்சாரியாரின் மகத்துவங்களில் ஒன்றாகும். இது போலவே திருக்கச்சூர் மலையை கிரிவலமாக வந்து வணங்குகையில் அடியார்களின் ஒவ்வொரு பாத அடியையும் ஒரு அடியார் தாங்கி அந்த அடியாரை அடுத்த அடி வைக்க தயார் செய்கிறார். இந்த அபூர்வ பாத பத்ம பங்கஜம் என்ற அனுகிரக சக்திகளை அடியார்கள் பெறுவதற்காகவே அடியார்கள் தங்கள் ஒவ்வொரு அடியையும் மிக மெதுவாக வைத்துச் சென்று, தரையில் நன்றாக பதித்து, குறைந்தது 3 முதல் 4 மணி நேரத்திற்கு திருக்கச்சூர் கிரிவலம் நிரவும் வண்ணம் அமைத்துக் கொள்ளவும்.

பத்மம் என்றாலும் பங்கஜம் என்றாலும் தாமரையைக் குறிப்பதுதானே ? அப்படியானால் நம் சற்குரு ஏன் பத்ம பங்கஜம் என்ற வார்த்தையை பிரயோகம் செய்கிறார். இதுவே ஆழ்ந்த ஆத்ம விசாரத்தில் நாம் பெறக் கூடிய ஒரு நோய் நிவாரண சக்தியாகும். பங்கஜம் என்றால் தாமரை மலரைப் பறித்தவுடன் நீர்த் துளிகளுடன் இருப்பதைக் குறிப்பது, இந்த நீர்த் துளிகள் உலர்ந்து விட்டால் மிஞ்சுவது பத்மம் என்ற தாமரை. இங்கு நீர்த் துளி சக்திகள் என்பவை தொடர்ந்து நாம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதால் கிட்டும் பித்ரு அனுகிரக சக்திகளாகும். எனவே எந்த அளவிற்கு ஒருவர் தொடர்ந்து பித்ரு வழிபாடுகளை தர்ப்பணம், அன்னதானம் போன்ற நற்காரியங்களுடன் நிறைவேற்றி வருகிறாரோ அவர்களுக்கு “பங்கஜ” சக்திகள் நிறைந்திருக்கும்.

திருக்கச்சூர்

அத்தகையோரை நோய்கள் நாடாது என்பதும் அவர்கள் பார்வை பட்டாலே பலவிதமான நோய்கள் குணமாகும் என்பதும் உண்மையே.

திருக்கச்சூர் திருத்தலத்தை நாம் மருந்துமலை, மருந்துவாழ்மலை என்று அழைக்கிறோம். மருந்து வாழுமா என்ற சந்தேகம் உங்களுக்குத் தோன்றலாம். நிச்சயமாக வாழக் கூடியவையே மருந்து தேவதைகள், ஔஷத தேவதைகள், நோய் நிவாரண தேவதைகள், சஞ்சீவினி தேவதைகள் போன்றவை. ஒரு துளசி இலை காய்ந்து சருகாய்ப் போனாலும், ஒரு வில்வ பத்திரம் பூச்சி அரித்து ஓட்டைகள் நிறைந்து காணப்பட்டாலும் அந்த மூலிகைகளில் உள்ள நோய் நிவாரண சக்திகள் சற்றும் குறையாது. ஒவ்வொரு மூலிகை தளத்திலும் நோய் நிவாரண சக்திகள் என்று மட்டும் அல்லாது லட்சுமி கடாட்ச சக்திகள், ஆயுள்விருத்திகர சக்திகள், தீய சக்திகளை மாய்க்கும் எதிரிணி அம்சங்கள் போன்ற பலவும் நிறைந்திருக்கும்.

இத்தகைய நோய் நிவாரண அம்சங்களை விருத்தி செய்து கொள்ள மட்டுமே பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து மூலிகை தேவதைகளும் தேய்பிறை அஷ்டமி திதி அன்று மருந்துவாழ் மலையை வலம் வந்து தங்கள் நோய் நிவாரண சக்தி அம்சங்களை புனருத்தாரணம் செய்து கொள்கின்றனர். எனவே எந்நாளில் எந்நேரத்திலும் திருக்கச்சூர் மருந்து மலையை கிரிவலம் வந்து பயன்பெறலாம் என்றாலும் தேய்பிறை அஷ்டமி திதி கிரிவல வழிபாடுகள் சிறப்பான பலன்களைத் தரவல்லவை. இந்நாளில் துளசி கஷாயம், வில்வாதிரிஷ்டம், அசோகாரிஷ்டம் போன்ற எந்த ஆயுர்வேத டானிக்குகளுடன் வேண்டுமானலும் கிரிவலம் வந்து அவற்றை பக்தர்களுக்கு தானமாக அளித்தல் சிறப்பாகும்.

திருக்கச்சூர் மலையை கிரிவலம் வரும்போது மெதுவாக, மிக மெதுவாக வரும்படி நம் சற்குரு அருள்கின்றார். ஆனால், சற்குருவுடன் திருஅண்ணாமலையை கிரிவலம் வரும்போது கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்தில் கூட கிரிவலத்தை முடித்து விடுவார் என்பது பல அடியார்களின் அனுபவம். மாறுபட்ட இரு கிரிவல முறைகளாக இவை தோன்றுகின்றனவே என்பது ஒரு அடியாரின் ஐயப்பாடு. இது அந்த அடியாருக்கு மட்டுமல்ல, பல அடியார்கள் மனதில் தோன்றும் குழப்பமே. உண்மையை உணர்ந்து கொண்டால் குழப்பத்திற்கு இடமே இல்லை. கிரிவலம் என்று மட்டும் அல்ல, சாதாரணமாக உணவருந்துவதாக இருந்தாலும், மனைவியுடன் கூடுவதாக இருந்தாலும், அர்ச்சனை ஆராதனை போன்ற வழிபாடுகள் இயற்றுவதாக இருந்தாலும் அந்த செயலில் இலயித்து, மூழ்கிதான் செயலாற்ற வேண்டும்.

திருக்கச்சூர்

இதை முழுமையாக நிறைவேற்றக் கூடியவர்கள் சித்தர்கள், மகான்கள் மட்டுமே. நேற்று என்ன உணவு சாப்பிட்டோம் என்பதே பலருக்கும் தெரியாது, இந்நிலையில் போன வாரம், போன மாதம் இந்நேரத்தில் என்ன உணவருந்தினார்கள் என்று எவராலும் கூற முடியுமா? “உண்ட உணவே நினைவில்லாத போது ஈச நினைவு எப்படி உன் உள்ளத்தில் பதியும்?” என்று கேட்பார் நம் சற்குரு. இவ்வாறு நம்முடைய ஒவ்வொரு செயலும் நம் உடலில், மனதில், உள்ளத்தில் பதிந்தால்தான் ‘பாக்கி’ என்ற ஒன்றே உருவாகாது, மீண்டும் பிறவிச் சுழலில் சிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆரம்பத்தில் நம் சற்குரு திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்தபோது ஒரு பத்தடி தூரத்தைக் கடக்கக் கூட ஒரு மணி நேரம் ஆகுமாம், அவ்வளவு தரிசனப் பலன்களை அள்ளிக் கொட்டுவாராம். “இவற்றை எல்லாம் மற்றவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று கூட அடியேன் எதிர்பார்க்கவில்லை, இந்தப் பலன்களை எல்லாம் தன் குடும்பத்திற்கும், உற்றம் சுற்றத்திற்கும் அறிவித்து பயன்பெற்றால் கூட கோவணாண்டியின் அரிய பொக்கிஷங்கள் மக்களுக்குப் பயன்பட்டன என்று நினைத்து அடியேன் மகிழ்ந்திருப்பேன்... ஆனால், இவற்றை யாருமே பயன்படுத்தியாகத் தெரியவில்லை. அதனால்தான் இப்போதெல்லாம் மணிக் கணக்கில் கிரிவலத்திற்கு அடியார்களை கூட்டிச் செல்வதைத் தவிர்த்து விட்டேன்...”, என்றார் நம் சற்குரு.

சற்குருவின் இந்த மன வேதனைக்கும், சித்தப் பொக்கிஷங்களை நிரந்தரமாய் இழந்ததற்கும் நாம்தானே காரணம்? நடந்தது நடந்தவையாக இருக்கட்டும், இனியேனும் திருஅண்ணாமலை அல்லது பழநி, ஐயர்மலை, திருப்போரூர் போன்ற எந்த தலத்தையும் நிறைமாத கர்ப்பிணியானவள் அடுத்த அடி எடுத்து வைக்கலாமா வேண்டாமா என்று எண்ணுவதைப் போல் மெதுவாக கிரிவலம் வந்து இறைவனை வணங்குவதால், அடியார்கள் எந்த லௌகீக ஆன்மீக கேள்விகளுக்கும் விடை பெறுவர் என்பது உறுதி. ஆனால், ஒரு கிரிவலத்தில் ஒரே ஒரு கேள்வியை மட்டும் நினைத்து கிரிவலம் வர வேண்டும் என்பதும், ஒரு வேளை அந்த வலத்தில் விடை கிடைக்காவிட்டால், அல்லது கிடைத்த பதில் புரியாவிட்டால் அவகாசம் கிட்டும்போது மீண்டும் கிரிவலம் வர வேண்டும் என்பது முக்கியம்.

திருப்பதி வெங்கடாசலபதியின் தரிசன நேரம் ஒரு நிமிடத்திற்கு அமைந்தாலும், ஒரு மணி நேரம் தொடர்ந்தாலும் அவரவர் பக்தி நிலை, தியாகத்தைப் பொறுத்து தரிசனப் பலன்களை ஏழு பிறவிகளுக்கு, ஏழேழ் பிறவிகளுக்கும் சுவாமி நீட்டிக்கவல்லவர் என்பதைப் போல அடியார்கள் நம் சற்குருவின் மேல் உள்ள நம்பிக்கையைப் பொறுத்து ஒரே கிரிவலத்தில் பல்லாண்டுகள், பல பிறவிகளிலும் கிட்டக் கூடிய ஆன்மீக சாதனைகளின் பலன்களைப் பெறலாம்.

கச்சபேச கவசம்

தற்போது பல கடற்கரைகளிலும் இறந்த ஆமை ஓடுகள் நூற்றுக்கணக்கில் ஒதுங்குவதாக கேள்விப்படுகிறோம். இந்த ஆமைகள் இயற்கையாக இறந்து கடலோரத்தில் ஒதுங்குகின்றன என்று நாம் நினைக்கலாம். உண்மையில் இவை கடலில் சேரும் அதிகக் கழிவுகளினால் ஏற்படும் ஒரு இயற்கைச் சீற்றமே ஆகும். மக்கள் சமுதாயத்தில் தற்போது முந்தைய யுகங்களை விட அதிகக் கழிவுகள் கடலில் சேர்கின்றன. பூமியின் பெரும்பகுதி நீரால் சூழப்பட்டு இருப்பதால் இத்தகைய கழிவுகளால் ஆமைகள் மட்டுமல்ல இன்னும் மனிதர்கள் அறியா திமிங்கலம் போன்ற ஆழ்கடலில் வசிக்கும் பல அபூர்வ ஜீவன்களும் இத்தகைய மாசுகளால், கழிவுகளால் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன. இதனால் காற்று மண்டலத்தில் நிலவும் ஓசோன் சக்திகளும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன. பெருகி வரும் காரணம் காணா பல நோய்களுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமே.

பரமபிதா ஆசனம்

இத்தகைய கடல் வாழ் ஜீவன்கள் அடையும் வேதனைகளுக்கு மனித சமுதாயமே ஒட்டு மொத்தமாக பதில் சொல்ல வேண்டிய நிலை வரும் என்றாலும் நம் சற்குருவின் சீடர்களான நாம் நம்முடைய பொறுப்பை ஓரளவாவது நிறைவேற்ற உதவி செய்வதே நாம் திருக்கச்சூர் போன்ற திருத்தலங்களில் நிகழ்த்தும் வழிபாடுகளாகும். இந்த ஆமைகளில் எத்தனை ஆமைகள் இயற்கையாக இறந்தன, எத்தனை ஆமைகள் மின்விசைப் படகுகள், கப்பல்களில் பயனாகும் பெட்ரோல், டீசல் போன்ற கழிவுகளால் அல்லது தரையில் வாழும் மக்களால் ஏற்படுத்தப்பட்ட கழிவுகளால் பாதிக்கப்பட்டன என்று தரம் பிரிக்க முடியாது அல்லவா?

அதனால் நாம் கடற்கரைகளில் ஒதுங்கும் ஆமைகள் அனைத்தும் இயற்கையாக மரணம் அடைந்த ஆமைகளே என்று எடுத்துக் கொள்வோம். பொதுவாக ஆமைகள் 1000, 10000 ஆண்டுகள் கூட ஆரோக்யமாக வாழக் கூடியவையே. ஆனால், நச்சப் பொருட்கள் இடையே அவை வாழும் நிலை அமையும்போது அந்த ஆமைகளின் ஆயுட்காலம் 100, 500 ஆண்டுகள் என்ற அளவிற்குக் கூட குறைந்து விடலாம்.

ஆமைகள் நாம் நினைப்பதுபோல் வெறுமனே கடலில் நீந்துவதோடு அவைகளின் பணி முடிவடைந்து விடுவதில்லை. எப்படி ஒரு கொசுவானது தன்னுடைய குறுகிய ஆயுள் காலத்தில் 20000 மனிதர்களைக் கடிக்கும் பணியை செவ்வனே நிறைவேற்றுகிறதோ அது போல ஆமைகளும் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஒரு லட்சம், ஐந்து லட்சம் என்ற எண்ணிக்கையில் நட்சத்திரங்களிலிருந்து கச்சூரணம் என்ற ஓளியை ஈர்த்து அதை பூமி வாழ் மக்களுக்கும் இதர ஜீவன்களின் நல்வாழ்விற்காகவும் ஆரோக்ய கிரணங்களாக அர்ப்பணிக்கின்றன. எனவே ஒரு ஆமையின் நிர்ணயிக்கப்பட்ட ஆயுள் 5000 வருடத்திலிருந்து 500, 100 ஆண்டுகள் என குறையும்போது அந்த அளவிற்கு மனித சமுதாயம் மட்டும் அல்லாது இதர ஜீவன்களும் ஆரோக்யத்தை பெருமளவில் இழந்து விடுகின்றன அல்லவா?

கருடாசனம்

இதிலிருந்து ஓரளவு நிவாரணம் பெறவே நம் சற்குருவால் ஒரு வழிபாடு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி கரையில் ஒதுங்கும் ஆமை ஓடுகளைச் சேகரித்து, நம்மால் இயன்ற அளவு அதை தேங்காய் நாரால் தேய்த்து, தேய்த்து தூய்மைப்படுத்த வேண்டும். இவ்வாறு நன்றாக தூய்மைப்படுத்தப்பட்ட ஆமை ஓட்டை உச்சி வெயிலில் குறைந்து மூன்று நாட்கள் காய வைக்க வேண்டும். பின்னர் இந்த ஆமை ஓட்டை திரூக்கச்சூர் ஸ்ரீகச்சபேஸ்வரர் ஆலயம், காஞ்சிபுரம் ஸ்ரீகச்சபேஸ்வரர் ஆலயம், தசாவதாரங்கள் அமைந்துள்ள துறையூர் பெருமாள்லை போன்ற திருத்தலங்களில் அஸ்வினி, ஆயில்யம் போன்ற நட்சத்திர நாட்களில் வைத்து வழிபட வேண்டும்.

பின்னர் ஏதாவது ஒரு செவ்வாய்க் கிழமை இத்தகைய ஓடுகளில் இரண்டுடன் திருஅண்ணாமலையை கிரிவலம் வரவேண்டும். கிரிவலம் நிறைவில் இந்த இரண்டு ஓடுகளில் ஒன்றில் மாதுளம் பழங்களை 12க்குக் குறையாமல் வைத்து அதை ஒரு கிரிவல அடியாரிடம் அளித்து விட வேண்டும். அவ்வாறு தானம் பெறும் அடியார் அந்த ஓட்டை வைத்து இறை மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றுதாக இருந்தால் அவரிடம் ஒரு ஓட்டை தானமாக அளித்து விடலாம். அது அவருக்கு இயலாது என்றால் வெறும் மாதுளம் பழங்களை மட்டும் அவருக்கு அளித்து விடலாம். எஞ்சிய ஒரு ஆமை ஓடோ அல்லது இரு ஓடுகளோ இப்போது கச்சூரணம் என்ற கச்சபேச கவசங்களாகத் திகழும்.

இந்த கச்சூரண ஓடுகளை அவரவர் இல்லத்திற்கு எடுத்து வந்து அதில் விபூதி, குங்குமம் போன்றவற்றை வைத்திருப்பதோ அல்லது இவைகளில் சிவலிங்கம், பிள்ளையார் போன்ற மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றுவதோ சிறப்புடையதாகும். இத்தகைய கச்சூரண ஓடுகளில் இருந்து பெறப்படும் விபூதி, குங்குமம் போன்ற பிரசாதங்களால் கிட்டும் நோய் நிவாரண சக்திகளுக்கு எல்லையே கிடையாது.

ஸ்ரீபாஸ்கரராய மகரிஷி திருவள்ளூர்

இத்தகைய கச்சூரண ஓடுகளால் கிட்டும் மற்றோர் பயன் நம்மை பிரமிக்க வைப்பதாகும். ஒவ்வொருவரும் ரோகினி, புனர்பூசம் போன்ற ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் பிறந்திருப்பர். தனது ஜன்ம நட்சத்திரத்தை அறியாதவர்களும் அநேகர் உண்டு. வானத்தில் கோடி கோடியாய் நட்சத்திரங்கள் பிரகாசிக்கையில் வெறும் 27 நட்சத்திரங்கள் மட்டும் நம் பிறப்புடன் தொடர்புடையதாக எப்படி இருக்க முடியும்? இந்த 27 நட்சத்திரங்கள் எப்படி 044. 0431 போன்ற STD code ஒரு ஊருடன் தொடர்பு கொண்டு அதில் பல தொலைபேசிகளை இணைக்கின்றதோ அது போல இந்த 27 ஜன்ம நட்த்திரங்கள் கோடி கோடியான மற்ற நட்சத்திரங்களை இணைப்பதாகும்.

எப்போது ஒரு பக்தர் தன் உண்மையான ஜன்ம நட்சத்திரத்தை அறிந்து கொள்கிறாரோ அதுவே ஆன்மீக சாம்ராஜ்யத்தை அடைய உதவும் முதல் படி என்று கூறலாம். இத்தகைய முதல் படியில் நாம் காலடி எடுத்து வைக்க உதவும் ஒரு சாதனமே கச்சூரணம் ஓட்டில் வைத்த விபூதியை தினமும் நெற்றியில் அணிந்து கொண்டு வாரம் ஒரு முறையாவது சனிக் கிழமை அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலான இரண்டு மணி நேரத்தில் அதாவது, சனி ஹோரையும் குரு ஹோரையும் நிரவும் நேரத்தில் குறைந்தது ஒரு மணி நேரமாவது இந்த பரமபிதா அல்லது கருடாசனத்தில் அமர்ந்து வானத்தை நோக்கி கண்ணுக்குத் தெரியும் நட்சத்திரங்களைப் பார்த்து தியானிக்கும் பயிற்சியாகும்.

பரமபிதாவான ஏசுநாதர் கெஸ்தமணி தோட்டத்தில் இந்த ஆசனத்தில் அமர்ந்து கோடிக் கணக்கான உயிர்களுக்கு இத்தகைய நட்சத்திர மகிமைகளைப் பெற்றுத் தந்தார் என்பதே நம் சற்குரு தெரிவிக்கும் இரகசியமாகும். இவ்வாறு தன்னுடைய ஆயுட்காலத்தில் ஒரு கோடி ‘ஜன்ம நட்சத்திர மகிமைகளை’ உரிய அடியார்களுக்கு பெற்றுத் தந்த பெருமை பாஸ்கரராய மகரிஷியைச் சாரும்.

பாஸ்கர ராயர் இரண்டு மனைவிகளுடன் வாழ்ந்தார் என்று நினைத்து பலரும் அவரை அலட்சியக் கண்ணோட்டத்தில் காண்பர் என்றாலும் இந்த இரண்டு மனைவிகளே சாயா, ஸ்வர்ச்சலாம்பா என்ற இரண்டு நட்சத்திர சக்திகளை தங்கள் தியானம் மூலம் பாஸ்கரராய மகரிஷிக்கு அளித்து வந்தனர் என்ற உண்மையை உணர்ந்தோரை விரல் விட்டு எண்ணி விடலாம். எனவே மகான்கள் சரித்திரம் நம்மை பிரமிக்க வைக்கும் பெருமை உடையதே.

பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்!

ஒவ்வொரு வருடம் தை மாதப் பிறப்பன்றும் சூரிய பகவானின் மகர ராசிப் பிரவேசத்தை நாம் பொங்கல் திருநாளாகக் கொண்டாடி மகிழ்கின்றோம். சுபகிருது ஆண்டில் அமையும் பொங்கல் ஒரு தனிச் சிறப்பைக் கொண்டதாகும். இந்தப் பொங்கல் திருநாளைக் கொண்டாடும் முகமாக நம் சற்குரு அருள்வதாவது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மகரிஷி தைப் பொங்கல் திருநாளை தலைமை தாங்கி நடத்துவர். இவ்வருடம் பொங்கல் திருநாளை ஸ்ரீதிரிநாமகண்ட மகரிஷியே தலைமை தாங்கி நடத்துவதால் மகர ராசியில் சூரிய பகவான் பிரவேசிக்கும் ஏழு நிமிடங்களுக்கு சூரிய கதிர்களில் ஏழு விதமான கிரண சக்திகள் உருவாகின்றன.

  ஜோதி   நாதம் இசை   தெய்வம் ரிஷி
  திஸ்ர ஜோதி   சங்கு   சூரிய நாராயணர்
  ரிகம ஜோதி   ஜால்ரா   திரிநாமகண்ட  மகரிஷி
  நாகுல  ஜோதி   கண்டா மணி   உத்தரகண்ட மகரிஷி
  மகர ஜோதி   வீணை   மகர ஜோதி ஐயப்பன்
  கபில ஜோதி   கஞ்சிரா   உத்தராயண தேவதை
  ணகர ஜோதி   புல்லாங்குழல்   சங்கராந்தி தேவதை
  டமரு ஜோதி   கிடார்   சூரிய பகவான்

இத்தகைய சூரிய கிரணங்களின் அனுகிரக சக்திகளை முழுமையாகப் பெறும் முகமாக சூரிய உதயத்திலிருந்து அதாவது ஜனவரி 15 ஞாயிற்றுக் கிழமை காலை சுமார் 6.40 மணி முதல் ஏழு நிமிடங்களுக்கு சங்கு நாதம் எழுப்பி அத்துடன் கண்டா மணி, வீணை போன்ற இசைகளைக் கூட்டி இந்த இசை வெள்ளத்தின் இடையே பொங்கலை பொங்கி “பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்” என்ற 16 அட்சர உத்தராயண துதியை ஓதி சங்கராந்தி தேவதைகளை வரவேற்கும் முறையாக, பொங்கல் திருநாள் வழிபாடாக நம் சற்குரு அருள்கின்றார்.

குளிரில் இதம்
துன்பத்திலும் இன்பம்
தாயின் அரவணைப்பு

நம் சற்குருவே ஸ்ரீதிரிநாம கண்ட மகரிஷியாக அருள்வதால் குசா சக்தி இல்லாத ஒரு வழிபாடு நம் சற்குருவால் அளிக்கப்படுமா? ஒரு யுகத்தில் சூரியனே வெளிவராத சமயத்தில் நம் சற்குருவே ஏழு நாட்களுக்கும் சூரிய ஒளியை தம் தவசக்தியால் அளித்து உலகைக் காத்தார் என்பது நீங்கள் அறிந்ததே. இவ்வாறு இந்த ஆண்டு திரிநாம கண்ட மகரிஷியின் அனுகிரகத்துடன் பொலிவதால் உத்தராயணம் தோன்றும் பொங்கல் திருநாளில் ஏழு நிமிடங்களுக்கு, அந்தந்த இடத்தின் கால நேரத்திற்கு உகந்த வண்ணம் ஏழு நிமிடங்களுக்கு திரிநாமகண்ட மகரிஷியின் முதல் எழுத்துக்களை கொண்ட ஏழு கிரணங்களை நிமிடத்திற்கு ஒரு கிரண சக்தியாக சூரிய பகவான் அளிக்கின்றார் என்பதே சூரிய பகவான் செலுத்தும் நன்றிக் கடனாகும்.

சூரிய பகவான் செலுத்தும் இந்த நன்றிக் கடனில் நாமும் சேர்ந்து கொள்வது என்பது எத்தகைய பேறு? இணைந்து வழிபடுவது என்பது எத்தகைய ஒரு பாக்கியம்? சித்திரை நட்சத்திரம் என்பது நட்சத்திரங்களில் குசா சக்தியுடன் பொலிவது, அஷ்டமி திதி திதிகளில் குசா சக்தியுடன் பொலிவது. இந்த இரண்டும் இணைவதே பொங்கல் திருநாளாகும். ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் இணையும் ஏழு நிமிட முகூர்த்த சக்திகள் இங்கு அளிக்கப்பட்டிருப்பதால் இதை அடியார்கள் பின்பற்றுவதோ அல்லது அவரவர் இருக்கும் இடத்தின் சூரிய உதயத்தை அனுசரித்து பொங்கல் வழிபாட்டை மேற்கொள்வதோ ஏற்புடையதே.

“நாங்கள் (சித்தர்கள்) எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்...”, என்று அடிக்கடி கூறுவார் நம் சற்குரு. இதன் விளக்கமாய் அமையும் இரு கருத்துக்கள் இங்கு அளிக்கப்படுகின்றன.
குருவாகி யெனக்கு நீ வரல் வேண்டும்
என் முன்னே உருவாய் வந்து நின்றருளல் வேண்டும்
என்று அங்காளியே தன் குருவாய் வரவேண்டும் என்று நம் சற்குரு விரும்பி பாடுகின்றார் அல்லவா? இவ்வாறு தன் எதிரே தோன்றும் ஒவ்வொருவரையுமே தன் சற்குருவாய், கோவணாண்டியாய், அங்காளி தேவியாகப் போற்றி அவர்களுக்கு சேவை புரிந்தார் நம் சற்குரு என்பதை உடனிருந்த அடியார்கள் அறிவர்.

ஸ்ரீஅக்னிகச்ச சித்தர் திருக்கச்சூர்

ஒரு முறை நம் சபையைச் சேர்ந்த ஒரு அடியார் அறிமுகம் இல்லாத ஒருவரை நம் சற்குருவிடம் அழைத்து வந்தார். நம் சற்குருவிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் தொடர்ந்து, “Tell me something about you...”, என்று ஏதோ ஒரு சாதாரண மனிதரிடம் கேட்பதுபோல், அண்டங்களுக்கெல்லாம் அதிபதியாகி அதற்கு அப்பாலும் பொலிந்து நிற்கும் நம் சற்குருவிடம் கேட்டு விட்டார். அருகில் இருந்த அனைவரும் அப்படியே ஆடிப் போய் விட்டனர் என்பதைக் கூறவும் வேண்டுமோ.

ஆனால், சற்குருவே பேரமைதியுடன், “சார், அடியேன் ஒரு கேவலமான நாய். இந்த நாயை அடியேனுடைய சற்குருவும், அங்காளி பரமேஸ்வரி தாயும் ஒவ்வொரு நொடியும் காப்பாற்றிக் கொண்டு வருகின்றனர்...”, என்றாரே பார்க்கலாம்.

சற்குரு வர்ஷித்த இந்த அபூர்வமான பணிவால் கேள்வி கேட்ட நபர் ‘ஆடிப்போய்’ விட்டார். அந்த நபரின் மனதில் தோன்றிய வினாவிற்கு உதட்டில் தவழும் புன்னகையுடன் பதிலளித்தார் நம் சற்குரு. “எதற்காக அடியேன் இவ்வளவு பணிவுடன் உங்களுக்கு பதிலளிக்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். அதற்குக் காரணம் கோவணாண்டியிடம் அடியேனுக்குள்ள அச்சம்தான். எந்த நேரமும் அவர் எவர் உருவில் வேண்டுமானாலும் என் எதிரில் வந்து நின்று கேள்விகள் கேட்கலாம். அடியேன் சற்றே கர்வம் கொண்டாலும் அவர் அதை ‘லபக்’ எனப் பிடித்து, “ஏண்டா நாயே, உனக்கென்ன அவ்வளவு திமிரா?” என்று அடியேனை கேட்டு கோபித்துக் கொள்ளக் கூடும். இந்த பயம் அடியேனிடம் எப்போதும் இருப்பதுதான் அடியேனுடைய பணிவிற்குக் காரணம்...”, என்றார்.

நம் சற்குருவிற்கு கனவிலும் ‘தான்’ என்பது தோன்றாது என்றாலும் நம் சற்குருவின் அடியார்கள் என்று சொல்லிக் கொள்ளும் நாம் இத்தகைய பணிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா?

அது எப்படி? ஒரு சொறி நாய் நம்மைக் கடிக்க வரும்போது அதை நம் சற்குரு என்று நினைத்து அரவணைக்க முடியும் என்று நீங்கள் கேட்பது காதில் விழத்தான் செய்கிறது. அதற்கு விடையளிப்பவரே மாதா அமிர்தானந்தா ஆவார்.

“கண்ணில் தெரியும் காட்சி எல்லாம்
கமல கண்ணா உன் தோற்றம்”
என்பார் அன்னை. கமலம் என்றால் தாமரை. தாமரை தோன்றிய காலத்திலிருந்து அதன் மாற்றத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. Cross, hybrid என்ற வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு, கலப்படமில்லாமல் தூயதாய் விளங்கும் ஒரே ஜீவ சக்தி தாமரை ஒன்று மட்டுமே. அதனால்தான் எல்லா தெய்வ மூர்த்திகளும் தாமரையில் அமர்ந்து, தாமரைக் கண்களுடன், தாமரையைக் கையில் ஏந்தி, இவ்வாறு ஏதோ ஒரு விதத்தில் இறைவனின் தூய தன்மையை பறைசாற்றுவதாக அருள்கின்றனர்.

ஸ்ரீஔஷதபுரீஸ்வரர் மாத்தூர்

இவ்வாறு நாம் காணும் எல்லா ஜீவ ராசிகளும் தூய ஆன்மாவின் வடிவம் என்றாலும் யுக கால நியதிகளின்படி அவை நாயாகவோ, மரமாகவோ, மனிதனாகவோ, கிருஷ்ண அவதாரமாகவோ நம் முன்னே தோன்றலாம். எனவே நாம் ஒரு சொறி நாயைக் கண்டாலும் தூய ஆன்மாவே ஏதோ கர்ம வினையால் இவ்வாறு சொறி நாய் வடிவில் வந்துள்ளது, இத்தகைய கர்ம வினைகளைக் களைய நம்மால் இயன்ற என்ன ஒரு சிறு முயற்சியைச் செய்ய முடியும் என்று சிந்திக்கத் தொடங்கினால், அங்கு நாயும் இல்லை, கல்லும் இல்லை, இருப்பது இறைவன் ஒருவர்தானே, இதுவே ஒரே குட்டையில் ஊறிய மட்டை தத்துவம்.

இங்குள்ள வீடியோவில் பொங்கல் பொங்கும்போது வாசிக்கப்பட வேண்டிய, கேட்கப்பட வேண்டிய ஏழு இசைக் கருவிகள் ஒலிக்கப்பட்டுள்ளன. இதை கேட்கும் அடியார்கள் இந்த நாதங்கள் ஏதாவது ஒன்றில் தங்கள் மனம் அதிக நாட்டம் கொள்வதை உணரலாம். அந்த குறிப்பிட்ட இசையை கற்றுக் கொள்ள, அல்லது தொடர்ந்து கேட்க முயற்சி செய்வதால் சிறிது சிறிதாக தங்கள் சாதனைகளில் அது லௌகீகமாக இருந்தாலும் தெய்வீகமாக இருந்தாலும் வெற்றி காண்பர். இந்த வருடம் முழுவதுமே இந்த இசைப் பயிற்சியால் அவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர்.

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மாத்தூர் சிவத்தலமே ஸ்ரீபெரியநாயகி உடனுறை ஸ்ரீஔஷதபுரீஸ்வர் என்னும் மருந்தீசர் அருளும் தலமாகும். நோய் நிவாரண சக்திகளும், வேத சக்திகளும், அமிர்த அமுத சக்திகளும் பொங்கித் ததும்பும் அற்புத தலம்.

ஸ்ரீகாயத்ரி தேவி மாத்தூர்

ஒசூர் திருத்தலத்தில் அம்பிகை சுவாமியின் திருக்கண்களை மறைத்தபோது தம் மூன்றாம் கண்ணிலிருந்து செஞ்சுடர் சக்திகளைப் பரப்பி பிரபஞ்சத்தைக் காத்ததுபோல் தன் உத்தம அடியாரான நந்தீஸ்வரரின் பிரார்த்தனையை ஏற்று அவருக்கு முக்கண் தேவ சக்திகளை அளித்து கௌரவித்த திருத்தலமே மாத்தூர் ஆகும். இறைவனின் முக்கண் சக்திகளை சுவாமியின் வாகனம் ஏற்க முடியாது என்பதால் அந்த முக்கண் சக்திகளை நந்தீஸ்வரரும் ஏற்கும் வண்ணம் அந்த சக்திகளை ‘மாற்றி’ அளித்த ஊர் என்பதால் இது மாற்றூர் ஆனது, பிற்காலத்தில் மாத்தூர் ஆகவும் மருவி உள்ளது.

அகத்திய நோய் நிவாரண கிரந்தங்களில் இவ்வூர் மாற்றூர் என்றே குறிப்பிடப்படுகிறது. நந்தீஸ்வரர் விரும்பிய வண்ணமே இறைவன் முக்கண் ஜோதியின் சக்திகளை நந்தீஸ்வரருக்கு அளிக்க அந்த சக்திகளை நோய் நிவாரண சக்திகளாகவும், அமிர்த சக்திகளாகவும் மாற்றி இங்குள்ள காயத்ரி சக்கர ஆரங்களில் பிரதிஷ்டை செய்துள்ளனர் ஸ்ரீஅகத்திய மகரிஷியும் ஸ்ரீதன்வந்திரி மூர்த்தியும்.

இவ்வாறு முக்கண் நந்தீஸ்வரர் சுவாமியின் எதிரில் எழுந்தருள, நந்தியின் முன் காயத்ரீ சக்கரம் சுழல, கோஷ்ட மூர்த்திகளாக ஸ்ரீஅகத்திய பெருமானும், ஸ்ரீதன்வந்திரி மூர்த்தியும் எழுந்தருளிய அற்புத தலம் பிரபஞ்சத்திலேயே இது ஒன்றே என்பதே இத்திருத்தலத்தின் அதீத சிறப்பாகும். அதனால் மூன்றாம் பிறை தரிசன நாட்களிலும், அஸ்வினி, ரோகிணி நட்சத்திர நாட்களிலும், பௌர்ணமி நாட்களிலும் மாத்தூர் திருத்தலத்தில் வழிபடுவதால் கிட்டும் நோய் நிவாரண சக்திகள் சொல்லில் அடங்கா.

இத்தலத்தில் குறைந்தது மூன்று முறை வலம் வந்து வணங்கிய பின்னர் இங்குள்ள காயத்ரீ சக்கரத்தை பிரதட்சிணமாக 24 முறையும், அப்பிரதட்சிணமாக 24 முறையும் வலம் வந்து வணங்குவதால் அற்புத நோய் நிவாரண சக்திகளைப் பெறலாம். இத்தகைய வலத்திற்குப் பின் அவரவர் ஊரில் உள்ள திருத்தலங்களில் ராஜ்மா பருப்பு சுண்டல் குறைந்தது மூன்று படி தானமாக அளித்தலால் இத்தலத்தில் பெற்ற நோய் நிவாரண சக்திகளை உடம்பில் வெகு காலத்திற்கு தக்க வைத்துக் கொள்ளலாம். காயத்ரீ மந்திரத்தை உபதேசமாகப் பெறாதவர்களும், காயத்ரீ மந்திரத்தைத் தெளிவாக உச்சரிக்க முடியாதவர்களும் கூட இந்த சக்கரத்தை வலம் வந்து வணங்கி பயன்பெறலாம் என்பதே நம் சற்குருவின் கருணை கடாட்சமாகும்.

ஸ்ரீதன்வந்திரி மூர்த்தி மாத்தூர்

ஸ்ரீஅகத்திய பிரான் மாத்தூர்

சுபகீர்த்தி என்ற ஒரு மாடுமேய்க்கும் சிறுவன் மாத்தூர் தலத்தில் வாழ்ந்து வந்தான். தாய் தந்தையர் இல்லாத அநாதை. அந்த ஊரில் உள்ள மாடுகளை மேய்த்துக் கொண்டு அதன் மூலம் தன் ஜீவனம் நடத்தி வந்தான். அவன் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது அங்கு யார் வந்தாலும் அவர்கள் மேல் கல்லெறிந்து காயப்படுத்தி விடுவான். யார் பேச்சையும் கேட்பதில்லை. தாய் தந்தையரும் இல்லாததால் அவனைக் கண்டிப்பார் யாரும் இன்றி வாழ்ந்து வந்தான். மாடு மேய்க்கும் சமயம் இல்லாது மற்ற நேரங்களில் அவன் யாருக்கும் எந்த தொந்தரவும் அளித்தது கிடையாது. அதனால் அவன் மேல் யாராலும் குறை சொல்லவும் முடியவில்லை.

இவ்வாறு நாட்கள் கழிந்தன...
ஒரு முறை அகத்திய பிரான் அவ்வழியே வந்தார். அகத்தியரை அடையாளம் கண்டு கொள்ள முடியாத சிறுவர்கள் சுவாமியை அணுகி, “சுவாமி, அந்தப் பக்கம் செல்லாதீர்கள், அங்கே ஒரு பைத்தியம் இருக்கிறது, அது யாரைக் கண்டாலும் அவர்களை கல்லால் அடித்து விடும்...”, என்று எச்சரித்தனர். அகத்திய பிரானோ புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்து விட்டார். சற்று நேரம் கடந்த பின்னர் சுபகீர்த்தி அவரைப் பார்த்து ஒரு கல்லை கையில் எடுத்துக் கொண்டு அவர் அருகில் ஓடி வந்தான்... வேகமாக ஓடி வந்தவன் அவர் அருகில் வந்தவுடன் அப்படியே யாரோ அவனை ஓங்கி அடித்ததுபோல் மயங்கி விழுந்து விட்டான்...

மயக்கம் தெளிந்து எழுந்து அகத்தியரைப் பார்த்தான். தன் பழைய ஞாபகம் வரவே மீண்டும் அந்த கல்லை எடுத்துக் கொண்டு அவர் அருகே ஓடி வந்தான்... இது பழைய குருடி கதை ஆயிற்று ...

இவ்வாறு பல தடவைகள் முயன்றும் அது பலிக்காமல் போகவே அந்த சிறுவன் அகத்திய பிரானின் காலில் விழுந்து, “சுவாமி உங்களைப் பார்த்தால் கடவுளைப் பார்த்ததுபோல் தெரிகிறது ... தாங்கள் யார் ?” என்று அவரை விசாரிக்க ஆரம்பித்தான். அகத்திய பெருமான் ஸ்ரீமருந்தீசரின் தரிசனத்தை அளிக்க அப்போதுதான் சிறுவன் ஆச்சரியத்துடன் அந்த திருக்கோயிலையே தரிசனம் செய்தான். பல்லாண்டுகளாக அந்தக் கோயிலைச் சுற்றி சுற்றி வந்து தான் மாடுகள் மேய்த்துக் கொண்டிருந்தாலும் அங்கு ஒரு கோயில் இருப்பதே தன் கண்ணுக்குத் தெரியவில்லையே என்று நினைக்க நினைக்க அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஸ்ரீபெரியநாயகி அம்மன் மாத்தூர்

இவ்வாறு அகத்திய பிரானிடம் உபதேசம் பெற்ற அந்த மாடு மேய்க்கும் சிறுவனுக்கு சுவாமி அளித்த நாமமே சுபகீர்த்தி என்பதாகும். பெயருக்கு ஏற்றாற்போல் தான் மனித உடலை உகுக்கும் நேரம் வந்தபோது அகத்தியர் அவன் முன் தோன்றி, “குழந்தாய், நீ அடியேனிடமே நேரில் உபதேசம் பெற்றதால் நீ எம லோகத்தை அடைய வேண்டிய அவசியமில்லை, நீ விரும்பினால் அடுத்த இந்திரனாகவும் நீ அமரலாம், உன்னுடைய விருப்பத்தைக் கூறுவாயாக...”, என்று கூற சுபகீர்த்தியும் மகிழ்ந்து, “சுவாமி, அடியேனுக்கு நல்ல நினைவு, எண்ணம், சிந்தனை போன்ற அனைத்து நற்செல்வங்களையும் அளித்த தாங்கள் நிரந்தரமாய் உறையும் இத்தலத்தை விட்டு அடியேன் பிரிய மனமில்லை, அடியேனைப் போன்று வக்ர எண்ணம் கொண்ட ஆயிரமாயிரம் மனிதர்களுக்கு நல்லெண்ணம் புகட்டும் வண்ணம் அடியேன் இங்கு ஒரு தென்னை மரமாய் இருக்கும் வரத்தை நல்கினாலே போதும்...”, என்றான் சுபகீர்த்தி.

அகத்திய பிரானும் மகிழ்ந்து அப்படியே ஆகட்டும் என்று திருவாய் மலர்ந்து அருளினார். எனவே இங்குள்ள சுபகீர்த்தி தென்னை மரத்திற்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் பூசி வலம் வந்து வணங்கி வந்தால் எத்தகைய முரட்டுக் குணம் உள்ள குழந்தைகளும், பிடிவாத குணம் உள்ள கணவன் மனைவிமார்களும் திருந்தி நல்வாழ்க்கையைப் பெறுவார்கள். பிடிவாத குணம் என்பது யாரும் வேண்டும் என்றே தாங்களாக வளர்த்துக் கொள்வது இல்லை, அது பல ஜன்மங்களாக தொடர்ந்து வரும் ஒரு கோணல் குணமே.

பிரகதி, பிருகத் போன்ற வார்த்தைகள் பெரிய, பிரம்மாண்டமான என்ற பொருளைக் குறிப்பவை. இவ்வகையில் மாத்தூர் திருத்தலத்தில் அருளும் பெரிய நாயகி அம்மன் மனிதன் பெற வேண்டிய பிரம்மாண்டமான சக்திகளை எல்லாம் அருளவல்லவள். இத்தகைய பிருகந் நாயகி அம்மன் என்ற பெயரில் ஆயிரமாயிரம் அம்மன் தெய்வங்கள் இருந்தாலும் அவர்களுக்கு எல்லாம் மூத்த சக்தியே மாத்தூர் திருத்தலத்தில் உறையும் அம்பிகை ஆவாள்.

ஓங்கார சக்கரம் அமைக்கும் முறை...
இரவில் உறங்கும் முன் அமைதியாகப் படுத்துக் கொண்டு கைகளை பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். மனதினுள் ஓம் வடிவை நினைத்துக் கொண்டு அந்த ஓம் வடிவம் புள்ளிகள் போல் நம் உடலைச் சுற்றி அமைவது போல் கற்பனை செய்து கொள்ளவும். குறைந்தது 48 ஓங்கார புள்ளிகள் உடலைச் சுற்றி அமையுமாறு மனதினுள் ஓம் ஓம் என்று சொல்லவும். இதுவே ஓங்கார சக்கரம் அமைக்கும் முறை. இதனால் கெட்ட கனவுகள், பயங்கரமாய் அச்சுறுத்தும் எண்ணங்கள் வராது. இது ஒரு அற்புத தற்காப்பு கவசம். காலையில் எழுந்தவுடன் கண் விழிக்காது இந்த ஓங்கார சக்கரத்திற்கு எதிர்ப்புறமாக (reverse diretion) இந்த ஓம்கார புள்ளிகள் அனைத்தையும் மனதால் நீக்கி விட வேண்டும் என்பது முக்கியம். இது வெறும் மனதளவில் செய்யப்படும் பயிற்சியே என்றாலும் இதனால் கிட்டும் பலன்கள் அளப்பரியன.

அகத்திய பிரான் ஐந்து அடி உயரமே உடையவர், நம் சற்குருவின் உயரமும் அதுவே. மனிதனின் சாதாரண உயரமான எட்டு அடி என்ற உயரத்திற்கு பிருகத் சக்திகள் விரவி, நிரவி நிற்பதே இத்தகைய குருமார்களின் உயரத்திற்கு சித்தர்கள் அருளும் ஒரு விளக்கமாகும்.

ஸ்ரீநந்தீஸ்வரர் மாத்தூர்

மனிதர்கள் தினமும் உறங்கும் முன் தங்கள் பாதுகாப்பிற்காக ஓம் சக்கரத்தை அமைக்கும் முறையை நம் சற்குரு ஏற்கனவே விளக்கி இருந்தாலும் இந்த உபாயத்தை எத்தனை அடியார்கள் கைக்கொள்கிறார்கள் என்பது கேள்விக் குறியே. மாத்தூர் திருத்தலத்தில் உள்ள காயத்ரீ சக்கரத்தை 24 முறை வலமாகவும் இடமாகவும் வலம் வந்து வணங்குவதால் இவ்வாறு தங்கள் பிரகத் ஒளி வட்டத்தை சுத்திகரிக்காத தோஷங்கள் ஓரளவு நீங்க வழிபிறக்கும். தொடர்ந்து இந்த ஒளி வட்டத்தை புனரமைக்கும் சக்திகளும் இத்தகைய வழிபாட்டால் வலுப்பெறும்.

இதனால் என்ன பயன் என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றலாம். பல திருத்தலங்களிலும் பிரம்மோற்சவம் நிகழ்வதற்கு முன்னால் சக்தி ஆயுதமான சூலாயுதத்தை எட்டு திக்குகளிலும் வைத்து நைவேத்யம் படைக்கும் நிகழ்ச்சியை தரிசனம் செய்து இருப்பீர்கள். தீய சக்திகளையும் எதிர்மறை சக்திகளையும் களைவதற்காக திருத்தலங்களிலேயே இத்தகைய வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றால் எதிர்மறை சக்திகளிடையே சதாசர்வ காலமும் வாழும் மனிதர்கள் இத்தகைய எதிர்ப்பு சக்திகளை பெற வேண்டியது முக்கியமல்லவா? இதற்கு உறுதுணையாக அமைவதே காயத்ரீ சக்கர வழிபாடு.

நம் ஆஸ்ரமத்திற்கு ஒரு அடியார் வந்தார். அவருக்கு ஒரு பிரச்னை. அவர் தியானம் செய்ய அமர்ந்தால் ஒரு சில நிமிடங்களிலேயே ஏதாவது ஒரு பல்லி, தவளை, பூரான் போன்ற ஏதாவது ஒரு ஜந்து அவர் மடியில் வந்து அமர்ந்து கொள்ளுமாம். அவர் எப்படி தியானத்தைத் தொடர முடியும்? இது பற்றி நம் சற்குருவிடம் கேட்டபோது நம் சற்குரு சிரித்துக் கொண்டே, “அது ஒண்ணும் இல்லே, ராஜா, அந்த ஜீவ ராசிகளுக்கு உன் உடம்பு வாசம் பிடித்திருக்கிறது, அவ்வளவுதான், அது ஒரு தொந்தரவு என்று நீ நினைத்தால், ஓங்கார வட்டத்தை உன்னைச் சுற்றிப் போட்டுக் கொள், புழு பூச்சிகளின் தொந்தரவு இருக்காது...”, என்றார்.

இந்த ஓம் சக்கரத்தை நம் ஆஸ்ரமத்திலேயே பரீட்சை செய்து பார்த்தார் அந்த அடியார். ஒரு பூச்சி கூட அவரை ஒரு வார காலத்திற்கு தொந்தரவு செய்யவில்லை என்பதே அந்த அடியார் அடைந்த ஆச்சரியம். உங்களுக்கு ...?

ஸ்ரீமுக்கண் நந்தி மூர்த்தி

திருக்கச்சூர் திருத்தலத்தில் ஸ்ரீதியாகராஜ சுவாமிகள், ஸ்ரீஅஞ்சனாட்சி சமேத ஸ்ரீகச்சபேஸ்வரர் அருளும் ஆலயம் ஆலக் கோயில், தாழக் கோயில் என்று அழைக்கப்படும். அருகில் உள்ள சுந்தர மூர்த்தி நாயனார் பாடல் பெற்ற ஸ்ரீஇருள்நீக்கி தாயார் சமேத ஸ்ரீமருந்தீஸ்வரர் தலம் மருந்து மலை திருத்தலம் என்று அழைக்கப்படும். இதன் உயரமோ அதிக பட்சம் மூன்று அடியே. இது மருந்து மலை என்று அழைக்கப்படுவது ஏனோ?

N2023 வருடம் முழுவதும் திருத்தலங்களில் குறிப்பாக இறை மூர்த்திகளின் பள்ளியறைகளில் ஸ்ப்ரே நறுமணங்களை (spray scent) பயன்படுத்துதல் சிறப்பாகும். இறை மூர்த்திகளின் மேல் இத்தகைய நறுமணங்களை பூச வேண்டிய அவசியமில்லை. இந்த நறுமணங்களின் சக்திகளை உரிய முறையில் பஞ்ச பூத சக்திகளாக மாற்றி அதை இறை மூர்த்திகளுக்கு அர்ப்பணிக்கும் பொறுப்பை வாயு பகவான் ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதே நம் சற்குரு தெரிவிக்கும் இனிய செய்தியாகும்.

இது ஒரு புறம் இருக்க மாத்தூர் திருத்தல நந்தி மூர்த்தி மூன்று கண்களுடன் முக்கண் ஈசராக அருள்பாலிக்கிறார். முக்கண் என்ற நெற்றிக் கண் இரு கண்களுக்கு நடுவில் திகழும் ஒரு சக்தி என்று நாம் அறிவோம். மேற்கூறிய மூன்று திருத்தலங்களுக்கும் உள்ள தெய்வீகத் தொடர்பை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியுமானால் நீங்கள் தெய்வீகத்தில் வெகுவாக முன்னேறி விட்டீர்கள் என்று அர்த்தம்.

ஸ்ரீமருந்தீஸ்வரர் திருக்கச்சூர்

உங்கள் முன்னேற்றத்தைப் பாராட்டும் விதமாக நந்தி மூர்த்தி மூன்றாவது கண்ணைப் பெற்ற வரலாற்றை இங்கு அளிக்கிறோம். திருஅண்ணாமலை, பரியாமருதுபட்டி போன்ற திருத்தலங்களில் உள்ள நந்தி மூர்த்திகளைப் போல் மாத்தூர் திருத்தல நந்தி மூர்த்தியும் ஒரு சாதாரண மனிதப் பிறவியில் தோன்றியவரே. ஆனால், தன்னுடைய அயராத உழைப்பினால், ஆழ்ந்த, அசைக்க முடியாத குரு நம்பிக்கையால் இறைவனுக்கு வாகனமாக அமையும், அமரும் பேறு பேற்றார்.

நந்தி மூர்த்தி தேனுபாலன் என்ற நாமத்துடன் ஒவ்வொரு சிவத்தலமாக வலம் வந்து இறை மூர்த்திகளைத் தரிசனம் செய்து கொண்டிருந்தார். அவ்வாறு மாத்தூர் திருத்தலம் அடைந்தபோது அங்கு ஒரு இளவயது மங்கையைக் கண்டார். ஆனால், அந்தப் பெண் திருமண வயதை அடைந்தும் திருமணம் முடிக்காமல் இருந்தது கண்டு அந்தப் பெண்ணின் பெற்றோர்களிடம் விசாரித்தபோது அவர்களும் அந்தப் பெண் தங்களுடைய சொந்தக் குழந்தை அல்ல என்றும் அங்குள்ள சிவத்தலத்திற்கு விடியற்காலை சுவாமி தரிசனத்திற்காகச் சென்றபோது அங்குள்ள மாட்டுக் கொட்டிலில் அந்தக் குழந்தையைக் கண்டெடுத்ததாகக் கூறினர்.

அந்தப் பெண்ணிற்கு மணம் முடிக்க அவர்கள் எண்ணிய போது அத்தல இறைவன் கனவில் தோன்றி ஒரு லட்சம் கன்னிகைகளுக்கு மணம் முடித்தால் அந்தப் பெண்ணைத் தாமே ஏற்றுக் கொள்வதாக வாக்களித்தார் என்று கூறினர். அரிதிலும் அரிய இந்த சந்தர்ப்பத்தை குரு வழிகாட்டுதலாக எண்ணி தேனுபாலன் மிகவும் மகிழ்ந்து ஒரு லட்சம் கன்னிகளுக்கு மணம் முடித்து வைப்பதை ஒரு வைராக்யமாக ஏற்றுக் கொண்டு செயல்படத் தொடங்கினான்.

இவ்வாறு தேனுபாலன் ஒரு அரிய திருப்பணிக்கு தயாரானபோது அந்தப் பெற்றோர்கள் இறைவன் அளித்த மற்றோர் நிபந்தனையையும் விவரித்தனர். அதாவது அவ்வாறு திருமணம் நிகழ்த்த தேர்ந்தெடுக்கும் வரன்கள் ஏற்கனவே திருமணம் புரிந்திருக்கக் கூடாது என்பதே, இதை அந்த வரன்களிடம் நேரிடையாகக் கேட்கக் கூடாது என்பதும் ஒரு நிபந்தனையே. இந்த நிபந்தனைகளுக்கும் சளைக்கவில்லை தேனுபாலன். அரும்பாடுபட்டு பல்லாண்டுகள் அயராது உழைத்து இறைவன் அளித்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒரு லட்சும் கன்னிகளுக்கு இலவச திருமணம் நிகழ்த்தினான் தேனுபாலன். மறுவிநாடி மாத்தூர் திருத்தல இறைவன் நேரில் தோன்றி தேனுபாலனுக்கு பரிச்சயமான அந்தக் கன்னியை தன் மணவாட்டியாகக் கைப்பிடித்தான்.

ஸ்ரீஇருள் நீக்கி தாயார்
திருக்கச்சூர்

தேவர்கள் பூமாரி பொழிந்தனர், அந்த மங்கையின் பெற்றோர்கள் ஆனந்தக் கண்ணீரை வர்ஷித்தனர், அனைத்திற்கும் மேலாக தேனுபாலன் பெற்ற ஆனந்தமோ எல்லையில்லாமல் பொழிந்தது. ஸ்ரீமருந்தீச மணவாளனும் ஸ்ரீபிருகத் நாயகி தாயாரும் தேனுபாலனை விடையாகக் கொண்டு நந்தி வாகனத்தில் அமர்ந்து அருங்காட்சி நல்கினர். இந்த அற்புத முகூர்த்தத்தில் தெய்வீகத் தம்பதிகளை வாழ்த்திய ஸ்ரீஅகத்திய பெருமானையும் ஸ்ரீதன்வந்திரி மூர்த்தியையுமே மாத்தூர் திருத்தலத்தில் தரிசனம் செய்கிறீர்கள் என்றால் உங்களை விடக் கொடுத்து வைத்தவர்கள் யார்... ... யார் ?

நகர் திருத்தலத்தில்
பாஞ்சசன்ய சங்கு நாதம்!

இனி இத்திருத்தலத்தில் நிறைவேற்ற வேண்டிய வழிபாடு என்ன என்பது உங்களுக்குச் சொல்லாமலே விளங்கும் அல்லவா? ஆம், மாங்கல்ய தானம் இத்தலத்தில் அளிக்கும் அனுகிரக சக்திகளை வேறு எங்குமே பெற இயலாது என்பதே இத்தலம் அளிக்கும் வரப் பிரசாதம். ஆனால், இதில் நாம் ஆனந்தம் அடையக் கூடிய விஷயம் என்னவென்றால் இறைவன் அளித்த நிபந்தனைகளைப் போல் திருமணம் ஆகாத கன்னிப் பெண்களுக்கு மட்டுமே மாங்கல்ய தானம் அளிக்க வேண்டும் என்று அல்லாது ஏற்கனவே திருமணமானவர்கள், கூடா நாள், மரண யோகம், ராகு காலம், எம கண்டம், சூன்ய திதி போன்ற தோஷமுள்ள முகூர்த்த நேரங்களில் திருமணங்களை நிகழ்த்தியவர்கள், பல்வேறு காரணங்களால் தங்கள் மாங்கல்யங்களை கோயில் உண்டியலில் சேர்த்து விட்டு வெறும் தாலிக் கயிறுடன் இருப்பவர்கள் போன்ற பலருக்கும் இத்திருத்தலத்தில் மாங்கல்ய தானம் அளிப்பது சிறப்போ சிறப்பு.

மாத விலக்காய் இருப்பவர்கள் மாங்கல்ய தாரண வைபவத்தில் பங்கேற்கக் கூடாது என்பது தெய்வ சட்டம். தற்காலத்தில் பல்வேறு காரணங்களால் இந்த தெய்வ சட்டத்தையும் மீறி செயல்படுபவர்கள் உண்டு. இந்தத் தவற்றை வெளியே கூறாது மனதிற்குள் மருவும் பெண்கள் ஏராளம், அத்தகையோருக்கும் இத்தல மாங்கல்ய தானத்தால் விமோசனம் அளிப்பவரே நம் சற்குரு.

இரண்டு கிராம் எடையுள்ள தங்க மாங்கல்யங்கள் எத்தனை வேண்டுமானாலும் தாராளமாக இத்தலத்தில் தானமாக அளிக்கலாம், ஆனால், இந்த தானங்களைப் பெறுபவர்கள் கட்டாயமாக தம்பதி சகிதமாகவே இந்த மாங்கல்யங்களைப் பெற வேண்டும் என்பது முக்கியம். கூடா நாள், ராகு காலம், இரவு நேரம் என்ற கால கோட்பாடுகளையும் மாங்கல்ய தானம் அளிப்பவர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம், அனைத்து கால வர்த்தமான தோஷங்களையும் நீக்கும் அருட் சக்தி பூண்டவரே இத்தல ஸ்ரீதேனுபால நந்தி மூர்த்தி ஆவார்.

ஸ்ரீநந்தீஸ்வரர் திருக்கச்சூர்

வடஇந்தியாவில் குறிப்பாக காசி திருத்தலத்தில் காபாலிகர்கள் அனேகரைக் காணலாம். உடல் முழுவதும் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிக் கொண்டு ஆறடி எட்டடி உயரமுள்ள சூலாயுதங்களைக் கையில் ஏந்தி அச்சுறுத்தும் விதத்தில் திகழ்வார்கள். இவர்களை அகோரிகள் என்றும் கூறுவதுண்டு. நம் சற்குரு ஒருமுறை இத்தகைய காபாலி ஒருவரை காசி திருத்தலத்தில் அரிச்சந்திரா படித்துறை அருகே சந்தித்தார். ஒரு யந்திரத்தை வரைந்து அதில் குறிப்பிட்ட இடங்களில் எலுமிச்சைக் கனிகளை வைக்கும்படி தன் சீடனிடம் கூறினார் அந்தக் காபாலி. ஆனால், தவறுதலாக ஒரு எலுமிச்சம் பழத்தை மாற்றி வைத்து விட்டான் அந்தச் சீடன், அவ்வளவுதான் கோபத்தில் சீறி எழுந்த காபாலி அந்தச் சீடனை நோக்கி, “ஹூம் பட்” என்று கூற அவ்விடத்திலேயே அந்தச் சீடனின் உயிர் பிரிந்தது.

சரியாக அந்நேரத்தில் நம் சற்குரு அங்கு வந்து சேர்ந்தார், “ஏன் சாமி, சுமார் 20 வருடங்களாக உன்னுடன் இருந்து நீ இட்ட பணிகளை எல்லாம் நிறைவேற்றி வந்த சீடன் இன்று ஒரு தவறைச் செய்து விட்டான் என்பதற்காக அவனுக்கு இப்படியா தண்டனை அளிப்பது?” என்று கேட்டு அந்தக் காபாலியை கடிந்து கொண்டார்.

காபாலி கோபமாக நம் சற்குருவைப் பார்த்தார், “இப்போது பாழாகிய இந்த யந்திரத்தை யார் சரி செய்ய முடியும்?” என்ற வினா அவர் பார்வையில் தொக்கி நின்றது. நம் சற்குரு அமைதியாக, “அந்த சக்கரத்தை களைந்து விட்டு மீண்டும் ஒரு முறை யந்திரம் வரைந்து அதில் எலுமிச்சம் பழங்களை உரிய இடத்தில் பிராண பிரதிஷ்டை செய்தால் யந்திரம் உயிர் பெற்று விடுமே...”, என்றார்.

அதிர்ந்தான் காபாலி...
“இத்தனை வருடங்களாக காசி திருத்தலத்தில் சாதனைகள் ஆற்றிக் கொண்டிருக்கும் நான் அறியாத ஒரு பிராண பிரதிஷ்டை இரகசியத்தை எங்கிருந்தோ வந்த இந்த இளைஞன் சர்வ சாதாரணமாக குறிப்பிட்டு விட்டானே...,” என்ற நன்றிப் பெருக்குடன் அவன் கண்கள் நம் சற்குருவை நோக்கின, அவன் கண்கள் மன்னிப்புக் கோரின என்பதற்கு அடையாளமாக அவன் கண்களிலிருந்து நீர் வழிந்தது...

ஸ்ரீவன்மீகநாதர் ஒன்பத்துவேலி

பின்னர் நடந்த நிகழ்ச்சிகளை நீங்கள் யூகித்துக் கொள்ளலாம். இவ்வாறு சர்வ சாதாரணமாக உயிரை எடுப்பதையும், திரும்ப அளிப்பதையும் ஒரு சாதாரண வித்தையாக இயற்றும் காபாலிகளையே வழிநடத்த வல்ல நம் சற்குருவைப் பெற்ற அடியார்கள் கலங்கலாமா ? கண்ணீர்தான் சிந்தலாமா ? சிந்திக்க ... சிந்திக்க ...

மாத்தூர் திருத்தலத்தில் ஸ்ரீதட்சிணா மூர்த்திக்கும் சுபகீர்த்தி தென்னை மரத்திற்கும் இடையே பரிணமிக்கும் இத்தகைய பிராண சக்திகளை வலம் வந்து பெறுவதால் கிட்டும் நோய் நிவாரண சக்திகளை, பிராண சக்திகளைப் பற்றி வர்ணிக்க வேண்டிய அவசியம் ஏதாவது இருக்கிறதா என்ன? சிவபிரானுடைய ஐந்து முகங்களில் தெற்கில் உள்ள முகம் அகோரம் என்று அழைக்கப்படும். இந்த அகோர சக்திகளை தட்சிண பிராண சக்திகளாக அளிப்பவரே மாத்தூர் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீதட்சிணா மூர்த்தி.

பிராண வாயு என்ற ஆக்ஸிஜன் வேறு, பிராண சக்தி வேறு. இங்கு நாம் குறிப்பிடுவது பஞ்ச பூத சக்திகளையும் கடந்த தட்சிண பிராண சக்தி, மாத்தூர் திருத்தலம் ஒன்றில் மட்டுமே பக்தர்கள் பிரதட்சிண வழிபாட்டால் பெறக் கூடியது.

ஒரு முறை நம் ஆஸ்ரம அடியார் ஒருவர் தலை தெறிக்க ஓடி வந்தார் என்று கூற வேண்டும்...“வாத்யாரே, நீ பலரையும் முழுமையாக வெறுக்கிறாய்... ஆனால் யாரையும் முழுமையாக நேசிக்க முடியவில்லையே..., என்று ஒரு மகான் கூறியுள்ளார். இந்த வாசகம் அடியேனுக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது, ஆனால் இதற்கு விடை காண்பது தான் எப்படி என்பது புரியவில்லை...”, என்று கூறினார்.

நம் சற்குரு தனக்கே உரிய புன்சிரிப்புடன், “இதற்கு மட்டும் அல்ல, ஐயா, இது போன்ற கோடானு கோடி கேள்விகளுக்கும் விடையளிப்பவனே நம் கோவணாண்டி ... அவன் அருளிய வாசகத்தைத்தானே நம் ஆஸ்ரம முகப்பில் எழுதி வைத்து லட்சக்கணக்கான கிரிவல அடியார்கள் அதைக் கண்டு பயனடையும் வகையில் அமைத்துள்ளோம்...”, என்றார்.

முதலில் அந்த அடியாருக்கு சட்டென நம் சற்குருவின் உரை புரியவில்லை என்றாலும் சற்று நேரத்திற்குப் பின் புரியத்தான் செய்தது. ஆம், சற்குரு குறிப்பிட்ட அந்த மாமேரு வாசகத்தை இங்குள்ள வீடியோவில் கண்டு களியுங்கள்.

வன்மீகமா வான்மீகமா?

திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள ஒன்பத்துவேலி சிவத்தலம் நாம் அறிந்த புராண காலத்திற்கும் முந்தையது என்றால் இதன் பெருமையைக் கூறத்தான் இயலுமா? நம் சற்குரு அளித்த சித்த பொக்கிஷங்களுள் ஒன்றே காலம் கடந்த குசா தத்துவம் என்பதாகும். இந்த குசா தத்துவம் மிளிரும் ஒரே திருத்தலம் ஒன்பத்துவேலி என்றால் அது மிகையாகாது.

பயிர் இளஞ்செடியாக இருக்கும்போது அதைப் பாதுகாக்க வேலி அமைப்பது உண்டு. இவ்வாறு பக்தர்கள் தங்கள் சாதனையின் ஆரம்பத்தில் பல்வேறு குழப்பங்களால் இறை நெறியில் உள்ள பிடிப்பு தளர்ந்து விடாது இருக்க நம் சற்குருவால் அளிக்கப்பட்ட மாபெரும் தத்துவமே குசா என்பதாகும். எங்கும் எந்நேரத்திலும் எந்நிலையிலும் நன்மை ஒன்றை மட்டுமே தரக் கூடிய தத்துவமே குசா தத்துவம்.

ஸ்ரீசோமகலாம்பிகை ஒன்பத்துவேலி

எண் சக்தியாக குசா இருக்கும்போது அது ஒன்பதிற்கும் பத்திற்கும் இடையில் அமையும். அதனால்தான் ஒன் பத்து வேலி திருத்தலம் குசாவிற்கு எடுத்துக் காட்டாக, குசா சக்திகள் பெருகி உள்ளதாக, குசா சக்தியின் உதாரண தெய்வீகக் களஞ்சியமாகப் பொலிகிறது. வேலி என்பது இளஞ் செடிகளை ஆடு மாடு மேய்ந்து விடாமல் பாதுகாக்கிறது என்பது மட்டுமல்லாமல் வேலிக்குள் இருக்கும் வரை பயிருக்கும் அது காப்புதானே? தாய் தந்தையர் என்ற வேலியைத் தாண்டி சென்று விட்டால் இளம் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எப்படி பாதுகாப்பு கிட்டும்?

குசா என்ற வேலி மிக மிக வலிமை வாய்ந்ததே என்ற கருத்திற்கு ஆதாரமாய் இருப்பதே இத்தல இறைவனின் திருநாமம் ஸ்ரீவன்மீக நாதர் என அமைந்திருப்பது ஆகும். வன்மீகம், வால்மீகம் என்றால் மண் புற்று என்று பொருள். திருவாரூர், திருவெறும்பூர், காஞ்சிபுரம் ஏகம்பம் போன்ற இடங்களில் பிருத்வி என்ற மண்ணாலான லிங்க மூர்த்திகள் எழுந்தருளி இருந்தாலும் இந்த மூர்த்திகள் அருளும் தெய்வீக சக்திகள் மனித கற்பனையை மிஞ்சியவையே.

புற்று லிங்க மூர்த்தியான ஸ்ரீசிவலோகநாதர் எழுந்தருளிய தலத்தில் ஒரு எறும்பு துப்பிய தாம்பூல எச்சில் மகிமையைப் பற்றி திருப்புன்கூர் சிவாலய மகிமையாக தெரிவித்திருந்தோம். ஒரு எறும்பு துப்பிய தாம்பூல எச்சிலுக்கே இத்தகைய மகத்துவம் என்றால் எறும்புகள் பல யுகங்களாக வசித்து ஆன்ம சக்திகளைப் பெருக்கி வந்த எறும்புப் புற்றுகளின் ஆன்மீக வலிமை எவ்வளவு மகத்துவம் வாய்ந்ததாக, வன்மீகம் உடையதாக இருக்கும்?

வால்மீக மகரிஷியின் இயற்பெயரே மறைந்து எறும்புப் புற்றின் மகிமையை விளக்குவதாக அவர் திருநாமம் அமைந்தது, அவர் எழுதிய இராமாயண காவியமும் ஈடு இணையற்றதாக இன்றளவும் பொலிகின்றது என்றால் வால்மீகத்தின் மகிமைகளை சில நூறு பிறவிகளில் அறிந்து கொள்ள முடியுமா என்ன? திருவெறும்பூர் தலத்தில் உள்ள எறும்புகள் குவித்து வைத்திருக்கும் சிலிகான் மணல் பாறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கே மனிதனால் முடியாது என்றால் எறும்புகளின் மகத்துவத்தைப் பற்றி அவன் என்றுதான் புரிந்து கொள்ள முடியும்?

மனிதனின் அறிவைப் போன்று முன்னூறு மடங்கு பெருகி உள்ளதே எறும்புகளின் கம்ப்யூட்டர் அறிவாகும். அதனால் சரி இதை விட்டு விடுவோம் என்று இறை மூர்த்திகள் அசட்டையாக இருந்து விடுவார்களா? இறை மூர்த்திகளின் தாயினும் பரிந்து ஊட்டும் ஞானத்தை, பரந்த அறிவை நாம் புரிந்து கொள்ள உதவும் திருத்தலங்களில் ஒன்றே ஒன்பத்துவேலி ஆகும். இத்தல அம்பிகையின் பெயர் ஸ்ரீசோமகலாம்பாள் என்பதாகும்.

தாயினும் சாலப் பரிந்து என்ற வார்த்தைகளின் இலக்கணமாய்த் திகழும் ஸ்ரீவன்மீகநாத ஈசன் இங்கு நீங்கள் காணும் தரிசனத்தில் எட்டு திசைகளைக் குறிக்கும் சந்தனப் பொட்டுகளுடன் நடுவில் குசா சக்தியைக் குறிக்கும் குங்குமப் பொட்டுடன் காட்சி தருகிறான் என்றால் ... ?

சூரியனை நோக்கும் நவகிரகங்கள்
ஒன்பத்துவேலி

சோமன் என்ற சந்திர பகவான் 15 கலைகளை உடையவர் என்று நாம் அறிவோம். மேலோட்டமாக பதினைந்து கலைகள் என்று கூறினாலும் வளர்பிறை தேய்பிறை என்று கூறும்போது இந்த கலைகள் மேலும் 15 கலை சக்திகளாகப் பெருகுமே. அடுத்து ஒவ்வொரு கலையிலும் சந்திர பகவான் பிரகாசிக்கும் போது நிலவும் கிரக சஞ்சார அம்சங்களைப் பொறுத்து இந்த கலைகள் வர்ஷிக்கும் அனுகிரக சக்திகளும் மாறும் அல்லவா?

அப்படியானால் ... ...?

மனித அறிவை விஞ்சியது, மிஞ்சியது அல்லவா சந்திர பகவானைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய, பெறத் துடிக்கும் ஞானம்? இதை அளிப்பவளே இத்தல அம்மன் ஆவாள்.

சந்திர பகவான் அமிர்த சக்திகளை அளிக்கவல்லவர் என்பது நீங்கள் அறிந்ததே. எனவே சந்திர பகவான் வர்ஷிக்கும் சந்திர அமிர்த சக்திகளை மற்றவர்கள் பெற எந்த அளவிற்கு நாம் பாடுபடுகிறோமோ அந்த அளவிற்கு சந்திரனைப் பற்றிய அறிவும், கிரகங்களைப் பற்றிய தெளிவும், கிரக சஞ்சாரங்கள் பற்றிய நுணுக்கமும் விருத்தியாகும். N2023 என்ற நூபுர வருடம் இத்தகைய ஞானத்தை அளிக்கக் கூடியதால் திருக்கச்சூர் திருத்தலத்தில் கிட்டும் நந்தி மூர்த்தி ஔஷதம் என்ற மண் துகள்களை தேனில் குழைத்து, கலந்து அஸ்வினி, ஆயில்யம், ரோகிணி போன்ற நட்சத்திர நாட்களில் அடியார்களுக்கு தானம் அளிப்பதால் கிட்டும் நோய் நிவாரண சக்திகளை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

18 கர ஸ்ரீதுர்காதேவி
ஒன்பத்துவேலி

வெறும் உடல் நோய்களை மட்டும் தீர்ப்பதல்ல திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் அளிக்கும் பிரசாதம், மன இருளை மாய்ப்பது தாயார் இருள்நீக்கி அம்மனின் கருணை கடாட்சம், சோம கலாம்பாள் ஒவ்வொரு கலையிலும் அருளும் சந்திர கலை ஔஷதம், தேயும் எதிர்மறை குணப்பாடுகள். இவ்வாறு யுகக் கணக்கில் வர்ணிக்க வல்லதே திருக்கச்சூர் திருத்தல மருந்தீசர் பிருத்வி கோல ஔஷத நிவாரண சக்திகள், இத்துடன் குரு ஹோரையில் கிட்டும் அளப்பரிய லட்சுமி கடாட்ச சக்திகளும் சேர்ந்து கொண்டால் அதன் மகிமை எப்படி இருக்கும்?

இப்படி ஒரு பிரசாதத்தை மார்கழி மாதத்தில் அடியார்களுக்கு வர்ஷித்த பெருமையை உடையதே நம் அகஸ்தியர் ஆஸ்ரமம். இது என்றோ நடந்த அதிசயம், அற்புதம் கிடையாது, அடியார்கள் மனம் வைத்தால் மீண்டும் இத்தகைய ஒரு அமிர்த வர்ஷத்தை உருவாக்கலாம், எல்லாம் உங்கள் திருக்கரங்களில் ...!

திருக்கச்சூர் ஸ்ரீமருந்தீஸ்வரர் ஆலயத்தில் கிட்டும் மருந்துப் பிரசாத மண் உருண்டையை அவரவர் கையால் ஒரு பிடி அளவு எடுத்து, கவனிக்க ஒரு பிடி அளவு மட்டும் எடுத்து, அதை மூன்று லிட்டர் தேனில் கலந்து இந்த தேனால், பசு வெண்ணெயால் ரொட்டி துண்டுகளுக்கு தடவி ஒருவருக்கு இரண்டு ரொட்டித் துண்டுகள் என்ற கணக்கில் எந்த திருத்தலத்தில் வேண்டுமானாலும் மேற்குறித்த நட்சத்திர நாட்களில் தானம் அளிக்கலாம், பலன் பெறலாம், நலம் குவிக்கலாம்.

தானம் பெறும் ஒரு சிலர் இந்த ரொட்டித் துண்டுகளில் மண் இருப்பதாக குறை கூறலாம், ஆனால், இது நிச்சயமாக மண் அல்ல, நோய் நிவாரண சக்திகள் குசா நிலையில், ஒன்பத்துவேலி தத்துவ நிலையில் குவிந்த சோமகலா சக்திகளே ஆகும். இதை மனிதர்கள் புரிந்து கொள்ள குருவுடன் கூடிய 600 பிறவிகள் தேவைப்படும் என்பதே இந்த கச்சூர் மருந்து அளிக்கும் கூர்ம மூர்த்தி பிரசாத மகிமை ஆகும்.

கடவுள் உண்டா இல்லையா?

எதிர்மறை சக்திகளை மாய்க்க வந்த பராசக்தி அவதாரமே துர்கை மாதா ஆவாள். துர்கா தேவி 18 கரங்களுடன் துலங்கும் திருத்தலமே ஒன்பத்துவேலி, துர்கா தேவியின் 18 கரங்கள் குசா சக்தியைக் குறிக்கும் ஒன்பதிற்கும் பத்திற்கும் இடைப்பட்ட சக்தியாகத் துலங்குபவை மட்டும் அல்ல, மனிதனின் தூல சூக்குமமாய்த் துலங்கும் பதினெட்டு கோசங்களையும் கடந்து நின்று காக்கும் சக்திகளே துர்கை அன்னையின் கவசக் கரங்கள், காப்புக் கரங்கள், காக்கும் கரங்கள் ஆகும்.

கடவுள் என்று ஒருவர் உண்டா, இல்லை அது மக்களை ஏமாற்ற பிறர் கூறும் வாசகமா என்பது மக்கள் சமுதாயம் தோன்றிய காலத்திலிருந்தே வந்ததே. நான் கடவுள் என்கிறது வேதம். ராமன் என்ற ஒருவன் கடவுள் உண்டு என்கிறான், கிருஷ்ணன் என்ற ஒருவனோ கடவுள் இல்லை என்கிறான். இவ்வாறு உண்டு, இல்லை என்ற விவாதங்கள் முடிவு இன்றி தொடர்ந்து கொண்டே சென்றன.

ஸ்ரீமுருகப் பெருமான் ஒன்பத்துவேலி

கடவுள் உண்டு ... கடவுள் இல்லை
கடவுள் உண்டு உண்டு ... கடவுள் இல்லை இல்லை
கடவுள் உண்டு உண்டு உண்டு ... கடவுள் இல்லை இல்லை இல்லை
         ... ... ...
         ... ... ...
கடவுள் உண்டு (18 முறை) ... கடவுள் இல்லை (18 முறை)

இவ்வாறு தொடர்ந்த வாக்குவாதங்கள் நம் பூமியில் மட்டும் அல்ல, அண்ட சராசரங்களில் உள்ள அனைத்து லோகங்களிலும் தோன்றிப் பெருகின. எந்த விவாதத்திற்கும் இறுதி முடிவு என்பது நவநாத சித்தர்கள் அளிப்பதே என்பதால் நவநாத சித்தர்களிடம் இந்த விவாதம் எடுத்துச் செல்லப்பட்டது. நவநாதசித்தர்கள் ‘கடவுள் உண்டு’ என்பதை தெளிவாக, சந்தேகத்திற்கு இடமின்றி தீர்ப்பளித்தனர். இந்த இறுதி முடிவை, சித்தர்களின் தீர்ப்பை நவநாத சித்தர்களின் சார்பில் பிரபஞ்சம் அனைத்திற்கும் வெளியிட்டவரே ஸ்ரீதிரிநாமகண்ட மகரிஷி ஆவார்.

இந்த அரிதிலும் அரிய தீர்ப்பு அளிக்கும்போது அதற்கு சாட்சியாக நின்ற தெய்வமே ஸ்ரீபதினெட்டு கர துர்கை ஆவாள்.

இறுதி தீர்ப்பு வழங்கப்பட்ட திருத்தலமே ஒன்பத்துவேலி ஆகும்.

இறுதி தீர்ப்பு அளிக்கும்
உச்சநீதி மன்றம் ஒன்பத்துவேலி

ஏன், ஒன்பத்துவேலி இந்த இறுதி தீர்ப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒன்பது பத்து வேலி, 9+10=19, என்பதாக கடவுள் உண்டு, கடவுள் இல்லை என்ற விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் இந்த 18 விவாதங்களுக்கும் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், 19வது வேலியாக திகழ்ந்ததே நவநாதசித்தர்களின் தீர்ப்பு என்பதே இதன் காரணமாகும்.

நவநாதசித்தர்களின் தீர்ப்பினால் நமக்கு என்ன பயன் என்று உங்களுக்கு கேட்கத் தோன்றலாம். கடவுள் உண்டா என்ற விவாதத்தில் உங்களுக்கு எந்த வித சந்தேகமும் கிடையாது என்றாலும் வாழ்க்கையில் எத்தனையோ லௌகீக சந்தேகங்களும், ஆன்மீக ஐயப்பாடுகளும் உங்களுக்கு அவ்வப்போது தோன்றிக் கொண்டேதானே இருக்கும்?

அது போல எத்தகைய ஐயப்பாடுகள் தோன்றினாலும்,
1. தற்போது இருக்கும் வேலையில் தொடரலாமா, வேண்டாமா ?
2. தற்போது பார்த்த வரனை திருமணம் செய்து கொள்ளலாமா ?
3. நமக்கு வாய்த்திருக்கும் குருவை இறுதி வரை சற்குரு என்று நம்பி தெய்வீகத்தில் முன்னேறலாமா ?
என்று எந்த விதமான சந்தேகங்கள் தோன்றினாலும் சாட்சி பூதமாய், சாட்சி தேவதையாய் நின்ற ஸ்ரீஒன்பத்துவேலி துர்கை தேவியிடம் அமர்ந்து தொடர்ந்து பிரார்த்தனை செய்து வந்தால் நம் மனதில் தோன்றும் சந்தேகம் அனைத்தையும் நீக்கி தெளிவான முடிவை அளிப்பாள் தேவி. தெளிவு கிட்டும் வரை சாதனையைத் தொடர வேண்டும் என்பது அவசியம்.

ஏழுமலை எண் சீர் நெடில்

இந்த கேது ஆண்டில் ஏழுமலையானின் அனுகிரகத்தை அடியார்கள் அவசியம் பெற வேண்டும் என்று நம் சற்குரு தெரிவிப்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.

திருமலை வெங்கடாஜலபதியின் பெருமையை ஒரு கட்டுரையில் அடக்க முடியாது என்றாலும் நம் சற்குரு அளிக்கும் அரிதிலும் அரிய விளக்கத்தை இங்கு அளிக்கிறோம்.

உலகின் மிகப் பெரிய சுயம்பு மூர்த்தியான திருஅண்ணமலையை கிரிவலம் வந்துதான் திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீஅருணாசலேஸ்வர ஈசனை தரிசனம் செய்ய வேண்டும். பற்பல காரணங்களால் திருக்கோயிலில் உள்ள ஈசனை தரிசனம் செய்ய முடியாவிட்டால் மலை வடிவ ஈசனை கிரிவலம் வந்தாலே போதும், அனைத்து பலன்களையும் அடியார்கள் பெற்று விடுவார்கள்.

ஸ்ரீகருடாழ்வார் திருப்பதி

ஆனால், திருக்கோயிலில் எழுந்தருளிய ஈசனை மட்டும் தரிசனம் செய்து விட்டு மலை வலம் வராவிட்டால் திருஅண்ணாமலையானின் தரிசனம் முழுமை பெறாது என்பார் நம் சற்குரு. இதை அடியார்கள் நன்கு மனதில் கொள்ள வேண்டும்.

திருமலை வெங்கடாஜலபதி அளிக்கும் அனுகிரகமே ஏழுமலை எண் சீர் நெடில் என்ற தத்துவமாகும். ஏழுமலையான் அளிக்கும் பிரம்மாண்டமான, மகத்துவம் நிறைந்த, என்றும் வளரும் தத்துவம் என்பது இதன் மேலோட்டமான பொருள்.

இறை மூர்த்திகளைத் தரிசனம் செய்யும்போது பெண் தெங்வங்களை தலை முதல் பாதம் வரையிலும், ஆண் தெய்வங்களை பாதம் முதல் தலை வரையிலும் தரிசனம் செய்யும்படியும் நம் முன்னோர்கள் வழிகாட்டியுள்ளனர். இதே முறையில்தான் நாம் திருப்பதி வெங்கடாஜலபதியையும் தரிசித்தல் சிறப்பாகும்.

ஏழுமலையானை தரிசிக்கும் முன் முதலில் திருச்சானூரில் அருள்புரியும் ஸ்ரீஅலமேலுமங்காவை தரிசனம் செய்தல் அவசியம். ஆதிசேஷன் பாம்பு வடிவில் தினமும் பூலோகத்திற்கு வந்து அலமேலு மங்கை, ஏழுமலையானின் தரிசனத்தைப் பெற்ற பின்னரே மற்ற திருத்தலங்களுக்கு விஜயம் செய்கிறார் என்பதே நம் சற்குரு தெரிவிக்கும் தெய்வீக இரகசியம்.

ராகு கேது தோஷங்கள் வெகுவாகப் பரவி வரும் இக்காலத்தில், அதிலும் சிறப்பாக N2023 ஆண்டில் ஆதிசேஷனின் தரிசனம் அவசியமே. செவ்வாய் பகவான் வக்ர கதி கொண்டு பிரகாசிக்கும் நிலையில் இப்புத்தாண்டு தோன்றியுள்ளதால் அன்னையின் அனுகிரகத்தை இவ்வாறு பெற்றதால்தானே இவ்வருடத்தை எவ்வளவு பிரச்னைகளுக்கு இடையிலும் ஓரளவு இறைமயமாக்கிக் கொள்ள முடியும்.

பத்மசரோவரம் திருச்சானூர்

அறிந்தோ அறியாமலோ பலரையும் வருத்தும் நாக தோஷங்களுக்கு பரிகாரம் கிட்டும் தலம். நாக தோஷங்கள் என்பவை வெறும் திருமண உறவுகளை மட்டும் பாதிப்பவை அல்ல, சொத்துப் பிரச்னைகள், உறவினர்கள் பங்காளிகள் இடையே தோன்றும் பல்வேறு உரிமைப் பிரச்னைகள், சந்ததிக் குறைபாடுகள், முதலாளிகள் தொழிலாளிகள் இடையே தோன்றும் கருத்து வேறுபாடுகள் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கும் அடிப்படையாக இருப்பதால் இவ்வருடத்தில் அவசியம் ஸ்ரீஆதிசேஷ பகவானை முற்பகல் நேரத்தில் தரிசனம் செய்து வழிபடுதல் மிகவும் சிறப்பாகும்.

அலர்மேல்மங்கை தாயார் என்றும் வாடாத தாமரையை, என்றும் குறையா லட்சுமி கடாட்ச சக்திகளை அருளும் சானூக பத்மம் என்ற அரிய தாமரை மலர்களை இந்த திருக்குளத்திலிருந்துதான் பெற்றாள். பல உலகங்களிலும் தேடி, அலைந்து தனக்கு உரிய மணவாளனை நாடி வந்தபோது திருமாலைக் கண்டு சுவாமியின் திருமார்பில் உறையும் பாக்கியத்தைப் பெற்ற அலர்மேல்மங்கை தாயார் மலர் மாலையை பெருமாளுக்கு சூட்டிய பின்னர் இந்த திருச்சானூர் தீர்த்தத்திலிருந்து பெற்ற சானூக தாமரை மலர்களால்தான் பெருமான் திருவடிகளில் முதல் அர்ச்சனை செய்யும் பாக்கியத்தைப் பெற்றாளாம்.

காலப் போக்கில் செந்தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கிய இந்தப் பொய்கையில் தற்போது தாமரை மலர்களையே நாம் பார்க்க முடிவதில்லை என்றாலும் நம்பிக்கை, தகுதி உடைய பக்தர்களுக்கு நிச்சயம் அந்த மலர்களின் தரிசனம் கிட்டும். ஆதிசேஷ பகவான் தினமும் வணங்கி அருள்புரியும் அலர்மேல்மங்கை தாயாரை தரிசனம் செய்த பின்னர் பத்மசரோவரத்தில் ஒரு கண்ணாடி புட்டி, மரக்குடுவை அல்லது சுரக்குடுவையில் இத்தீர்த்தம் பெற்று அதில் சிறிதளவு அவ்வப்போது தங்கள் சொந்த ஊரில் உள்ள பெருமாள் மூர்த்திகளுக்கு அர்ச்சனை செய்யும் தாமரை மலர்கள் மேல் தெளித்துப் பயன்படுத்துதல் மிகவும் சிறப்பாகும், அரிதிலும் அரிய பாக்கியமுமாகும்.

இந்த வருடம் முழுவதும் இந்த பொய்கை தீர்த்தத்தால் சுத்திகரிக்கப்பட்ட தாமரைகளை அர்ச்சனைக்காகப் பயன்படுத்துதல் சிறப்பாகும். இதுவல்லாது அன்னதானத்திற்காகவும் இந்த தீர்த்தத்தை பயன்படுத்தி பலன்பெறலாம். அன்னதான முறை பின்னர் விவரிக்கப்படும்.

திருமலை

இங்கு சற்குரு அளித்த ஒரு அமிர்த வைபவத்தை பகிர்ந்து கொள்கிறோம். ஒரு முறை ஒரு அடியார், “சற்குருவே, திருப்பதி மலைமேல் இருக்கும் தெய்வம் வெங்கடேச பெருமாள்தானே?” என்று கேட்டார். நம் சற்குருவோ, “உங்களுக்கு இதில் என்ன சந்தேகம்? ஏழுமலை மேல் குடிஇருப்பவன் வெங்கடஜலபதி பெருமாள்தான்...”, என்றார். கேள்வி கேட்டவர் அமைதி அடைந்து அமர்ந்து விட்டார். சற்று நேரம் கழித்து மற்றோர் அடியார், “சார், நீங்கள் நான் கேட்பதைக் குறித்து தப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது...”, என்ற பீடிகையுடன், “திருப்பதி மலை மேல் இருப்பவன் முருகன்தான் ... பின்னால் வந்தவர்கள் முருகனின் வேலை எடுத்து விட்டு சுவாமி முகத்தை மறைக்கும் அளவிற்கு பெரிய நாமத்தை இட்டு விட்டு பெருமாள் என்று வணங்கி வருகின்றனர்..., என்று கூறுகிறார்களே? இது உண்மையா?” என்று கேட்டார்.

நம் சற்குருவோ சற்றும் சளைக்காமல் பெரிதாக நகைத்து, “ஆமாம் சார், இதில் என்ன சந்தேகம், குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் குடி கொண்ட இடம்தான்...என்றுதானே நம் பெரியோர்கள் கூறுகிறார்கள். அப்படியானால் திருப்பதி மலை மேல் இருப்பவன் சுப்ரமண்ய சுவாமிதான்...,” என்றார். இதைக் கேட்ட அனைத்து அடியார்களின் முகத்திலும் ஈயாடவில்லை, பல நிமிடங்களுக்கு அங்கு நிசப்தம் நிலவியது.

ஸ்ரீராமர் பாதம் (ஸ்ரீவாரு பாதாலு)
திருமலை

இப்போது உங்கள் நிலை என்ன? எந்த உண்மையையும் தாங்களாக அறிந்து கொண்டால்தானே அதில் எந்தவித சந்தேகமும் எழ முடியாது, மற்றவர்கள் சந்தேகங்களையும் உங்களால் தீர்த்து வைக்க முடியும்? இதற்காக நம் சற்குரு அருளிய தியான முறையே ஓங்கார வியாபக தியான முறையாகும்.

பலரும், “அடியேன் தினமும் மற்றவர்கள் நலனுக்காகப் பிரார்த்திக்கிறேன், பிரார்த்தனையின் முடிவில் ‘லோகா சமஸ்தா சுகினோ பவந்து’ அதாவது உலகம் அனைத்தும் நன்மை அடையட்டும்’ என்று கூறி அடியேனுடைய பிரார்த்தனையின் பலன் அனைத்தையும் இறைவனிடம், அல்லது சற்குருவிடம் சமர்ப்பித்து விடுவேன்...”, என்று கூறுவதைக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இவ்வாறு லோகா சமஸ்தா சுகினோ பவந்து என்று முழுமையாக, மனதார வாய் விட்டுச் சொல்லக் கூடியவர் அன்னை அமிர்தானந்தா ஒருவரே. மற்றவர்கள் இதற்கான முயற்சியை செய்யக் கூடாது என்று கிடையாது, நிச்சயம் அனைவரும் தாங்கள் இறைவனை நோக்கி முன்னேற இந்த முறையைப் பின்பற்றித்தான் ஆக வேண்டும்.

இந்தப் பிரார்த்தனையின் பின்னணியில் துலங்கும் மகத்துவத்தை அடியார்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே நம் சற்குருவின் எதிர்பார்ப்பு. ஒருவர் வீட்டில் எத்தனை பொருட்கள் இருக்கின்றன என்பதை யாராலும் சரியாகக் கூற முடியுமா ? எத்தனை துடைப்பங்கள் ஒருவர் வீட்டில் இருக்கின்றன என்பதே தெரியாதபோது அதில் எத்தனை குச்சிகள் இருக்கின்றன என்பதை எப்படி கணக்கிட முடியும்? இதே போல் பல்புகள், சுவிட்சுகள், ஜன்னல்கள், கதவுகள் என்று கணக்கிட ஆரம்பித்தால் ...

இது ஒரு புறம் இருக்கட்டும் ...

அவரவர் குடியிருக்கும் வீட்டைப் பற்றித்தான் கணக்கிட முடியாது என்றால் அவரவர் உடலில் உள்ள எலும்புகள், நரம்புகள், இரத்தக் குழாய்கள் என்ற விவரங்களையாவது ஒருவர் அறிவாரா ? தூலமான இவை தவிர சூட்சுமமாய்த் துலங்கும் 72000 நாடிகளைப் பற்றி அறிந்தவர் யார்? இதை நினைத்தால் தலையைச் சுற்றுமே...இவ்வாறு மனிதனின் இயலாமையை அறியாதவர்களா நம் பெரியோர்கள். இத்தகைய பலவீனமான மனிதனும் வாழ்வாங்கு வாழ வழிகாட்டும் தெய்வமே திருப்பதி வெங்கடாஜலபதி ஆவார்.

ஓங்கார வியாபக தியானம்

சுவாமி அருளும் அனுகிரகத்தைப் புரிந்து கொள்ள அடியார்களுக்கு உதவுவதே இங்கு அளிக்கப்பட்டுள்ள ஓம்கார வியாபக தியானம் ஆகும். பூலோகத்தில் ஒரு மனிதன் அடையக் கூடிய அதிகபட்ச தியான நிலையே ஓங்கார வியாபகமாகும். நிர்விகல்ப சமாதி நிலையில் மட்டும் மனிதர்கள் இத்தகைய ஓங்கார வியாபக நிலையைத் தாண்டி செல்ல முடியும் என்றாலும், ஒரு சற்குருவின் மேற்பார்வையில் நிர்விகல்ப சமாதி நிலை கைகூடும்போது அந்த சற்குருவே, சீடன் இந்த ஓங்கார வியாபக நிலையைத் தாண்டி வெகுநேரம் பரவெளி நிலையில் நிலைத்து விடாதபடி ஓங்காரத்தை சமாதி நிலையில் இருக்கும் சீடனின் காதில் ஓதி சீடனை பூலோக வாழ்விற்கு கூட்டி வந்து விடுவார்.

இத்தகைய சம்பவங்களை நீங்கள் பகவான் ராமகிருஷ்ணர் வாழ்விலும், ரமண மகரிஷியின் பாதாள லிங்க வாசத்திலும் கேள்விப்பட்டிருக்கலாம். அதனால்தான் நிர்விகல்ப சமாதி நிலை கூடும் முன் அனைத்து சாதகர்களும் சிறிது காலத்திற்கு ஓங்கார வியாபக தியானத்தில் ஈடுபடுவார்கள்.

தியான முறை ...முதல் கட்டம்...
வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி பத்மாசனத்தில், சுகாசனத்தில் அமர்ந்து கொள்ள வேண்டும். இடது மூக்கின் வழியாக சுவாசத்தை மெதுவாக, மிக மெதுவாக உள்ளே இழுக்க வேண்டும். இந்த தியானம் முழுவதிலுமே நம் கைவிரல்களை மூக்கு சுவாசத்தை சரிப்படுத்த பயன்படுத்தக் கூடாது. போதிய அளவு சுவாசத்தை உள்ளே இழுத்த பின் சுவாசத்தை மெதுவாக, மிக மெதுவாக வெளியே விட வேண்டும். இவ்வாறு குறைந்தது அரை மணி நேரம் பயிற்சி செய்ய வேண்டும். கண்களை திறந்து வைத்துக் கொள்வதோ, லேசாக மூடிக் கொள்வதோ அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.

ஆரம்பத்தில் நாம் நினைப்பதுபோல் வலது மூக்கிலோ இடது மூக்கிலோ நிச்சயம் சுவாசம் நிலைக்காது, இருந்தாலும் அது பற்றி நாம் கவலை கொள்ளத் தேவையில்லை, தொடர்ந்த பயிற்சியால் மட்டுமே நாம் விரும்பும் சுவாச நிலையை விரும்பும் மூக்கில் பெற முடியும்.

ஸ்ரீராமர் பாதம் திருப்பதி

உள் மனதில் ஓம் என்ற ரீங்கார துவனியுடன் மூக்கில் சுவாசம் பரவ வேண்டும். சுவாசத்தை உள்ளே விடுவதிலோ வெளியே விடுவதிலோ அவரவருக்கு இயல்பாய் அமையும் நேரத்திற்கு வைத்துக் கொள்ளலாம். இதில் எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது. சுவாசப் பயிற்சியின்போது நெற்றியில் சூடும் நாமத்தின் இடது பக்கத்தில் அமைந்துள்ள கோட்டில் இந்த சக்திகள் நிரவுவதாக பாவனை செய்து கொள்ளவும். எந்த அளவிற்கு தாயாரின் உருவ தியானத்தில் மனம் இலயிக்கிறதோ, அந்த அளவிற்கு அலர்மேல்மங்கையின் சந்திரகலை சக்திகள் இந்த சுவாசத்தில் அமையும்.

அடுத்ததாக, வலது மூக்கில் சுவாசம் நிரவுவதாக பாவனை செய்து கொண்டு ஏற்கனவே விவரித்ததுபோல் தொடர்ந்து பயிற்சி செய்யவும். இத்தகைய பயிற்சியில் சூரியகலை சக்திகள் சுவாசத்தில் நிறைந்து பூரிக்கும். பெருமாளின் உருவ தியானத்தோடு இந்த ஓங்கார சக்திகள் இணையுமாறு பாவனை செய்து வருவதால், பெருமாளின் சூரிய கலை சக்திகள் இந்த சுவாசத்தில் வியாபிக்கும். அவரவர் கொண்டுள்ள ஈடுபாடு, நம்பிக்கையைப் பொறுத்து அடியர்களுக்கு வலது இடது மூக்கில் தவழும் சூரிய கலை சந்திரகலை சக்திகள் தெளிவாக பரிணமிக்கும். இதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. இவ்வாறு சூரிய கலை, சந்திர கலை சுவாசத்தை சரியாக இனங் கண்டு கொள்ள முடிந்தால்தான் இரண்டாம் கட்ட ஓங்கார தியானத்திற்கு நாம் செல்ல முடியும்.

இரண்டாம் கட்டம் ...
இடது மூக்கில் சந்திர கலை பரிணமிக்கும் நேரம் முழுவதும் ஓங்காரத்தை ஓத வேண்டும். அலர்மேல்மங்காவின் தியானத்தைத் தொடர வேண்டும். ஒங்காரத்தை வாய் விட்டோ, மனதிற்குள்ளோ ஓதி வரலாம்.

திருப்பதி

சந்திர, சூரிய கலைகளின் ஞானம் தெளிந்த நிலையில்தான் சுசும்னா நாடியின் ஸ்பரிசமும் கிட்டும். பொதுவாக, மூன்று நிமிடங்களுக்கு மட்டுமே ஆரம்பத்தில் சுசும்னா நாடியின் வியாபகம் அமையும். இந்த நேரம் முழுவதும் ஸ்ரீராமரின் திருவடிகளை தியானித்தல் சிறப்பு.

இதைத் தொடர்ந்து சூரிய கலையில் சுவாசம் பரிணமிக்கத் தொடங்கும். அப்போது பெருமாளின் உருவ தியானத்தைத் தொடரலாம். உண்ணும் உணவைப் பொறுத்தும் உடல் ஆரோக்யத்தைப் பொறுத்தும் சூரிய சந்திர கலைகளின் வியாபகம் மாறுபடக் கூடும் ஆதலால் இதில் உண்டாகும் வித்தியாசத்தைப் பெரிதும் பாராட்ட வேண்டியதில்லை.

இவ்வாறு சூரிய சந்திர கலைகளில் மாற்றம் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கும் என்றாலும் மூச்சுப் பயிற்சியின் மொத்த நேரம் ஒன்றரை மணி நேரத்திற்கு மிகைப் படாமல் இருத்தல் நலம்.

சுசும்னா நாடியின் ஒளி வடிவைக் கண்டு விட்டால் அதன் பின்னர் அடுத்து சாதகனின் நிலையை சற்குருவே நேரில் வந்து கையாள முடியும் என்பதால் அவரவருக்கு உரிய சற்குருவே சீடனிடம் நேரிடையாக வந்து அவனை அரவணைத்து ஆட்கொள்வார்.

வராக தீர்த்தம் திருப்பதி

ஏழுமலையானின் அனுகிரகத்தைப் பெறும் விதமாக அடியார்கள் மேற்கொள்ள வேண்டிய தரிசன முறையாவது...
1. முதலில் திருச்சானுரில் ஸ்ரீஅலர்மேலுமங்கையைத் தலை முதல் பாதம் வரை தரிசனம் செய்ய வேண்டும். தாயாரைத் தரிசனம் செய்யும் முன் ஆதிசேஷ பகவானை தரிசனம் செய்தல் அவசியமே. அலர்மேல்மங்கை தாயை தரிசனம் செய்யும்போது கீர்க்கண்ட காயத்ரீ மந்திரத்தை ஓதி தரிசனம் செய்தல், தியானித்தல் சிறப்பு என்றாலும் நடைமுறையில் இது சாத்தியமில்லை என்று நினைப்பவர்கள், தாயார் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கும்போது கீழ்க்கண்ட மந்திரத்தை வாய் விட்டு ஓதிக் கொண்டு இருக்கலாமே...

யாதேவீ ஸர்வ பூதேஷு பர்த்தா வஸ்ய ரூபேண ஸமஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

ஆதிசேஷனை தரிசிக்கும்போது
ஓம் தத் புருஷாய வித்மஹே பாதுகா ரூபேண தீமஹி
தந்நோ ஆதிசேஷ ப்ரசோதயாத்
என்ற நோய் நிவாரண காயத்ரீயை ஓதுதல் சிறப்பு. உடல், மனத்தில் தோன்றும் அனைத்து தோஷங்களையும் களைவும் சக்தி பெற்றது இந்த அற்புத காயத்ரீ.

ஸ்ரீஆதிசேஷன் திருநீர்மலை

2. படியேறிச் சென்று திருமலை வராஹ தீர்த்தத்தில் நீராடி விட்டு ஸ்ரீராமர் பாதத்தை தரிசனம் செய்ய வேண்டும். வராக தீர்த்தத்தில் நீராடும்போது
கண்ணால் கண்ட கனிக்குத்தான்
கருத்துடன் கருகிய கவின்குளு
சுரம் மாற்ற அருள்வாயே
சுந்தர நாதா அண்ணாமலையானே
என்ற துதியை ஓதுதல் சிறப்பு.

ஸ்ரீவெங்கடாஜலபதி திருப்பதி

3. ராம பாத தரிசனத்தைத் தொடர்ந்து ஏழுமலையானை பாதாதி கேசமாக தரிசனம் செய்தல் வேண்டும். ஏழுமலையானை தரிசனம் செய்யும் போதுதான் அடியார்களுக்கு ஏழுமலை எண் சீர் நெடில் அனுகிரக சக்திகள் புலனாகத் தோன்றும். பொதுவாக, ஒரு நிமிடம், பத்து நிமிடம் என்றவாறு வெங்கடாஜலபதியின் தரிசனம் அமைந்தாலும் அந்த தரிசன நேரத்தின் அளவோ அவரவரின் ஆன்மீக சாதனையை ஒட்டி ஏழு பிறவிகள், 7 x 7 பிறவிகள், 7 x 7 x 7 பிறவிகள் என்றவாறு தொடர்ந்து கொண்டே, பெருகிக் கொண்டே செல்லும். இது அவரவர் சொந்த, தனிப்பட்ட அனுபவத்தால் மட்டுமே உணரக் கூடியது, உணர்ந்து தெளியக் கூடியது, ஆயிரம் பக்கங்கள் ஏழுமலையானின் தரிசன அனுகிரகத்தை விளக்கிக் கூறினாலும் அடியார்களால் இதைப் புரிந்து கொள்ள முடியாது.

சற்குருவைப் பெற்றவர்கள் நிச்சயமாக இப்பிறவிலேயே இந்த எண்சீர் நெடில் அனுகிரகத்தைப் புரிந்து கொள்ளலாம். நம் ஆஸ்ரம அடியார் ஒருவர் கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் சென்றுதான் இந்த அனுகிரகத்தைப் புரிந்து கொண்டாராம். நம் சற்குருவால் ‘சோம்பேறி’ என்று பாராட்டப் பெற்ற அந்த அடியாரே 40 வருடங்களில் எண்சீர் மகிமையைப் பற்றி புரிந்து கொள்ள முடிந்தது என்றால் உங்களைப் போன்ற சுறுசுறுப்பான அடியார்கள் நிச்சயம் 4 வருடம், ஏன், நான்கு மாத காலத்தில் கூட இந்த அனுகிரக சக்திகளைப் புரிந்து கொள்ளலாமே. அப்போது நீங்கள் உண்மையிலேயே ஏழுமலையானின் தாயினும் சாலப் பரிந்த அனுகிரகத்தை புரிந்து கொண்டு விட்டீர்களா என்ற சந்தேகமே உங்களுக்குத் தோன்றாது. காரணம் அந்நிலையில் நீங்கள் அனுபவிக்கக் கூடியது, ஆனந்தம், ஆனந்தமோ ஆனந்தம், பேரானந்தம், பெரும் பேரின்பம்.

என்னதான் அடியார்கள் தாங்கள் ஏழுமலையானின் அனுகிரக சக்திகளைப் புரிந்து கொள்ள முயற்சி செய்தாலும் அவரவர் நிலையைப் பொறுத்து கால அம்சங்கள் மாறுபடும் ஆதலால் தற்போது பெருமாளின் அனுகிரக சக்திகளைப் பெறும் வழி என்ன என்ற உங்களுடைய எண்ணம் நியாயமானதே. இதை அறியாதவர்களா மகான்கள்?

தங்கள் குடும்பத்திற்கும், உற்றம் சுற்றத்தினருக்கும் வேண்டிய லட்டுப் பிரசாதங்களை திருப்பதியில் பெற்று, பெருமாளின் ஏழுமலை எண்சீர் மகிமை சக்திகளைப் பெறும் முகமாக அவரவர் எத்தனை லட்டுப் பிரசாதங்களை வேண்டுமானாலும் திருப்பதியில் பெற்றுக் கொள்ளலாம். திருக்கச்சூர் திருத்தல மருந்துருண்டைகளைப் போல இந்த லட்டுப் பிரசாதங்களை தானமாக அளித்தலால், கிட்டும் பலன்கள் கோடி கோடியே.

ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீவெங்கடாஜலபதி
திருப்பதி

பெருமாள் தரிசனத்திற்குப் பின் எவ்வளவுக்கெவ்வளவு விரையில் இந்த லட்டுப் பிரசாதங்களை தானமாக அளிக்கிறோமோ அந்த அளவு சிறப்பானது. லட்டுகளில் முந்திரிப் பருப்பு, ஏலக்காய், கல்கண்டு எந்த திடப் பொருளும் இல்லாதவாறு அதை கைகளால் பொடித்துக் கொள்ளவும். திராட்சை, முந்திரி போன்றவற்றை அம்மியில் வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். இந்த இரண்டும் கலந்த லட்டுப் பிரசாதத்தில் போதுமான அளவு தேன் சேர்த்து பசு வெண்ணெய் தடவிய ப்ரெட்டுகளில் தடவி இந்த பெருமாள் பிரசாதத்தை எந்தத் திருத்தலத்தில் வேண்டுமானாலும் தானமாக அளித்து விடலாம்.

திருமலை மேல் உள்ள வராக தீர்த்தத்தில் ஸ்ரீவராகப் பெருமான் தன் பத்தினி ஸ்ரீவராகவாகிணி தேவியுடன் எழுந்தருளி உள்ளார். இந்த தேவியின் சிறப்புகளில் ஒன்றை மட்டும் நம் சற்குரு அளிக்கிறார். திருப்பதி மலையைச் சுற்றியுள்ள முக்கியமான 108 தீர்த்தங்களில் சிரஞ்சீவி தீர்த்தம் என்பதும் ஒன்றாகும். இந்த அற்புத தீர்த்தத்தில் நீராட நம் சற்குரு சிறுவனை கோவணாண்டிப் பெரியவர் அழைத்துச் சென்ற அடிமை கண்ட ஆனந்த நிகழ்ச்சியை ஏற்கனவே விளக்கியுள்ளோம்.

கடைசிவரை நம் கோவணாண்டியோ சிறுவன் வெங்கடராமனோ அந்த இளமையாக்கினார் தீர்த்தத்தில் நீராடமலே வந்து விட்டார்கள் ... அரும்பெரும் சித்த புருஷர்களுக்கே இந்த நீரோட்டம் பயன்தரவில்லை என்றால் பின்னர் யாருக்காகத்தான், எதற்காகத்தான் இறைவன் அந்த அற்புத தீர்த்தத்தை பூமியில் உருவாக்கினார் என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா?

கை விரல்களில் கட்டை விரல் சுக்கிர சக்திகளுடன் பொலிவது, கால் கட்டை விரல் குரு சக்திகளுடன் பொலிவது. கோவணாண்டி கால் கட்டை விரலால் திருப்பதியில் கிடந்த ஒரு கூழாங்கல்லை நெம்பி, சுக்கர சக்திகள் நிறைந்த இளமையாக்கும், ஒரு தீர்த்தத்தை பூலோகத்தவர்க்காக வெளியே கொண்டு வந்து அதன் தீர்த்த சக்திகளை புனருத்தாரணம் நிறைவேற்றினார். மீண்டும் அந்த தீர்த்த சக்திகள் பூமியினுள் சென்று மறைந்தபோது அந்த சக்திகளை மீண்டும் மக்களுக்குப் பயனபடுத்தும் வகையில் வெளியே கொண்டு வந்து பெருமாள் பிரசாதமாக அளிக்கும் மகத்தான பொறுப்பை ஏற்றுக் கொண்ட தேவியே ஸ்ரீவராகவாஹிணி தேவி ஆவாள்.

வராக சக்திகளே பூமியில் எவ்வளவு ஆழத்தில் மறைந்துள்ள தீர்த்த சக்திகளையும் வெளிக் கொணரும் அற்புத ஆற்றல் கொண்டவை. சுய நலம், பேராசை எண்ணம் கொண்டவர்களால் இந்த அதியற்புத தீர்த்தம் மாசு அடைந்து விடக் கூடாது என்பதால் தகுதி உடையவர்களுக்கு மட்டுமே, அதுவும் பெருமாள் பிரசாதமாகவே மற்றவர்களுக்கு அளிக்கும் தன்னலம் கருதா பண்புடையவர்களும் திருமலை வராக தீர்த்தத்தில் நீராடி வராக தீர்த்தம் பெற்று, இந்த தீர்த்தத்துடன் அலமேலுமங்கை புஷ்கரிணியில் உள்ள தீர்த்தத்தை கலந்து கொதிக்க வைத்து பின்னர் இத்துடன் தேன் மட்டும் கலந்து ரொட்டி, பிரெட் துண்டுகளில் தடவி லட்டுப் பிரசாதம் போல் இந்த சஞ்சீவி தீர்த்த பிரசாதத்தையும் தானமாக அளித்து விடலாம்.

திருப்பதி திருத்தலத்தில் மட்டுமே அளிக்கக் கூடிய ஒரு ஆடை தான முறையை நம் சற்குரு சிபாரிசு செய்கிறார். உடல் ஆரோக்ய நிலையில் உள்ள ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் அனைவருமே இந்த தான வழிபாட்டில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதன்படி அவரவரால் முடிந்த அளவு ஆடைகளை, வேட்டி, புடவை, உள்ளாடைகள், சிறுவர்கள் ஆடை அணிகலன்கள் போன்றவற்றை தங்கள் தோள், தலையில் சுமந்து சென்று படிக்கட்டுகள் வழியாக மேலேறிச் செல்ல வேண்டும். திருமலை உச்சியை அடைந்தவுடன் தக்க பாதுகாப்புடன் இந்த ஆடைகளை வைத்து விட்டு, போதுமான அளவு ஓய்வு எடுத்து விட்டு கீழிறங்கி வர வேண்டும். கீழே வரும்போது நடந்தோ அல்லது வாகனங்களிலோ ஏறி வரலாம். அடிவாரத்தை அடைந்த பின்னர் மேற்கூறிய முறையில் மீண்டும் அவரவர் சுமக்க முடிந்த அளவு ஆடைகளை எடுத்துக் கொண்டு படியேறி மீண்டும் மலை உச்சியை அடைய வேண்டும்.

இவ்வாறு அவரவர் உடல் ஆரோக்யம், பொருளாதார வசதியைப் பொறுத்து எவ்வளவு ஆடைகளை வேண்டுமானாலும் திருமலை மேல் கொண்டு சேர்க்கலாம். பின்னர் வெங்கடாசலபதியின் தரிசனத்திற்குப் பின் திருமலை திருத்தலத்தில், தீர்த்தக் கரைகளில், ராமர் பாதம், ஆகாச கங்கை போன்ற எந்த இடத்தில் வேண்டுமானாலும் இந்த ஆடைகளை தானமாக அளித்து விடலாம். எத்தகைய பழிவாங்கும் உணர்ச்சிகள், குரோதம் பகைமை எண்ணங்கள், மது, மாது, சூதாட்டம் போன்ற எதிர்மறை சக்திகள் அனைத்தையும் மாய்த்து சமுதாயத்தை பாதுகாக்கவல்ல ஒரே சாதனம் இதுவாகும்.

இந்த தான தர்ம முறையை பலர் ஒன்று சேர்ந்தோ அல்லது தனியாகவும் நிறைவேற்றலாம். ஒரே ஒரு எட்டு முழ வேட்டி, ஒன்பது கஜ புடவையை இம்முறையில் தானம் அளித்தால் கூட தானத்தின் பலன்களை ஒன்றுக்கு நூறாய், ஆயிரம் ஆயிரமாய், ஆனால் நற்குணங்களாக நற்பண்பு குணப் பரல்களாக திருப்பி அளிக்கும் வள்ளலே திருப்பதி வெங்கடாசலபதி பெருமாள்.

ஸ்ரீபோடா சுவாமிகள்

ஒரு முறை காஞ்சீபுரத்தில் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் ஆலய வளாகத்தில் காட்சி நல்கும் போடா சுவாமிகளை தரிசனம் செய்ய அந்த மாவட்ட ஆட்சியாளர் வந்திருந்தார். அன்றுதான் பதவியில் பொறுப்பேற்க வந்திருந்ததால் முதலில் உத்தம மகானான போடா சுவாமிகளை அவர் தரிசனம் செய்ய விரும்பினார். இனிப்புகள், பழங்கள், வேட்டி அங்கவஸ்திரம், பெரிய மலர் மாலை போன்ற பல மரியாதை பொருட்களை ஒரு பெரிய தாம்பாளத்தில் வைத்து அதை போடா சுவாமிகளின் திருவடிகளில் வைத்து வணங்கினார்.

மறுகணம் போடா சுவாமிகளோ, “போடா, தேவடியா பையா!” என்று கூறவே சுவாமிகளை நமஸ்கரித்தவர் திடுக்கிட்டு நின்றார். இப்படி ஒரு “வரவேற்பை” அவர் கனவிலும் எதிர்பார்க்கவில்லை... என்ன செய்வது என்று தெரியாமல் சுவாமிகளை விட்டு விலகி சற்று தூரம் வந்து நின்றார். அவர் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிய ஆரம்பித்தது. அங்கே நம் கோவணாண்டி பெரியவர் சிறுவன் வெங்கடராமனுடன் நின்று கொண்டிருந்தார். இவ்வாறு உடல் தெப்பமாக நனைய வேர்த்து விறுவிறுத்து நின்ற ஆட்சியாளரை நோக்கி, கோவணாண்டி, “என்ன நைனா, இப்படி விக்கித்துப் போய்விட்டாயே... அப்படி என்ன சுவாமிகள் கேட்டார்?” என்று ஒன்றுமறியாத அப்பாவி போல் அவரிடம் கேட்டார். அந்த ஆட்சியாளரும் தயங்கி தயங்கி கண்கள் நீர் மல்க சுவாமிகள் தன்னை திட்டி விட்டதாகக் கூறி தன்னுடைய வருத்தத்தை வெளியிட்டார். போடா சுவாமிகள் கூறிய வார்த்தைகளை கேட்ட கோவணாண்டி, “நைனா, நீ நினைப்பது போல் ஒரு சாதாரண மகான் அவர் கிடையாது, சுவாமிகள் திட்டுவதாகத் தோன்றும் வார்த்தைகளில் ஆயிரம் ஆயிரம் உபதேசங்கள் இருக்கும். நாம் நலமடைய ஒரு பெரிய மகானால் வர்ஷிக்கப்பட்ட அமுத மழையே அது ... சரி, உன்னுடைய அம்மாவின் கோத்திரம் என்ன என்று கூற முடியுமா?” என்று கேட்டார் கோவணாண்டி.

மிகவும் தயக்கத்துடன் தன்னுடைய அம்மா பொட்டு கட்டிய குலத்தைச் சேர்ந்தவர், அதாவது சுவாமிக்கு சேவை செய்யும் தேவடியாள் குலத்தைச் சேர்ந்தவர் என்பதைக் கூறினார். பெரியவர் நகைத்து, “நீ இப்போது ஒரு பெரிய கலெக்டர்... உன்னுடைய பூர்வீகம் தெரிந்த ஒன்றிரண்டு நபர்கள் உன்னுடைய குலத்தைப் பற்றி இழித்துக் கூறினாலும், அவர்களுடைய அவமரியாதையை வெளியே காட்ட முடியாது ... ஆனால் அவர்கள் மனதில் தோன்றும் இத்தகைய எண்ணங்கள் அவர்கள் பார்வையில், செயலில் நிச்சயம் பிரதிபலிக்கும் ... அந்த அவச் சொல் கூட உனக்கு வரக் கூடாது என்று தாயினும் சாலப் பரிந்து உனக்கு இந்த அனுகிரகத்தை சுவாமி அளித்துள்ளார். இனிமேல் எவனும் உன்னைக் கனவிலும் நீ ஒரு தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவன் என்று நினைத்து ஏளனம் செய்ய மாட்டான்... இப்போது சென்று நீ மீண்டும் சுவாமியை வணங்கு ... அடியேன் சொன்னதில் உள்ள அர்த்தம் புரியும்...” என்று கூறினார்.

பூர்வ ஜன்ம விதி வசத்தால் ஒன்றுக்கு மூன்று பிரபஞ்சம் காணா உத்தம குருமார்களை தரிசனம் செய்த அந்த மாவட்ட ஆட்சியாளர் கோவணாண்டி கூறிய வார்த்தைகளால் பெரிதும் ஆறுதல் அடைந்து, மீண்டும் போடா சுவாமிகளின் பாதங்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். என்ன ஆச்சரியம், போடா சுவாமிகள் ஒன்றுமே கூறாமல் அமைதியாக இருந்தார்... ஆட்சியாளருக்கு பரம ஆனந்தம் ... நன்றிப் பெருக்குடன் தனக்கு நல்வழி காட்டிய கோவணாண்டியைத் தேடி ஓடி வந்தார் ... அவர் எங்கே அங்கு இருந்தார் ... தாங்கள் வந்த வேலை முடிந்து விட்டால் அந்த இடத்தில் இருப்பார்களா என்ன உத்தம குருமார்கள் ...?!

ஸ்ரீசோமாஸ்கந்தர் திருப்பதி

கர்ம வினை என்பது வேறு, கர்ம வினையால் பாதிக்கப்பட்ட மனிதனின் தன்மை வேறு ... நம்மில் பலரும் குருடர்களை, முடவர்களை அவர்கள் கர்மவினைக்காக அவர்களை ஏளனப்படுத்துவது இயல்பு. ஆனால், எந்த மகானும் கர்மத்தையும், கர்ம வினையையும், அதை அனுபவிப்பவர்களையும் இணைத்து அவர்களை அவமரியாதைப் படுத்துவது கிடையாது, கர்ம வினைகள் மாயமாக தங்கள் உடல், உயிர் அனைத்தையும் அர்ப்பணிப்பவர்களே மகான்கள். ஆனால், இந்த தியாகம் ஒரு பிறவியில், ஓராயிரம் பிறவிகளில் கனிந்து விடுமா, நிச்சயம் கிடையாது. ஆனால், எதற்கும் ஆரம்பம் என்று ஒன்று உண்டு அல்லவா? கர்மவினையைத் தனியாக பிரித்து அதைக் களைய பாடுபடும் தன்மையை ஆரம்ப அனுகிரகமாக அளிப்பதே பெருமாள் பிரசாதமாகும். இதை நாம் பெறக் கூடிய ஒரு திருத்தலம் திருமலை.

ஒரு முறை ஒரு குக்கிராமத்தில் காஞ்சி கனிந்தகனி பரமாச்சாரியார் முகாமிட்டிருந்தார்கள். சுற்றிலும் அடர்ந்த காடு. தன்னுடைய பூஜை, அனுஷ்டானத்திற்கு தேவைப்படும் வில்வ தளங்கள் அந்த அடர்ந்த காட்டில் கிடைக்குமா என்று அங்குள்ளவர்களிடம் விசாரித்துபோது அந்த கிராமத்து மக்களோ அந்த ஊர் அருகில் வில்வ மரம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தாலும் பூஜைக்காக வில்வ பத்திரங்களை பெரியவா கேட்கும்போது அதை எப்படியாவது கொண்டு வந்து சேர்ப்பது தங்கள் கடமை என்று வாக்களித்தனர்.

மறுநாள் விடியற்காலை அவர்கள் வாக்களித்தபடியே கனிந்தகனியின் பூஜை, அனுஷ்டானத்திற்குத் தேவையான புதிய வில்வ தளங்கள் வந்து சேர்ந்தன. பூஜைகளும் தங்கு தடையின்றி நடைபெற்றன. பூஜை நிறைவில் அந்த ஊரை விட்டு பெரியவாளின் முகாம் அடுத்த ஊருக்கு புறப்படத் தயாராக இருந்தது. அப்போது கனிந்த கனி மடத்து சிப்பந்திகளை அழைத்து பெரியவாளின் பூஜைக்காக வில்வ தளங்கள் அளித்தவரைக் கண்டு, மடத்திற்கு அழைத்து வரும்படி பணித்தார்.

அப்போது ஒரு இளவயது இளைஞன் தான்தான் பெரியவாளின் பூஜைக்கான வில்வ தளங்களைப் பெற்று அளித்ததாகக் கூறவே அவனுடைய பூர்வீகம், உற்றம், சுற்றம் போன்றவற்றை விசாரித்து விட்டு இவ்வாறு வில்வ தளங்கள் எளிதாக கிடைத்தனவா என்றும் ஒன்றும் அறியாதவர்போல் பெரியவா விசாரிக்கவே அந்த இளைஞனும், “இல்லை சுவாமி, மிகுந்த சிரமத்துடன்தான் பல மைல்கள் நடந்தே காட்டினுள் உள்பகுதிக்கு சென்று இந்த வில்வ தளங்களை தினமும் பறிக்க வேண்டி இருந்தது. தினமும் இவ்வாறு வில்வ தளங்களை பறித்து வந்தால்தானே அவை புதியதாக (fresh) இருக்கும்...,” என்றான்.

பெரியவாளும் மகிழ்ந்து, “சரிப்பா, அற்புதமான காரியம் செய்திருக்கிறாய், எனக்கு மிகவும் சந்தோஷம், இந்த கைங்கர்யத்திற்கு உபகாரமாக நீ மடத்திலிருந்து என்ன எதிர்பார்க்கிறாய், அதைக் கொடுக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு...,” என்று கூறவே அந்த இளைஞனும் அடுத்த கணம், “சுவாமி, நீங்கள் இந்த அற்ப திருப்பணிக்கு உபகாரம் செய்வதாக இருந்தால் எனக்கு முக்தியை அளிக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன்...,” என்றான். பெரியவாளைச் சுற்றி இருந்த அனைவரும் திடுக்கிட்டனர், இதுவரை யாருமே பெரியவாளிடம் கேட்காத ஒரு அனுகிரகம், பெரிய பெரிய வித்வான்கள், உயர்ந்த வேத வித்துகள், அரசியல் அதிகாரத்தில் உயர்ந்த பதவியை வகித்தவர்கள் என எவருமே கேட்டிராத ஒரு அனுகிரகத்தை படிப்பறிவில்லாத அந்த கிராமத்து இளைஞன் வினயத்துடன் தன்னுடைய வேண்டுகோளை பெரியவாளின் முன் வைத்த அதிசயத்தைக் கண்டு அனைவரும் அடுத்து பெரியவர் இந்த எப்படி ‘deal’ செய்யப் போகிறார் என்ற ஆவலில் பெரியவாளின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இதற்கெல்லாம் சலனம் கொள்பவரா கனிந்த கனி... தனக்கே உரிய பொறுமையுடன் ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு, “அடேயப்பா, இவ்வளவு சின்ன வயதில் இவ்வளவு பெரிய அனுகிரகத்தைக் கேட்கிறாயே... பரவாயில்லை... உனக்கு முக்திதான் வேண்டுமா ... இல்லை அழகிய மனைவி, பெரிய பங்களா, கார் போன்ற வசதிகள் இவை வேண்டாமா?” என்று கேட்டார். அந்த இளைஞனோ தன்னுடைய கோரிக்கையில் உறுதியாக இருந்தான்...,“சுவாமி, எனக்கு முக்தி ஒன்றுதான் வேண்டும். ஒரு வேளை அதைத் தர உங்களுக்கு விருப்பமில்லாவிட்டால், அதனால் பரவாயில்லை...,” என்று கூறி விட்டு அமைதியாக இருந்தான். இளைஞனின் வேண்டுகோளில் இருந்த உறுதிப்பாடு அனைவரையும் உலுக்கி விட்டது என்றே கூற வேண்டும்.

ஸ்ரீரெங்க பஞ்சமி அன்று
நகர் திருத்தலத்தில் ஒலித்த
பாஞ்சசன்ய சங்கு நாதம்!

சில நிமிடங்கள் அமைதியாக கழிந்தன ... சற்று நேரம் சென்ற பின்னர், பெரியவா, “சரிப்பா நீ விரும்பியபடியே முக்தியை அளிக்க கடவுள் உனக்கு துணை நிற்பார்... போய் வா...,” என்று அந்த இளைஞனுக்கு விடை கொடுத்து அனுப்பினார் கனிந்த கனி.

வருடங்கள் உருண்டோடின ...
ஒரு நாள் பெரியவா ஒரு கோயில் திருக்குளத்திற்கு அருகில் இருந்தபோது மடத்து சிப்பந்தி ஒருவர் மடத்திற்கு வந்திருந்த தந்தியை பெரியவாளிடம் காண்பித்தான். அதில் அந்த இளைஞன் இறைவனடி அடைந்து விட்ட செய்தி இருந்தது. பெரியவா பதில் ஒன்றும் கூறாமல், அங்கிருந்த திருக்குளத்தில் இறங்கி நீராடத் தொடங்கினார். நீராடிய பின்னர் தீர்த்தக் கரைக்கு வந்து சில பூஜை அனுஷ்டானங்களை செய்யத் தொடங்கினார். சில நிமிடங்கள் கழித்து மீண்டும் தீர்த்தத்தில் இறங்கி நீராடத் தொடங்கினார். அருகில் இருந்த பக்தர்களுக்கோ, மடத்து சிப்பந்திகளுக்கோ பெரியவாளின் செயல் விநோதமாக இருந்தது. அதிக பட்சம் ஒரே ஒரு முறை மட்டுமே திருக்குளத்தில் நீராடுவதை தன்னுடைய அனுஷ்டானமாகக் கொண்டிருந்த பெரியவர் அன்று பல முறை தொடர்ந்து தீர்த்தத்தில் நீராடியது ஏன் என்று யாருக்கும் புரியவில்லை.

குஞ்சரா குரங்குகள் திருப்பதி

இதைப் பற்றி ஜகத்குருவிடம் கேட்க முடியுமா என்ன ?
பல முறை நீராடிய பின்னர் அங்கிருந்த பக்தர்களிடம் தன்னுடைய செயலுக்கான காரணத்தை விவரித்தார் பெரியவா. “அன்று வந்த இளைஞன் தனக்கு முக்தி அளிக்கும்படி பிரார்த்தனை செய்தான். நானும் அதை தருவதாக வாக்களித்து விட்டேன். இன்று அவன் மரணம் அடைந்து விட்டதாக செய்தி வந்தது. அப்போது அவனுக்கு எட்டு பிறவிகள் பாக்கி இருந்தன. அத்தனை பிறவி கர்மவினைகளையும் தீர்த்தாக வேண்டுமே, அதனால்தான் இந்த தீர்த்தத்தில் 16 முறை நீராடினேன்,” என்று தான் ஒரு இளைஞனுக்கு முக்தி அளித்த அரிய அரிய செயலை சர்வ சாதாரணமாக விளக்கினார் காஞ்சி கனிந்த கனி.

பிறப்புத் தீட்டும், இறப்புத் தீட்டும் மகான்களுக்கே உண்டு. மனிதர்களுக்கு கிடையாது என்பார் நம் சற்குரு. இது புரிந்தால்தான் ஏன் கனிந்த கனி 16 முறை நீராடினார் என்ற இரகசியம் புரியவரும். வெளிப்பார்வைக்கு ஒரே ஒரு தீர்த்த நீராடல் என்பதில் ஒரு பிறவி அனைத்திலும் விளையும் கர்ம வினையைக் களைய வல்லவர் கனிந்த கனி என்றால் சுவாமிகளின் பெருமைதான் என்னே என்னே? இவ்வாறு கர்ம வினைகளை நீக்கி முக்தி அளிக்கும் அரிய அனுகிரகத்தை தங்கத் தாம்பாளத்தில் வைத்து அளிக்கவல்ல தெய்வமே திருப்பதி வெங்கடாஜலபதி ஆவார்.

அரிதிலும் அரிய இந்த முக்தி அனுகிரகத்தை தன் பக்தர்களுக்கு குரு பிரசாதமாக வழங்கவல்லவரே நம் சற்குரு !!

குஞ்சரா என்ற அரிதான குரங்குகளைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். இத்தகைய அபூர்வ வகை குரங்குகள் உலவும் புனித பூமியே திருப்பதி ஆகும். பலருடைய இல்லங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் இவற்றில் நிலவும் வாஸ்து தோஷங்கள் பலப்பல. திருப்பதி திருத்தலத்தில் உலவும் இந்த குஞ்சரா குரங்குகளின் தரிசனம் பெற்று, முடிந்தால் சாஷ்டாங்கமாக இந்த குரங்குகளுக்கு நமஸ்காரம் தெரிவித்து இதே வணக்கத்தை தங்கள் இல்லங்கள், நிலங்களில் நிறைவேற்றுவதால் களையப்படும் வாஸ்து தோஷங்கள் எண்ணற்றவை. பல நாட்களாக, மாதங்களாக தொடரும் கோர்ட் வழக்குகளால் துன்பப்படுவோர் இத்தகைய வழிபாடுகளால் நல்ல தீர்வைக் காண்பர்.

சிவ தீர்க யோக சிவராத்திரி

பலவிதமான அற்புத ஆன்மீக சிறப்புகளுடன் பொலிவதே பிப்ரவரி 18, 2023 அன்று அமையும் சுபகிருது வருட மகா சிவராத்திரி தினமாகும். தீர்க ஆயுள் வர, வள சக்திகளை அளிப்பதே சனிக் கிழமை. இத்துடன் மகாபிரதோஷமும், வியதிபாத யோகமும், 60 நாழிகையும் அமையும் சித்த யோக முகூர்த்த அம்சங்கள் கூடுவது என்பது வாழ்வில் கிடைத்தற்கரிய பேறே.

இத்தகைய அபூர்வ முகூர்த்த நாளில் நிகழ்ந்த அற்புதங்கள் கோடி கோடியே. அதில் ஒன்றே குபேர மூர்த்தியானவர் மனிதனை தன் வாகனமாக எம்பெருமானிடமிருந்து பெற்ற வைபவமாகும். இந்த தெய்வீக அனுபவம் நிகழ்ந்த திருநாளே சுபகிருது வருட சிவராத்திரி திருநாளாகும். இந்த வைபவம் நிகழ்ந்த திருத்தலமே திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்த மாத்தூர் திருத்தலமாகும். மற்ற தேவர்களும், தெய்வ மூர்த்திகளும் பசு, ஆடு, மயில் போன்ற மிருகங்களையே தங்கள் வாகனமாக கொண்டாலும் இவ்வாறு மனிதனை வாகனமாகப் பெற்ற ஒரே தெய்வ தேவ மூர்த்தியே குபேரன் ஆவார்.

ஸ்ரீகுபேர மூர்த்தி மாத்தூர்

ஏன் மனிதனை குபேரன் தன் வாகனமாக ஏற்றுக் கொண்டார், இல்லை மனித வாகனமே எம்பெருமானால் குபேர மூர்த்திக்கு அளிக்கப்பட்டது என்பதை இந்த சிவராத்திரி நாள் முழுவதும் அல்லது அதற்குப் பின்னும் தொடர்ந்து ஆத்ம விசாரம் செய்து கொண்டே வருவதும் எத்தகைய ஏழ்மை நிலையிலும் பணச் செலவே இல்லாமல் குபேர சம்பத்தை நல்கக் கூடிய சித்தர்கள் அளிக்கும் வழிபாட்டு முறையாகும்.

நம் சற்குருவுடன் வடஇந்தியா யாத்திரை சென்றிருந்தபோது கேதார்நாத் மலைப் பாதையில் மேலேறிச் செல்லும்போது பெரும்பாலான அடியார்களுக்கு உடல் மிகவும் சோர்ந்து போய்விட்டது, அரை மணி நேரத்தில் ஏறி இறங்கும் திறன் கொண்ட இளவயது அடியார்கள் கூட பலமே இல்லாமல் உடலும் உள்ளமும் சோர்வடைந்து இரண்டு அடிக்கு ஒரு முறை தரையில் விழுந்து பல நிமிடங்கள் ஓய்வெடுத்த பின்னரே அடுத்த அடியே அவர்களால் வைக்க முடிந்தது.

இதற்கான விளக்கத்தை பல மாதங்கள் கழித்து அளித்தார் நம் சற்குரு. “அந்த கூட்டத்தில் எதுவுமே நிகழாமல் கேதார்நாத் திருத்தலம் வரை சென்று திரும்பிய பல அடியார்களும் இருக்கத்தானே செய்தார்கள்? இதையும் நாம் ஆத்மவிசாரம் செய்து பார்க்க வேண்டும். யார் யார், நாம் மட்டும் இறை தரிசனம் செய்தால் போதாது, கேதார்நாத் இறைவனின் தரிசனப் பலன்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்று மனதார விரும்பினார்களோ அவர்கள் தோள் மேல் ஒவ்வொரு தோளிலும் இருபது ஆட்கள், முப்பது ஆட்கள் என்று அவரவருடைய தியாக உள்ளத்திற்கேற்ப ஆன்மீக பலத்திற்கு ஏற்ப அவர்களுடைய மூதாதையர்களை அவர்கள் தோளில் ஏற்றி அனுப்பி வைத்தேன். இந்த ‘பாரம்’ தாங்க முடியாத காரணத்தால்தான் அடியார்கள் மிகவும் தள்ளாடிப் போனது. அதே சமயத்தில் இந்த அதீத பாரத்தையும் தங்கள் ஆன்மீக சக்தியால் தாங்கி சிரமப்பட்டு மேலேறி வந்தவர்களும் உண்டு. அதையும் நாம் மறுக்க முடியாது. அதனால் தள்ளாடிய அடியார் மிகவும் ஆன்மீக காரியங்கள் செய்தார், ஸ்டெடியாக வந்த அடியார்கள் எந்த தியாகத்தையும் புரியவில்லை என்று நாம் குழப்பிக் கொள்ளக் கூடாது...”

இது என்றோ நடந்த ஆன்மீக திருப்பணி அல்ல. இன்றும் தம் அடியார்களுக்கு இத்தகைய சித்த அனுகிரகத்தை அள்ளி வழங்க தயாராக உள்ளார் நம் சற்குரு. பொதுவாக, குபேர மூர்த்தி தான் வாகனம் பெற்ற சிவானுபவத்திற்கு நன்றி கூறும் விதமாக குபேர மூர்த்தி சுபகிருது வருடத்தில் மாத்தூர் திருத்தலத்தில் மனித வடிவில் எழுந்தருளி இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேக ஆராதனைகளை நிறைவேற்றுவார் என்பது நம்முடைய எதிர்பார்ப்பு. ஆனால், மனித எதிர்பார்ப்பிற்கு பல படிகள் மேலே சென்று ஒவ்வொரு மனிதனையுமே தன்னுடைய வாகனமாகக் கொண்டு அபிஷேக ஆராதனைகளை இறை மூர்த்திகளுக்கு நிறைவேற்ற சித்தமாக உள்ளார் என்றால் குபேர மூர்த்திக்கு நன்றி கூற வார்த்தைகள்தான் உண்டா என்ன?

குபேர மூர்த்தியின் அனுகிரகத்திற்கு நன்றிக் கடன் செலுத்தும் முகமாக சிவராத்திரி திருநாளில் இறை மூர்த்திகளுக்கு குபேர சக்திகள் செறிந்த திரவியங்களால் தங்களால் இயன்ற அளவு அபிஷேக ஆராதனைகளை நிறைவேற்ற வேண்டும். குபேர சக்திகள் செறியும் பல மலர்கள், கனிகள், மூலிகைகள் உண்டு. உதாரணமாக, கருங்குவளை தாமரை அதாவது நீலோத்பல மலர்கள், குறைந்தது மூன்று நாட்கள் கங்கை, காவிரி போன்ற புனித தீர்த்தங்களில் ஊறிய வெட்டி வேர், நன்னாரி, விளாமிச்சை வேர்கள் ஊறிய தீர்த்தம், கொல்லிமலையில் மட்டுமே கிட்டும் கொம்புத்தேன், பெரிய நெல்லிக்காய், ஜம்பு நாவல் பழம் போன்றவை குபேர சக்தியுடன் பொலிபவையாகும். அனைத்திற்கும் மேலாக ஒரு நெல்லிக் கனியை அர்ச்சித்தாலும், ஆயிரம் நெல்லிக் கனிகளை குவித்தாலும் அனைத்தும் இறைவனின் ஆராதனை என்ற ஒரு காரணத்திற்காகத்தான் என்ற தியாக மனப்பான்மையை நெஞ்சில் நிறைத்துக் கொண்டால் நிச்சயம் அவர்கள் உடல், மனம், உள்ளத்தில் குபேர சக்திகள் நிறையும், பொங்கித் ததும்பும்.

கொம்புத்தேனைப் பெறுவதற்காகக் கூட கொல்லிமலைக்கு செல்லக் கூடாது என்பது முக்கியம். அடியார்களின் ஆழ்ந்த பிரார்த்தனை எதையும் சாதிக்கும்.

காமதகனம்

வரும் மார்ச் மாதம் 6ந் தேதி, மாசி மாதம் 22ந் தேதி திங்கட் கிழமை அமையும் காமதகனப் பண்டிகை வரலாற்றுச் சிறப்புடையது எனலாம். மாசி மகம், இரவு நேரம் முழுவதும் ஒளி வீசும் பௌர்ணமி நிலா புரந்தரக் கதிர்கள், வாஸ்து சக்திகள் நிறையும் நாள் என்ற பல்வேறு ஆன்மீக சிறப்பு அம்சங்களுடன் பொலியும் நாளே இந்த காம தகனப் பண்டிகை ஆகும். காமகலா காமேஸ்வரனான சிவபெருமான் காம தேவதையான மன்மதனை எரித்தே, பஸ்மம் செய்தே, காமத்தை முழுவதும் வென்றே பார்வதி தேவியைக் கரம் பிடித்தான் என்பதை நாம் அறிவோம்.

இவ்வாறு காமம் ஒரு துளியும் இடம் பெறாத தெய்வீக மண வாழ்க்கை எத்தகைய ஒளி பொருந்தியதாகத் திகழும் ? அத்தகைய திருமண பந்தத்தில் தழைக்கும் உறவுகள் எத்தகைய சக்தி உடையதாகப் பூரிக்கும் என்பதை பூலோக ஜீவன்கள் உணரும் விதமாகவே காமதகனப் பண்டிகை ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. காமம் என்றால் பெண்கள் மேல் கொள்ளும் மோகம், அதீத ஆசை என்று மட்டும் பொருளன்று, தேவையற்ற, அளவுக்கு அதிகமான உணவு ஆசை, ஆடை அணிகலன்கள் ஆசை, வாழ்க்கை வசதிகள் ஆசை, பதவி ஆசை என்று ஆசைகளைப் பட்டியல் போட்டுக் கொண்டே செல்லலாம் என்றாலும், இவை அனைத்தும் காமத்தைக் குறிப்பவையே.

வரம்பிற்குள் இருக்கும் ஆசை, தகுதிக்கு ஏற்ற ஆசை ஏற்புடையதே, வரவேற்கத் தக்கதே. ஆனால், ஆசை, காமம் தகுதிக்கு மீறும்போதுதான் அது சமுதாயத்தில் சொல்லொணாத் துன்பங்களை ஏற்படுத்துகின்றது. இவ்வாறு காமத்தைக் கோடிட்டுக் காட்டிய பெருந்தகையே காமகோடி பரமாச்சாரியாள் ஆவார்.

ஆசை இல்லாமல் எந்த உலக இயக்கமும் நடைபெறாது என்பது உண்மை ஆயினும், ஆசை வரம்பிற்குள் இருக்கும்போதுதான் அதனால் மக்களும் மற்ற ஜீவன்களும் அமைதியாக ஒருவருக்கொருவர் உதவும் வண்ணம் வாழ முடியும். இதை நடைமுறைப்படுத்த மக்களுக்கு உதவும் பண்டிகைகளுள் ஒன்றே காமதகனப் பண்டிகையாகும்.

ஸ்ரீஔஷதபுரீஸ்வரர் மாத்தூர்

ஸ்ரீபெரியநாயகி அம்மன் மாத்தூர்

சுபகிருது வருட காமதகனப் பண்டிகையை எந்த சிவத்தலத்திலும் கொண்டாடி பலன் பெறலாம் என்றாலும்
     1. திருவெள்ளியான்குடி
     2. திருமழபாடி
     3. திருக்கழிப்பாலை
என்று மூன்று முக்கியமான திருத்தலங்களை காமதகனப் பண்டிகை வழிபாட்டிற்கு உகந்ததாக சித்தர்கள் குறிப்பிடுகிறார்கள். மாசி மகம் என்பது அனைத்து தீர்த்த தேவதைகளும் கும்பகோணம் திருத்தல மாசி மகக் குளத்தில் குழுமும் திருநாள். காமம் என்பது காமத்தால் உருவாகும் அக்னி சக்திகள் பெருகும் நாள். திங்கட் கிழமை என்பது குருட்டு நாள் எனப்படும். ஞாயிறும் திங்களும் குருட்டு நாட்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதனால்தான் முற்காலத்தில் ஞாயிறு, திங்கள் என்ற இரண்டு நாட்களிலும் திருமணம், வளைகாப்பு, சீமந்தம் போன்ற வைபவங்களை நிகழ்த்துவது கிடையாது.

காமத்திற்கு கண் கிடையாது என்பார்கள். அதே போல் பிற பெண்களை நோக்கும்போது, பிறர் வாழ்க்கை வசதிகளை நினைத்து ஏங்கும்போது கண்கள் வழியே பெருகும் காட்சிகள்தானே மக்களுக்கு காமத்தை ஊட்டுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. அதனால்தான் குருடர்களுக்கு செய்யும் எத்தகைய உதவிகளும் முறையற்ற காமத்தைக் குறைக்க மக்களுக்கு பெருமளவில் உதவுகின்றன. காமமே இதய நோய்களுக்கு முதல் காரணமாக இருப்பதால்தான் குருடர்கள் இதய நோய்களால் பாதிக்கப்படுவதில்லை என்பதும், குருடர்கள் சேவை இதய நோய் அகற்றும் சேவையாக பரிமளிக்கிறது என்பதும் நாம் அறிந்து கொள்ள வேண்டியதாகும்.

“எம் தலைவனுக்கு வாகனமாக அமையும் நான் மட்டும் காமத்துடன் திகழ்ந்தால் நான் எப்படி எம் தலைவன் பவனி வருவதற்கு உரிய வாகனமாக அமைய முடியும்?” என்று சூளுரைத்து நந்தியெம் பெருமான் சிவபெருமானுக்கு வாகனமாக அமையும் முன், தான் அதிகார நந்தியாக பொறுப்பேற்கும் முன், சுயாம்பிகையை திருமழபாடியில் கரம் பிடிக்கும் முன் காமதகனப் பண்டிகையை அங்கு சிறப்புடன் கொண்டாடி மகிழ்ந்தார் என்பதே நம் சற்குரு தெரிவிக்கும் இனிய செய்தியாகும். நந்தியெம்பெருமான் இவ்வாறு காமதகனப் பண்டிகையை திருமழபாடியில் கொண்டாடும் இனிய முகூர்த்த நாளும் இவ்வாறு திங்கட் கிழமை, மாசி மகம், வாஸ்து நாள் போன்ற சுபமுகூர்த்த அம்சங்களுடன் பொலிந்தது என்பதே நம்மை வியக்க வைக்கும் சித்தர்கள் கூறும் இரகசியமாகும்.

மேற்கூறிய எந்த தலத்தில் காமதகனப் பண்டிகையை கொண்டாடினாலும் குறைந்தது ஆறு அடி நீளம், மூன்று முதல் ஐந்தடி ஆழத்திற்கு ஒரு குழி வெட்டி அதில் காமதேவனின் உருவருத்தை, பிம்பத்தை வடித்து சமீபத்தில் சிவராத்திரியில் இறை மூர்த்திகளுக்கு அலங்கரித்த இரத்தினக் கம்பளத்தை விரித்து, அதன் மேல் பசு வரட்டியைப் பரப்பி, அதன் மேல் காமதேவனின் உருவத்தை கிடத்தி தூய அக்னியை தாமரைத் தண்டு திரி மூலம் உருவாக்கி, பசு நெய் நிறைய வார்த்து காமனைத் தகனம் செய்வது மனித வாழ்வில் கிடைத்தற்கரிய அரிதிலும் அரிய சந்தர்ப்பமாகும். பக்தர்கள் இந்த சந்தர்ப்பத்தை நன்முறையில் பயன்படுத்தி அவரவர் மனதில் குடும்பத்தில் எழும் தேவையற்ற காமத் தவறுகள் மட்டுமன்றி சமுதாயம் முழுவதும் நிரவி, நிறைந்து கிடக்கும் முறையற்ற காமத்தைக் களையும் ஒரு நற்காரியத்தை நிறைவேற்றும்படி கேட்டுக் கொள்கிறோம்.

பல்லு போனால் சொல்லு போச்சு என்னும் பழமொழியை அனைவரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். 32 பற்களில் ஏதாவது ஒன்று விழுந்து விட்டாலும் மக்கள் தங்கள் வாக்கு சக்தியை இழந்து விடுகிறார்கள் என்பது இதன் மேலோட்டமான ஒரு பொருளே. இதுவல்லாது இந்த பழமொழி குறிக்கும் பல தெய்வீக அர்த்தங்கள் உண்டு. அவற்றை இங்கு விவரித்தால் மனித மனம் ஏற்காது என்பதால் அத்தகைய தீய விளைவுகளுக்கு பரிகாரம் அளிக்கும், அத்தகைய தீய விளைவுகள் மக்களைத் தீண்டாமல் காக்கும் ஒரு வழிபாட்டு முறையை மட்டும் நம் சற்குரு அளிக்கின்றார்.

இதன்படி வாஸ்து நாளும், காமதகனமும் கூடும் நாட்களில் மிருகங்களுக்கு சிறப்பாக யானை, காளை, பசு, கன்று போன்ற விலங்கினங்களுக்கு திருமழபாடி ஆலம் விழுது, கருவேலங் குச்சி போன்றவற்றால் மிருக வைத்தியர்களைக் கொண்டு பல் துலக்கி சுத்தம் செய்து விடுதல் என்பது வாழ்வில் ஒரு முறையே கிட்டும் சந்தர்ப்பம் என்பதை நினைவில் கொள்க. இதனால் கிட்டும் பலாபலன்களோ கற்பனையை மிஞ்சுபவையே. இத்தகைய தந்த தாவன வழிபாட்டிற்குப் பின் வைத்தியர்களுக்கு உரிய சன்மானத்தையும், எட்டு முழ வேட்டி, அங்கவஸ்திரம், வெற்றிலைப் பாக்கு போன்ற மங்களப் பொருட்களை அளித்து கௌரவித்தலும் மக்களின் பலவிதமான சந்ததிக் குறைபாடுகளை நீக்கும் ஒரு வழிபாடாக அமையும்.

பெண்கள், குழந்தைகள் போன்று இந்த திருப்பணியில் ஈடுபட இயலாதவர்கள் 32 திருமுறைப் பதிகங்களையோ அல்லது தோடுடைய செவியன் என்று தொடங்கும் பதிகத்தை மட்டுமாவது வாஸ்து நேரம் முழுவதும் வாய் விட்டு, கவனிக்க உரக்க, சப்தமாக ஓதுதல் சிறப்பாகும். விலங்குகளுக்கு பல் துலக்கி விடுவதற்கான ஆலங்குச்சி, கருவேலங்குச்சி போன்றவற்றை முதல் நாளே நீரில் ஊறவைத்து கருங்கல் கொண்டு லேசாக தட்டி தேவையான ‘பல் பிரஷுகளை’ தயார் செய்து கொள்ளவும்.

மனிதர்கள் அனைவரும் தினமும் குறைந்தது காலை, மதியம், மாலை என்ற மூன்று வேளையும் பல் துலக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவரே நம் சற்குரு. பலரும் இந்த தெய்வீக வழிபாட்டை அசட்டை செய்து தங்கள் முதிய வயதிலோ அல்லது பற்கள் பயனற்று போன பின்போ இந்த வழிபாட்டின் மகிமை குறித்து வருந்துகின்றனர். இதனால் என்ன பயன்? உலகிலேயே மிகச் சிறந்த கோகினூர் வைரத்தை விட மிகவும் கடினமானவை, மதிப்பு மிகுந்தவை நம் பற்கள் என்று தெளிவாக உணர்ந்த மருத்துவர்கள் கூட இவ்விஷயத்தில் அசட்டையாக இருப்பது கலியுகத்தின் குறைபாடே. இதை ஓரளவேனும் சீர் செய்யவே வாஸ்து நாளில் பசு, ஆடு, யானை போன்ற விலங்கினங்களின் பற்களை உரிய முறையில் சுத்தம் செய்து விலங்குகளின், மனிர்களின் பற்கள் பாதுகாப்பையும் அதனால் சமுதாயத்தில் நல்ல ஆரோக்யம் நிலவும் முறைக்கு வழிவகுக்கிறார் நம் சற்குரு. இங்குள்ள வீடியோவில் சமீபத்தில் மிருகங்களுக்கு நம் அடியார்கள் ஆற்றிய சேவையின் ஒரு அங்கத்தை நாம் காணலாம்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam