ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்
சொக்கப்பனை சோழீஸ்வரம் |
கும்பகோணம் அருகில் திருவெள்ளியான்குடி திருத்தலத்தில் அமைந்துள்ள ஸ்ரீசௌந்தர நாயகி சமேத சோழீஸ்வரர் சிவாலயம் வரலாற்றுச் சிறப்பு மிக்க மிகவும் தொன்மையான சிவாலயமாகும்.
நடப்பு மனுவின் ஆட்சிக் காலமான வைவஸ்வத மனுவின் மன்வந்தர தொடக்கத்திலேயே மக்கள் வழிபட்டு பேறுபேற்ற தலம் தற்போது ஏதோ புதுப்பிக்கப்பட்ட ஒரு சிவத்தலம் போல் தோன்றுவது கலியுக மாயையே. தமிழகத்தில் உள்ள எல்லா சிவாலயங்களிலும் பெரும் விழாவாகக் கொண்டாடப்படும் சொக்கப்பனை எரித்தல் என்னும் அற்புத உற்சவம் முதன் முதலில் உருவான திருத்தலமே திருவெள்ளியான்குடி என்பதே இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்றாகும்.
அழகுக்கு மறுபெயர்
சோழீஸ்வரர் !
உலகின் மிகப் பெரிய சுயம்பு மூர்த்தியான திருஅண்ணாமலையில் ஏற்றப்படும் திருக்கார்த்திகை தீபம் நமது நாட்டிற்கு மட்டுமல்லாது இந்தப் பிரபஞ்சம் அனைத்திற்குமே ஒளிகூட்ட வல்லது என்பது நீங்கள் அறிந்த ஒன்றே. இந்த சிறப்பான அனுகிரகத்தை மக்கள் அனைவருக்கும் அளிக்கும் வண்ணம் முற்காலத்தில் திருஅண்ணாமலை தீபத்தை தரிசித்த பின்னர் அங்கிருந்து ஒரு அரசங்குச்சியில் தீபமேற்றி அதை திருஅண்ணாமலையை வலம் வந்து பின்னர் அங்கிருந்து ஓடியே தங்கள் ஊருக்கு வந்து அங்குள்ள சிவாலயங்களில் அடுத்த நாள் சர்வாலய தீபமாக, சொக்கப்பனையாக ஏற்றி மக்கள் சிறப்படைந்தனர். ஆண்கள் பெண்கள், முதியவர் இளைஞர் சிறுவர்கள் என்ற பாகுபாடு இல்லாது அனைவரும் இந்த ஓட்டத்தில் கலந்து கொண்டனர்.
திருஅண்ணாமலை கார்த்திகை தீப ஒளியோட்டம் என்றவாறு ஆதியில் தோன்றிய இந்த திருஅண்ணாமலை தீப ஓட்டமே தற்போது ஒலிம்பிக் டார்ச் என்ற வகையில் பிரபலமடைந்துள்ளது. திருஅண்ணாமலை என்று மட்டும் அல்லாது வழி நெடுகிலும் பிரகாசிக்கும் இந்த தீபமானது சமுதாயத்தில் தோன்றிய பலவிதமான நோய்களையும் சீர்கேடுகளையும் களைந்தது என்பதே இந்த ஓட்டத்தின் மகத்துவமாகும்.
சோழீஸ்வரம்
இது என்றோ நடந்த அதிசயம் அல்ல, இன்றும் நிகழும் சித்த அனுகிரகமே என்று மனித சமுதாயத்திற்கு நிரூபித்துக் காட்டியவரே நம் சற்குரு ஆவார். செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்ற பழமொழி இன்றும் நிகழும் புதுமொழியே என்று நிரூபித்துக் காட்டியவரே நம் சற்குரு ஆவார். நம் சற்குரு பூவுலகில் தம் பூத உடலை விட்டு மறைந்த பின்னர் அவர் உடலை ஒரு ஆம்புலன்சில் ஏற்றி திருஅண்ணாமலை ஆஸ்ரமத்திற்கு எடுத்துச் சென்றபோது அந்த ஆம்புலன்ஸ் வண்டியில் சைரன் ஒலித்ததன் காரணத்தை நம் அடியார்கள் ஆத்மவிசாரம் செய்தால் இந்த உண்மை விளங்கும். இந்த அற்புதம் நிகழ்ந்ததும் ஒரு நோய் நிவாரண சக்திகள் துலங்கும் செவ்வாய்க் கிழமைதான் என்பதே இந்த சித்த அனுகிரகத்தின் பின்னணியில் அமைந்த சிறப்பாகும். சித்த அனுகிரகம் என்ற ஒளி சக்தியை ஆம்புலன்ஸ் ஒலி சக்தியாக மாற்றி வழியெங்கும் நிறைத்து அருளினார் நம் சற்குரு என்றால் இந்த அற்புத செயலுக்கு ஈடு இணைதான் உண்டோ?
இவ்வாறு நோய் நிவாரண சக்திகளை உலகெங்கும் நிரவும் நல்லெண்ணம் கொண்ட அடியார்கள் நம் சற்குருவின் வழிகாட்டுதலைப் பின் தொடர்ந்து சமுதாயத்திற்கு அற்புத சேவை புரியலாம் அல்லவா? இந்த சுபகிருது வருடத்திற்கான திருக்கார்த்திகை தீபம் செவ்வாய்க் கிழமை அமைவது நம்முடைய பெரும் பாக்கியமே. அந்த தீபநாள் வரை வரும் அனைத்து செவ்வாய்க் கிழமைகளிலும் ஒரு தென்னை அல்லது பனங்கழியில் பனை ஓலைகளை சுற்றி பூஜை செய்து அதை சர்வாலய தீபமான அடுத்த நாள் திருவெள்ளியான்குடி போன்ற சிவாலயங்களில் சொக்கப்பனையாக ஏற்றி வழிபடுவதே திருஅண்ணாமலை தீப சக்திகளை, நோய் நிவாரண சக்திகளை அனைத்து மக்களுக்கும் நிரவும் எளிமையான மார்கமாகும்.
ஸ்ரீசோழீஸ்வரர்
திருவெள்ளியான்குடி
திருவெள்ளியான்குடி சிவாலயம் என்று மட்டுமல்லாது இந்த வழிபாட்டைத் தொடர நினைக்கும் நம் அடியார்கள் அனைவரும் தங்கள் தங்கள் சொந்த ஊரிலுள்ள சிவாலயங்களிலும் இத்தகைய வழிபாடுகளை இயற்றி பயன்பெறலாம், பயன் பெருக்கலாம், பயன் நல்கலாம். சிவாலயங்கள், மடங்கள், இல்லங்கள் என்ற சுத்தமான சூழ்நிலை துலங்கும் எந்த இடத்திலும் இந்த பனங்கழி அல்லது தென்னங்கழிக்கு பூஜை நிறைவேற்றி அதை சொக்கப்பனையாக ஏற்றி பயன் பெறலாம்.
இந்த வழிபாட்டை நிறைவேற்றும் நல் எண்ணம் கொண்ட அடியார்கள் திருஅண்ணாமலை கார்த்திகை தீபத்தை தரிசித்த பின்னர் தத்தம் சொந்த ஊரில் இந்த சொக்கப்பனையை ஏற்றி வழிபடுதல் வேண்டும். குறைந்தது ஒன்பது அடியார்கள் இந்த திருப்பணியில் கலந்து கொள்தல் சிறப்பு. முற்காலத்தில் திருஅண்ணாமலை தீப பிரசாதத்தை அரசங்குச்சியில் ஏற்றி ஓடி வந்து தங்கள் சொந்த ஊரில் அந்த தீப சக்திகளை சிவாலயங்களில் புனருத்தாரணம் செய்தார்கள் அல்லவா?
இன்று திருக்கார்த்திகை தீபத்தை ஒன்பது அடியார்கள் தரிசனம் செய்தாலே அதை “நேத்ர சக்தியாக” ஆவாஹனம் செய்து இந்த நேத்ர தீப சக்திகளை திருகார்த்திகை அண்ணாமலை தீப சக்திகளாக சொக்கப்பனையில் புனருத்தாரணம் செய்ய முன்வருகிறார் நம் அருமை சற்குரு. இந்த அதியற்புத தீப சக்திகளை உருவாக்கவல்லவர்களே நம் குருமங்களகந்தர்வா போன்ற உச்ச நிலையில் திகழும் சித்தப் பெருமக்கள் ஆவர்.
சொக்கப்பனை ஏற்றப்படும் தென்னை அல்லது பனங்கழிகளைச் சுற்றி குறைந்தது ஒன்பது அடியார்கள் சுந்தர மூர்த்தி நாயனார் அருளிய மற்றுப் பற்றெனக்கின்றி என்ற தேவாரப் பதிகத்தை குறைந்தது பத்து முறை ஓதுதல் சிறப்பாகும். இந்த வழிபாட்டை ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையிலும் திருகார்த்திகை தீப நாள் வரை நிறைவேற்றி வருதல் சிறப்பாகும். முதன் முதலில் நம் திருஅண்ணாமலை ஆஸ்ரமம் சார்பாக ஐயர்மலையில் திருகார்த்திகை தீபம் ஏற்றியபோது அந்த தென்னங்கழி இவ்வாறுதான் தயார் செய்யப்பட்டது என்பதை ஒரு சில அடியார்கள் அறிந்திருக்கலாம்.
காதோலை கருகமணி ஔஷதம் |
பெண்கள் காதில் அணியும் தோடு காதோலை என்று அழைக்கப்படும். ஆண்கள் காதில் கடுக்கன் அணிவது வழக்கம். பலவிதமான தோஷங்களை களைவதற்காக பனை ஓலையில் செய்யப்பட்ட காதோலையை இறை மூர்த்திகளுக்கு தற்போது நேர்த்திக் கடனாக அளிக்கிறார்கள். இத்துடன் கருப்பு வளையல்களையும் சேர்த்து காதோலை கருகமணி என்று அழைப்பதுண்டு.
காதோலை கருகமணி
நவராத்திரி சமயங்களில் மட்டும் இத்தகைய கருப்பு வண்ண வளையல்களை பெண்களுக்கு தானமாக அளிப்பது சிறப்பு. இந்த காதோலையை கீழ்க் கண்ட முறையில் தயாரித்து அதை சொக்கப்பனை தீபத்தில் சேர்ப்பது சிறப்பாகும். பனை ஓலை மேல் தங்க ஜரிகையை (gold foils) வைத்து காதோலையாக தயார் செய்து அதை ஒரு வால்மிளகு அல்லது கிராம்பு கொண்டு சேர்த்து இந்த காதோலைகளை ஜோடிகளாக, அதாவது இரண்டு இரண்டாக சொக்கப்பனையில் சேர்ப்பது சிறப்பாகும்.
ஸ்வேத வராக சக்திகள்
பொழியும் திருவெள்ளியான்குடி
பலவிதமான தோஷங்களை நிவர்த்தி செய்து இல்லத்தில் இல்லறத்தில் ஒற்றுமையை உருவாக்குவது இந்த கருகமணியின் சிறப்பாகும். பனை ஓலைக்குப் பதிலாக சந்தனச் சுருள்களையும் பயன்படுத்தலாம். பசு நெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை எவ்வளவு வேண்டுமானாலும் இந்த சொக்கப்பனையில் சேர்க்கலாம். இவ்வாறு தைலங்களை சேர்க்கும் போது அது சொக்கப்பானையாக மாறும் என்பதே சித்தர்கள் அளிக்கும் செய்தி.
சொக்கத்தங்கம் என்றால் மாற்று குறையாத, தூய தங்கம் என்று பொருள். இவ்வாறு பசு நெய், தேங்காய் எண்ணெய், கருகமணி இவற்றைச் சேர்க்கும்போது சொக்கப்பனை சொக்கப்பானையாக மாறும் என்பதே நாம் பெறும் சித்த அனுகிரகமாகும். பல தலைமுறைகளைத் தாண்டி அனுகிரகம் அளிக்கக் கூடியதே சொக்கப்பானையாகும்.
தான்தோன்றி என்ற சுயம்பு தத்துவத்தில் திகழ்வதே பனங்கழி என்பதாகும். தென்னங்கழி இந்த சுயம்புதத்துவத்தை ஏற்று அதை ஒளியாக அளிக்கும் அற்புத சக்திகள் கொண்டது. நன்றிக் கடன் தீர்க்கப் படாமல் இருக்கும்போது அதனால் விளையும் தோஷங்கள் ஏராளம் ஏராளம். அதை மனித மூளையால் புரிந்து கொள்ளவே முடியாது. ஆனால், இந்த தோஷத்தையும் களைய முன்வருகின்றனர் சித்தப் பெருமக்கள் இந்த சொக்கப்பனை வழிபாட்டின் மூலம்.
சொக்கப்பனை எரிந்து முடிந்ததும் உரிய காணிக்கை செலுத்தி இந்த கரி சாம்பலை நெற்றியில் இட்டுக் கொள்வதால் கிட்டும் தற்காப்பு சக்திகள் அமோகமே. பெண்கள் தேங்காய் எண்ணையுடன் இந்த சாம்பலைக் கலந்து தங்கள் கண்களுக்கும், புருவங்களுக்கும் இட்டுக் கொள்ளலாம். வசீகர சக்திகள் பெருகும்.
சோளி கே பீச்சே... |
பழமையான ஒரு ஆத்ம விசார வினா ஒன்று உண்டு. “சோளி கே பீச்சே க்யா ஹை?” சோளியம்மனை காசி புண்ய தலத்தில் மட்டுமே பக்தர்கள் தரிசிக்க முடிவதால் இந்த கேள்வி வடஇந்தியாவில் பிரபலமாக இருக்கிறது என்றும் கூறலாம். உண்மையில் சோழீஸ்வரரின் சக்தி வடிவமே சோளியம்மன் என்றால் அது மிகையாகாது. இந்த ஆத்ம விசார கேள்விக்கு விடை காண முடிந்தால் அதுவே பக்தர்கள் மனித நிலையில் தியானிக்கும் கடைசி ஆத்ம விசார வினாவாக இருக்கும் என்ற அளவு சிறப்பு உடையதே இந்த கேள்வி ஆகும்.
அன்பும் அறிவும் இணையும்
சோழீஸ்வரம்
அல்லது பெரும்பாலும் இந்த ஆத்ம விசார வினாவிற்கு சரியான விடையை பக்தர்கள் உணரும் நிலை வரும்போது அவர்கள் மனித நிலையை தாண்டிய உன்னத தெய்வீக நிலையை அடைந்து விடுவார்கள். ஏன் இங்கு “பெரும்பாலும்” என்ற வார்த்தையை நாம் பிரயோகம் செய்கிறோம் என்று சிந்தித்துப் பார்ப்பதும் ஒரு ஆத்ம விசார வினா விடை வைபவமாக மலரும்.
காரணம், “சோளி கே பீசே க்யா ஹை?” என்று கேள்வியைத் தொடர்ந்து, “சோளி கே சாம்னே க்யா ஹை?” என்ற கேள்வியையும் கேட்க வேண்டும். முதலிலேயே இந்த கேள்வியைக் கேட்டு விட்டால் பக்தர்கள் உள்ளத்தில் குழப்பம் பெருகுவதால் மக்கள் இந்த ஆத்ம விசார கேள்வியையே கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்கள் என்பதே பெரியோர்களின் அறிவுத் திறன்.
எந்த திருத்தலத்தையும் இந்த ஆத்ம விசார வினாவை சிந்தித்தபடி வலம் வந்து பலன் பெறலாம் என்றாலும் திருவெள்ளியான்குடி சிவத்தலம் இந்த ஆத்ம விசார வினாவிற்கு உரிய விடையை எளிதில் பெற்றுத் தரும் என்பதும் இத்திருத்தலத்தின் சிறப்பாகும். அதிலும் மாளய பட்ச வழிபாடுகளுக்குப் பின் நிறைவேற்றும் இத்தகைய வழிபாடுகளில் தாணுமாலய பித்ருக்களின் அனுகிரகமும் பதிந்திருப்பதால் பக்தர்கள் எளிதில் வெற்றி மாலையைச் சூட முடியும் என்பதே நம் சற்குருவின் இனிய எதிர்பார்ப்பு. சற்குருவின் கனவை நனவாக்குவது நம் கையில்தான் இருக்கிறது.
கரிவலம்வந்தநல்லூர் திருத்தலத்தில் நம் சற்குரு குருமங்கள கந்தர்வ லோகத்தில் எழுந்தருளிய இனிய வைபவத்தை பூலோக பக்தர்களும் கொண்டாடி மகிழ்ந்தார்கள் அல்லவா ? அந்த அற்புத வைபவத்தில் சோழிகள் பின்னப்பட்ட சோளிகளை, குழந்தைகள் ஆடைகள் போன்றவற்றை தானம் அளிக்கும்படி நம் சற்குரு கூறியதன் பின்னணி இரகசியம் எத்தகைய சுவை வாய்ந்தது என்பதை நம் அடியார்கள் தற்போது உணர்ந்திருக்கலாமே? இவ்வாறு சற்குருவின் வழிகாட்டுதலின் பின்னணியில் சுவையான வரலாறுகளும் தெய்வீக இரகசியங்களும் மறைந்துள்ள காரணத்தால் அனைத்து வழிகாட்டுதல்களையும் பொறுமையாக ஆத்ம விசாரம் செய்து பார்த்தலே நாம் தெய்வீகத்தில் விரைவில், எளிதில் முன்னேறும் வழிமுறையாகும். இதற்கு ஆக்கம் அளிப்பதே திருவெள்ளியான்குடி போன்ற திருத்தலங்களில் நிறைவேற்றும் மாளய பட்ச வழிபாடுகளாகும்.
ஸ்வேத வராக கல்பம் |
தற்போதைய பிரம்மா தனது ஆயுள் காலமான நூறு ஆண்டுகளில் ஐம்பது வருடங்களைக் கடந்து 51வது வருடத்தில் ஸ்வேத வராக கல்பத்தில் அருளாட்சி புரிகிறார் என்பதை நாமறிவோம். ஸ்வேத வராக கல்பம் என்ற வார்த்தைகள் சுட்டும் பொருளை சித்தர்கள் மட்டுமே முழுமையாக உணர்ந்து அதை பூலோக மக்களுக்கு வழிபாடுகள் மூலம் அனுகிரகமாக அளிக்கவல்லவர்கள். பொதுவாக, ஸ்வேத வராகம் என்பது வெண்ணிறமுடைய ஆரோக்ய சக்திகள், பூர்ண விருத்தி சக்திகள், குறையாத லட்சுமி கடாட்ச சக்திகள் என்றெல்லாம் பொருளுடையது.
அற்புதமான இந்த ஸ்வேத வராக சக்திகளும் சூரிய பகவானின் கதிர்கள் மூலம் திருவெள்ளியான்குடியில் நம் அடியார்கள் இயற்றிய மாளய பட்ச வழிபாடுகளுக்கு அனுகிரகம் அளிக்கும் வண்ணமாய் பிரகாசித்த மகிமையை இங்குள்ள வீடியோவில் அடியார்கள் கண்டு இரசிக்கலாம்.
திருமணமாகி இருந்தாலும், திருமணங்களுக்குத் தடையாக இருப்பதும் நாக தோஷமே. நாகங்களை வதைப்பதாலோ, நாகங்களைக் கொல்வதாலோ மட்டும் நாக தோஷங்கள் மக்களைத் தொடர்ந்து வந்து துன்புறுத்துவது கிடையாது. உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் தராமை, தன் தயவில்தானே இருக்கிறார்கள் என்று தன்னை எதிர்பார்ப்பவர்களை கீழ்த்தரமாக நடத்துவது போன்ற பல காரண காரியங்களால் நாக தோஷங்கள் விளைகின்றன. இத்தகைய நாக தோஷங்கள் அனைத்தையும் தீர்க்கவல்ல தலமே திருச்சி மலைக்கோட்டை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ஸ்ரீநாகநாத சுவாமி திருத்தலமாகும். இங்குள்ள தூண் ஒன்றில் ஸ்ரீசசபிந்து மகரிஷி எழுந்தருளி பக்தர்களின் பிரார்த்தனைகளை ஏற்று அவர்களை நாகதோஷ விளைவுகளிலிருந்து காப்பாற்றிக் கருண புரிகிறார்.
ஸ்ரீசசபிந்து மகரிஷி
நாகநாதசுவாமி கோயில்
திருச்சி
தன் அரும்பணியின் ஒரு பகுதியாக சசபிந்து மகரிஷி நாக வழிபாட்டிற்கு உரிய பஞ்சமி திதியில் திருவெள்ளியான்குடி திருத்தலத்தில் நாக வடிவிலேயே தோன்றி சுக்ர தீர்த்தத்தில் தரிசனம் தந்த அரும்பெரும் மகாத்மியத்தை இங்குள்ள வீடியோவில் அடியார்கள் கண்டு இரசிக்கலாம். சிவபெருமான் கொடிய ஆலால நஞ்சை அருந்தியபோது அந்த நஞ்சின் விஷத்திலிருந்து எழுந்த உஷ்ண சக்திகளை தாள முடியாமல் சுவாமியின் உடலிலிருந்த எல்லா நாகங்களும் தம்மையும் அறியாமல் சுவாமியின் உடலிலிருந்து கீழே விழுந்துவிட தன் உயிரே போனாலும் அதைப் பற்றி சற்றும் கவலை கொள்ளாமல் சுவாமியின் உச்சித் தலைப் பகுதியில் அலங்கரித்த வண்ணம் விளங்கியவரே ஸ்ரீசசபிந்து மகரிஷி. இத்தகைய பெருமைகள் தன்னை அலங்கரிக்கும் அந்த பெருமானோ பக்தர்களுக்காக ஒரு பாம்பு வடிவில் திருவெள்ளியான்குடி திருத்தலத்தில் தரிசனம் தருகிறார் என்றால் எம்பெருமானின் அடியார்களுக்கு அடியாராய் இருப்பதில் மகரிஷிகள் கொள்ளும் அடக்கம், பெருமைதான் என்னே என்னே?!
சசபிந்து மகரிஷியின் பெருமையை பூவுலகிற்கு உணர்த்துவதற்காகவும் நம் சற்குரு திருச்சி நாகநாதசுவாமி ஆலயத்தில் உழவாரப் பணிகள் இயற்றி இங்குள்ள நாக அனுகிரக சக்திகள் அனைத்தையும் புனருத்தாரணம் செய்தார் என்றால் அது மிகையாகாது. நம் பிரபஞ்சத்திலேயே பல திருத்தலங்களிலும் இவ்வாறு நாக சக்திகள் விரவி, நிரவியுள்ளன என்றாலும் திருச்சி நாகநாதசுவாமி ஆலயத்தில்தான் அனைத்து நாக சக்திகளும் சுயமாய் எழுந்தருளி உள்ளன என்பதே இந்த திருத்தலத்தின் பெருமையாகும்.
ஸ்ரீசோழீஸ்வரருக்கு சூரியபூஜை
திருவெள்ளியான்குடி
சசபிந்து என்ற நாமமே மனித கற்பனைக்கு எட்டாத தெய்வீக சக்திகளைக் கொண்டது. உதாரணமாக,
• சசபிந்து என்ற ஐந்தெழுத்துக்களை ஓதி வந்தாலே அது எம்பெருமானின் ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாய
பஞ்சாட்சரம் ஓதிய பலனைக் கொடுக்கும்
• சசபிந்து எனும்போது அது சச பிந்து என்று பிரிவதால் சந்திரன் சூரியன் சக்திகள் இணைந்த அமாவாசை, பௌர்ணமி போன்ற திதி சங்கம பலன்களை வர்ஷிக்கும்
• சச பிந்து என்று பிரிக்கும்போது அது இரண்டு எழுத்து உடைய பெண் தத்துவ எண் கணிதத்தையும் பிந்து என்ற
ஒற்றைப் படை ஆண் சக்தியையும் குறிக்கும்.
• சிவ சக்தி ஐக்ய சொரூபமே சசபிந்து நாக வடிவின் தோற்றமாகும்.
• தினமும் பிந்து தர்ப்பணம் எனும் தேனில் ஊறிய இஞ்சித் துண்டை ஏற்றுக் கொள்ளும்போது சசபிந்து மகரிஷியே
போற்றி என்று கூறுவதால் தர்ப்பணத்தின் பலன்கள் பன்மடங்காகப் பெருகும்
சோழிகளும் தூய்மை பெறுமே |
சோழிகளை சங்கு வதிகள், சங்கு ஜீவிகள் என்றே சித்தர்கள் அழைக்கின்றனர். அந்த அளவு புனிதம் வாய்ந்தது கடல் வாழ் சங்கு ஜீவிகள். ஆனால், இந்த சங்கு பூச்சிகள் இயற்கையான முறையில் இறந்திருந்தால்தான் அந்த சங்குகளில் தெய்வீக சக்திகள் பொங்கித் ததும்பும். இதற்காகவே சற்குருமார்கள் தலைமை வகிக்கும் ஆஸ்ரமங்களிலிருந்து சங்குகளைப் பெறும்படி நம் சற்குரு வலியுறுத்துகிறார். இவ்வாறு சங்குகளைப் பெறமுடியாமல் பல பக்தர்களும் தவிப்பதால் இவர்களுக்கு வழிகாட்டும் விதமாய் கீழ்க் கண்ட பூஜை முறையை நம் சற்குரு நமக்காகப் பரிந்தளிக்கிறார்.
கடையில் கிடைக்கும் எந்தச் சங்கை வேண்டுமானாலும் வாங்கி அதை செவ்வாய்க் கிழமை இரவு நீரில் வெண்ணிற சங்குப் புஷ்பங்கள் அல்லது பன்னீர் பூக்களை சேர்த்து ஒரு தாமிரம் அல்லது வெள்ளிப் பாத்திரத்தில் ஊற வைத்து விட வேண்டும். அடுத்த நாள் காலை புதன் கிழமை அன்று இந்த சங்குகளை எடுத்து சுத்தமான பருத்தித் துணியில் துடைத்து அந்த சங்குகளை திருவெள்ளியான்குடி இறைமூர்த்திகளுக்கு சமர்ப்பித்து அதன் பிறகு இந்த சங்குகளை பயன்படுத்துவதால் அந்தச் சக்திகளில் குடிகொண்ட அனைத்து தோஷங்களையும் திருவெள்ளியான்குடி ஈசன் ஏற்று அந்த சங்குவதிகளை தூய்மைப்படுத்தி பக்தர்களுக்கு அளிக்கிறார்.
இத்தகைய தூய்மைப்படுத்தப்பட்ட சங்குகளை அடியார்கள் ஆடைகளில் வைத்து தைத்து தானமாக அளிப்பதோ அல்லது குழந்தைகள், பக்தர்களுக்கு சோழிகளாக விளையாடுவதற்காக அளிப்பதோ சிறப்பாகும். சங்குகளில் வியாபாரம் செய்பவர்களும் இத்தகைய முறையைப் பின்பற்றி இறைமையை வளர்க்கலாம் என்பதே நம் சற்குரு அடியார்களுக்காக அளிக்கும் அனுகிரகமாகும்.
ஸ்ரீதட்சிணாமூர்த்தி
சோழீஸ்வரம்
சோழிகளை உருட்டி ஜோதிடம் சொல்பவர்கள், எண் கணிதம் மூலம் ஜோதிடம் சொல்பவர்கள், நியூமராலாஜிஸ்ட் போன்றோரும் மேற்கண்ட முறையில் சோழிகளைத் தூய்மை செய்து இறைவனுக்கு அர்ப்பணித்து, தானங்கள் அளித்து பயன்பெறலாம். இரத்தம் இல்லாமை, ரத்தப் புற்று நோய்கள் போன்ற இரத்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளும் மேற்கண்ட வழிபாட்டால் நயம் பெறும். சங்கு சிப்பிகளில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி வைத்து விளக்கேற்றி இந்த விளக்கைப் பார்த்தவாறு நலம் தரும் தேவார துதிகளை ஓதி வந்தால் க்ளுகோமா என்ற கண் வியாதி அண்டவே அண்டாது.
எம்பெருமானின் அடி முடியைக் காண பிரம்மாவும் பெருமாளும் அன்னபட்சி வராக அவதாரம் மேற்கொண்டு தேடிய புராண வரலாற்றை நாம் அறிவோம். திருமுடியைக் கண்டேன் என்று பிரம்மா பரம்பொருளிடமே பொய் கூறி தப்பிக்க நினைக்க பெருமாளோ உண்மையை ஒப்புக் கொண்டு எம்பெருமானிடம் சரணடைந்தார். சரணடைந்தவர்களை மன்னிப்பதுதானே பரம்பொருளின் பாங்கு. அது மட்டுமல்ல, இவ்வாறு சரணடைந்து உண்மை உரைத்த காரணத்தால் இந்த உண்மையை உரைத்தல் என்பது தான் கொண்ட அவதாரத்திற்கு இழுக்காக அமையும் என்றாலும் அதையும் மீறி பரம்பொருளிடம் பொய்யுரைக்கலாகாது என்ற உயர்ந்த நோக்கில் இது அமைந்ததால் இதை பாராட்டும் முகமாக எம்பெருமானால் பெருமாள் மூர்த்திக்கு அளிக்கப்பட்ட சிவ பிரசாதமே ஸ்வேத வராகன்கள் ஆகும்.
இந்த ஸ்வேத வராகன்களின் எண்ணிக்கை 108. எதையுமே தனக்காக வைத்துக் கொள்ளாத பெருமாள் மூர்த்தியும் அவ்வப்போது பெருகும் இந்த ஸ்வேத வராக சக்திகளை பக்தர்களுக்கு அனுகிரகமாக அளித்துக் கொண்டுதான் இருக்கிறார். இவ்வாறு திருவெள்ளியான்குடியில் அளிக்கப்படும் ஸ்வேத வராக சக்திகளை அடியார்கள் எப்படிப் பெறுவது என்பது வரும் மூன்றாம் பிறை வைபவத்தின் நிறைவில் நம் சற்குருவால் உணர்விக்கப்படும், என்றாலும் அடியார்கள் இது குறித்து ஆத்ம விசாரம் நிறைவேற்றி அறிந்து கொள்வதில் தவறு கிடையாதே.
அடிமுடி தேடிய வைபவம்
கடுவெளி
இன்றும் பல வைபவங்களிலும் மக்கள் அளிக்கும் நன்கொடையை, இத்தனை ரூபாய் என்று கூறாது 100, 1000 கட்டி வராகன் என்று அழைப்பதை நீங்கள் அறிவீர்கள். இதன் பின்னணியில் உள்ள தெய்வீக மகத்துவத்தை நீங்கள் இப்போது அறிந்து கொண்டு விட்டீர்கள் அல்லவா ? எப்படி மதுரை பொற்றாமரைக் குளத்து பொற்றாமரையின் ஒரு இதழால் இந்தியாவையே விலைக்கு வாங்கி விடலாம் என்று நம் சற்குரு சொல்கிறாரோ அந்த அளவிற்கு மதிப்பு வாய்ந்ததே எம்பெருமானின் பரிசாக அளிக்கப்பட்ட ஸ்வேத வராக சக்திகளாகும்.
எப்படி கிருஷ்ண பகவான் கருமை நிறம் உடையவர் என்று கூறினாலும் இந்த கருமை நிறம் என்பது வைரம் போன்ற பளபளப்பு தன்மை உடையதோ, அது போல் ஸ்வேத வராகமும் கண்களை கூசச் செய்யும் பிரகாசம் பொருந்தியதே. ஆனால் இந்த பிரகாசம் ஆயிரம் பொற்றாமரைகளை ஒத்த குளிர்ச்சியைக் கொண்டது. வைரம் இருளில் பிரகாசிப்பதில்லை, ஆனால் ஸ்வேத வராக சக்திகளோ நள்ளிருளிலும் பிரகாசிக்க வல்லவை. ராம பிரான் தொட்ட பொருட்களில் எல்லாம் இந்த சுயம்பிரகாச சக்திகள் பொலிந்தமையால்தான் ராமரும் லட்சுமணணனும் ராமதாசரை மீட்க பாதுஷாவிடம் பொற்குவியலைத் தந்தபோது அவர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே, “ஹமாரா அல்லா ஆ கயா (எங்கள் கடவுளே வந்து விட்டார்)...”, என்று மெய்மறந்து கூவினான்.
உலகில் உள்ள பொருட்கள் அனைத்தும் உஷ்ணத்தை அளிக்கவல்லவையே. குளிர்ந்த காற்றைப் பெறுவதற்காக நாம் பயன்படுத்தும் ஏர்கண்டிஷனர்களும் உஷ்ணத்தை உருவாக்குபவைதானே. அப்படியானால் உடலுக்கும் மனதிற்கும் குளிர்ச்சியை அளிக்கும் பொருள் ஏதாவது உண்டா ? இதை தன் அனுபவம் மூலம் பகிர்ந்து கொள்கிறார் நம் சற்குரு.
பாஸ்கர பூஜையில்
பவனி வரும் ஸ்ரீகாலபைரவர்
கீழவாளாடி லால்குடி
“ஒரு முறை அடியேன் பௌர்ணமி முடிந்த பின்னர் நம் ஆஸ்ரமத்திற்கு எதிரில் உள்ள புளிய மரத்தின் அடியில் உள்ள திண்ணையில் அமர்ந்திருந்தேன். அப்போது கிரிவலமாக வந்த ஒரு இளம்பெண் அடியேனைப் பார்த்து “நமசிவாய” என்று அன்புடன் கூறினாள். அதைக் கேட்ட அடியேனின் உள்ளம் ஐஸ் போல் ஜில்லென்று ஆகிவிட்டது...”. அந்தப் பெண் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவள், இறைவனைப் பற்றி அறிந்து கொள்வதற்காக ரமணாஸ்ரமத்தில் தங்கி இருந்தாள். அவள் நம் சற்குருவை ஓர் உயர்ந்த மகான் என்று இனங்கண்டு கொள்வதற்கு காரணமே நம் சற்குருவின் மனதில் உண்மையான இறை நாமத்தால் ஊட்டிய ‘ஜில்’ தன்மையே. இது இறை நாமத்தில் மட்டுமே விளையும் குளிர்ச்சி.
இவ்வாறு இறைவனைத் தொடர்ந்து மனதில் நினைத்தால், இதயத்தில் அவன் நாமம் ஊறினால் அங்கே ஹார்ட் அட்டாக் என்ற ஒன்று அணுகுமா என்று கேட்பவரே நம் சற்குரு.
சுற்றி வரும் சூரிய கதிர்கள் |
ஒளி நேர் கோட்டில் செல்லும் என்பது விஞ்ஞானம் கூறும் கருத்து. நாமும் நடைமுறையில் அதை அனுபவித்தும் வந்துள்ளோம். அதே சமயம் ஒளி நேர்கோட்டில் அல்லாது வளைந்தும் செல்லக் கூடியதே என்பதே சித்தர்கள் கூறும் தத்துவமாகும். தற்போது சித்தர்களின் இந்தக் கருத்தை விஞ்ஞானம் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் எதிர்காலத்தில் சித்தர்களின் இந்தக் கருத்தை விஞ்ஞானம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்பதை நிரூபிப்பதே திருவெள்ளியான்குடி சிவத்தலத்தில் நாம் காணக் கூடிய சூரிய பூஜையின் மகத்துவமாகும்.
ஸ்வேத காளான் திருவெள்ளியான்குடி
பல திருத்தலங்களிலும் பாஸ்கர பூஜை என்றவாறாக சூரிய பகவானின் கதிர்கள் சிவலிங்கத்தை தழுவிச் செல்வதை நாம் கண்டு ஆனந்தம் அடைந்துள்ளோம். சிவலிங்கம் என்று மட்டுமல்லாது அம்பாள், முருகன், காலபைரவர் போன்ற தெய்வ மூர்த்திகளுக்கும் இந்தகைய சூரிய பூஜைகள் நிகழ்வதுண்டு. அபூர்வமாக திருவெள்ளியான்குடி சோழீஸ்வரர் திருத்தலத்தில் மட்டுமே சித்திரை மாதத்திலும் மார்கழி மாதத்திலும் சூரிய பூஜை மனிதர்களின் கண்களுக்கு ஒரு வித்தியாசமான முறையில் சிறப்பாக நிகழ்வதைக் காணலாம்.
இறை மூர்த்திகளை தரிசனம் செய்யும்போது அவர்களை பாதாதி கேசமாகவே தரிசனம் செய்ய வேண்டும் என்பதே சித்தர்களின் வழிகாட்டுதல். அதாவது முதலில் இறைவனின் பாதக் கமலங்களில் தரிசனத்தை ஆரம்பித்து சிறிது சிறிதாக பார்வையை மேல்நோக்கி செலுத்தி, பாதம், முழங்கால்கள், தொடைகள், உந்தி, மார்பு, முகம், கண்கள், சிரம், கிரீடம் என்ற வகையில் தரிசனத்தை நிறைவேற்ற வேண்டும். அதன்பின் விருப்பம் உடையோர் மீண்டும் சிரசு முதல் பாதம் வரை மீண்டும் இறைவனைத் தரிசிக்கலாம்.
இம்முறையில் எத்தனை மனிதர்கள் இறைவனை தரிசிக்கிறார்கள் என்பதை நாம் உறுதியாக சொல்ல முடியாது என்றாலும் திருவெள்ளியான்குடி திருத்தலத்தில் இம்முறையிலேயே சூரிய பகவான் இறைவன் ஸ்ரீசோழீஸ்வரரை பாதாதி கேசமாகவும், அதைத் தொடர்ந்து கேசாதி பாதமாகவும் தரிசனம் செய்யும் அற்புதத்தைக் காணலாம்.
இதில் மற்றோர் அதிசயம் என்னவென்றால் சூரிய கிரணங்கள் பாதத்திலிருந்து தலைக்கு நேரே செல்லாமல் பாம்பு ஊர்ந்து செல்வதைப் போன்று வளைந்து வளைந்து, முதலில் சிவலிங்கத்தில் அம்பாள் பகுதியான இடப் பகுதியை தரிசனம் செய்து பின்னர் சிவ லிங்கத்தின் வலப் பகுதியை, தலைப் பகுதியை அடைந்து, அங்கிருந்து மீண்டும் இறைவனின் பாதத்தை அடைவது என்பது எத்தகைய கிடைத்தற்கரிய பேறு. சூரிய மூர்த்தி தான் பெற்ற இந்த அரிய அனுகிரகத்தை தனக்கே வைத்துக் கொள்ளாது அடியார்களுக்கு எல்லாம் சொக்கப்பனை வைபவத்தின் மூலம் பகிர்ந்தளிக்கிறார் என்பதே சூரிய பகவானின் பெருங்கருணையாகும். சொக்கப்பனை வைபவத்தில் பொலியும் ஸ்வேத சக்திகள் என்னும் வெண்ணிற சக்திகளை உறுதி செய்வதாகவே சுக்ர தீர்த்தக் கரையிலுள்ள தென்னை மரத்தை சொக்கப்பனை வைபவத்திற்காக அகற்றியபோது அதன் அடியில் இருந்த ஸ்வேத காளானையும் அடியார்கள் இங்கு தரிசித்து மகிழலாம். இந்த தென்னைமரத்தின் உயரமோ 36 அடி (3 அடி x 12 துண்டுகள் = 3+6 = 9 = திருவெள்ளியான்குடி) என்று அமைந்ததும் ஒரு எண் கணித அற்புதமே.
ஸ்ரீநாகநாதசுவாமி
திருச்சி
திருவெள்ளியான்குடி சுக்ர தீர்த்தக் கரையில் இருந்த ஒரு சாதாரண தென்னை மரமே மாளய பட்சம் நிறைவடையும் முன்னரேயே 12 திருத்தலங்ளில் சொக்கப்பனையாக ஒளி வீசும் தன்மையைப் பெற்று கோடிக் கணக்கான ஜீவன்களுக்கு அருள்வழங்கும் தன்மையுடன் பிரகாசிக்கிறது என்றால் இந்த தீர்த்தக் கரையில் 18 நாட்கள் தர்ப்பணம் அளிக்கும் அடியார்கள் பெறும் அனுகிரகத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலுமா என்ன ?
பிறையின் மறைந்த காட்சி |
10.9.2022 முதல் 27.9.2022 வரை திருவெள்ளியான்குடி திருத்தலத்தில் தங்கி தர்ப்பண வழிபாடுகளை இயற்றியும் மூன்றாம் பிறை தரிசனத்தை திருவெள்ளியான்குடியில் பெற முடியவில்லையே என்பது பல அடியார்களின் வருத்தமாகும். பலரும் இதை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்றாலும் அவர்கள் மனவருத்தத்தை உணரும் நம் சற்குரு இதற்கான விளக்கத்தை இங்கு அளிக்கிறார். மூன்றாம் பிறை தரிசனம் என்பது 18 நாட்கள் மாளய பட்ச பித்ரு வழிபாட்டின் நிறைவாக இறைவனின் கனிந்த அனுகிரகமாக இத்தலத்தில் அளிக்கப்படுவது.
ஆனால், 18 நாட்கள் கழியும் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரேயே நம் அடியார்களுக்கு இந்த மூன்றாம் பிறை தரிசனப் பலன்களை பல விதங்களில் பெற்றுத் தந்தவரே நம் சற்குரு. உதாரணமாக,
1. அபூர்வமாக திருவெள்ளியான்குடியில் எழுந்தருளிய தாணுமால்ய பித்ருக்களின் அனுகிரகம்
2. திருவெள்ளியான்குடி கோபுர புஷ்கலை ஆவர்த்த விமானம் மூலம் நம் அடியார்களின் பித்ரு மூர்த்திகள் தத்தம் லோகங்களில் இருந்து வந்து எழுந்தருளி தம் சந்ததிகளுக்கு ஆசி அளித்த அற்புதம்
3. பஞ்சமி திதியில் சுக்ர தீர்த்தத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு ஆசி அளித்த சசபிந்து மகரிஷி. இந்த ஒரே ஒரு ஆசியை அளிக்க எம்பெருமான் ஜடா முடியில் கிட்டிய கைலாய வாசத்தின் 60 நாழிகை புண்ணிய பலன்களை அடியார்களுக்கு வர்ஷிக்க வேண்டி வந்தது அம்மகரிஷிக்கு என்றால் இதன் பலன்களை எழுத்தில் வடிக்க முடியுமா ?
4. ஸ்வேத வராக கல்ப சக்திகளை திருவெள்ளியான்குடி திருத்தலத்தில் வராக ஒளிக்கதிர்களாக வீச அந்த ஒளிக் கதிர்கள்
அனைத்தையும் அனைத்து உயிரினங்களும் பெறும் வண்ணம் லட்சுமி வராக தெய்வீக சக்திகளாக மாற்றி அதை சுக்ர தீர்த்தம், புஷ்கலை விமானம் போன்ற அனைத்து திருவெள்ளியான்குடி திருத்தல வளாகம் எங்கும் வர்ஷித்த ஸ்வர்ண கருடப் பெருமாளின் தரிசனம். மாளய பட்சம் 18 நாட்களிலும் இவருடைய தரிசனம் இத்தலத்தில் வியாபித்தது என்பதை அடியார்கள் இங்குள்ள வீடியோவில் தரிசித்து மகிழலாம். ஓரிரு நாட்கள் பொலிந்த இந்த ஒளிக் கதிர் வெள்ளத்தையும் அடியார்கள் தரிசிக்கலாம்.
திருவெள்ளியான்குடி
5. நாராயணா நாராயணா என்று ஒவ்வொரு முறையும் கருட பகவானை தரிசிக்கும்போது ஆறு முறை ஓதினால், திருவெள்ளியான்குடியில் நிகழ்ந்த 18 நாள் கருட தரிசனத்தில் கிட்டுவதே (18 x 6 = 108 பரல்கள்) கார்மேக வண்ணச் சுடர் பிரசாதமாகும். மேற்கு நோக்கி நின்று கொண்டு அல்லது கருடாசனத்தில் நிலைத்து ஒரு கண்ணாடியில் வானத்தைப் பார்த்திருந்தால் அல்லது சுக்ர தீர்த்தத்தின் பிரகாசத்தைப் பெற்றிருந்தாலும் அவர்களுக்கு நிச்சயமாக கார்மேக வண்ணன் ஒளிப் பிரகாசம் கிடைத்திருக்கும். மூன்றாம் பிறையை தரிசிக்க வேண்டும் என்ற நியதி கிடையாது.
எப்படி இரவில் வடக்கு நோக்கி நின்று கொண்டு வானத்தைப் பார்த்து கண்ணில் தெரியும் நட்சத்திரங்களை தரிசனம் செய்து தரையில் வீழ்ந்து வணங்கினாலே அவர்களுக்கு சப்தரிஷிகளின் அனுகிரகம் கிட்டுமோ அதைப் போன்றதே மூன்றாம் பிறை தரிசன மகிமையும். இந்த பிரசாதத்தை எத்தனை அடியார்கள் பெற்றார்கள் என்பதை அந்த கண்ண பிரானே அறிவார். எம்பெருமான் அளித்த இந்த கார்மேக வண்ணச் சுடர் பிரசாதத்தையே 108 பரல்களாகப் பெருக்கி பக்தர்களுக்கு அளித்தார் கார்மேக வண்ணன். இது குறித்து மேலும் அறிய விழைபவர்கள் நம் சற்குரு மாதாவா அன்னையா என்ற விளக்கத்தைப் படித்து ஆத்ம விசாரம் செய்து அறிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.
திருவெள்ளியான்குடி மகிமையைப் பற்றி விளக்கும்போது முடிச்சு போடுவது வெள்ளியான்குடி, முடிச்சை அவிழ்ப்பதும் திருவெள்ளியான்குடியே என்று திருவெள்ளியான்குடி திருத்தல மகிமைகளுள் ஒன்றாக இறைவனின் பிறவிப் பிணி அறுக்கும் மகிமையை விவரித்திருந்தோம். இது இன்றும் உண்மையே என்பதற்கு நிரூபணமாக அமைந்ததே இங்கு நீங்கள் காணும் வீடியோ காட்சி ஆகும். கால்கள் இரண்டும் கட்டுண்ட நிலையில் இருந்த வெண்புறாவானது தளை நீங்கி சுதந்திர பறவையாக வானில் பறந்த அரிய காட்சியையும் இங்கு நீங்கள் காணலாம். அம்பாள் ஊசி முனியில் தவமியற்றி மகிசாசுரன் என்ற அரக்க சக்திகளை களைந்த வைபவத்தை பிரபஞ்சமெங்கும் கொண்டாடிய அந்த அற்புத திருநாளில் நாம் இந்த காட்சியை காண்பதே விஜய தசமி சக்திகள் ஆக்கம் பெறுவதன் மகத்துவத்தைக் குறிப்பதாகும்.
ஸ்ரீகுப்த விநாயகர் ஸ்ரீவாஞ்சியம்
ஒரு முறை நம் சற்குருவிடம் இலவச மருத்துவ முகாம் சேவையில் ஈடுபட்டிருந்த சிவமைந்தன் என்ற நாமம் கொண்ட ஒரு மருத்துவர், “வாத்யாரே, ஹிரண்யகர்ப்பாய நமஹ என்று கூறி சிவனை வணங்குகிறோமே, ஹிரண்யன் என்பது அசுரனுடைய பெயர் அல்லவா?” என்று கேட்டார். நம் சற்குரு புன்னகையுடன், “ஆமாம், சார், அது அசுரனுடைய பெயர்தான். ஆனால், இந்த நாமம் சாதிக்கும் மகிமையை, நீங்கள் கோடி தடவை கூறினால் கூட இதன் மகிமையை உணர முடியாது. உங்கள் மூதாதையர்கள் ஸ்ரீவாஞ்சியம் குப்த தீர்த்தத்தில் நீராடிய மகிமையால் இன்று நீங்கள் இந்த நாமத்தின் மகிமையை தெரிந்து கொள்கிறீர்கள். ஒருவருக்கு கடுமையான காய்ச்சல் என்று வைத்துக் கொள்வோம். அவர் மருத்துவரை அணுகும்போது, தற்போது மருத்துவர்கள் எவரும் நாடிகளை, ஏன் உடலையே பரிசோதிப்பது கிடையாது என்பதால், அவருடைய இரத்தத்தை பரிசோதித்துக் கொண்டு வரும்படி கூறுகிறார்.”
“அந்த நோயாளி பரிசோதனைக்கு தன் இரத்தத்தை அளிக்கும்போது உண்மையாகவே அவருக்கு காய்ச்சல் இல்லை என்றாலும் வேறு ஒரு காய்ச்சல் வந்த நோயாளியின் ரிப்போர்ட்டை இவருடையது என்று தவறுதலாக அளித்து விடுவதும் உண்டு. அந்நிலையில் அவர் மீண்டும் மருத்துவரை அணுகும்போது அவருக்கு கடுமையான காய்ச்சல் இருப்பதாக நினைத்து அவருக்கு சக்தி வாய்ந்த மாத்திரைகளை (heavy antibiotics) அளித்து விட்டால் அவரின் உடல்நிலை எந்த அளவிற்கு வேண்டுமானாலும் மோசம் ஆகலாம். இது நீங்கள் உணர்ந்ததே. அதே சமயம் அந்த மருத்துவர் பல இலவச மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு சேவை செய்திருந்தாலோ அல்லது மக்களுக்கு தன் உடல் உழைப்பை ஏதாவது ஒரு விதத்தில் அளித்திருந்தாலும் போதும் அவர் தவறான மாத்திரை, மருந்துகளை அந்த நோயாளிக்கு அளித்து விட்டாலும் அதனால் அந்த நோயாளி சற்றும் பாதிக்கப்பட மாட்டார். இதுவே ஹிரண்யகர்ப்பாய நமஹ என்ற மந்திரத்தின் சக்தி. அதனால் இந்த ஒரே மந்திரத்தை நீங்கள் தொடர்ந்து ஓதிக் கொண்டு இருந்தாலே போதும் உங்களுக்கு மருத்துவ ஞானங்களும் எளிதில் கை கூடும்,” என்று வழிகாட்டி அனுப்பினார்.
ஒரு முறை காஞ்சி முனி கும்பகோணத்தில் முகாமிட்டிருந்தபோது ஒரு சில அடியார்கள் அவரிடம் ஒரு விளக்கத்தைக் கேட்டனர், அதாவது அப்போது பல மாதங்களாக மழையே இல்லாத காரணத்தால் வருண ஹோமம் இயற்றினர். ஆனால், ஒரு சொட்டு மழை கூட அதன் விளைவாகப் பெய்யவில்லை. இதுவே அவர்கள் கனிந்த கனியைக் காண வந்த காரணம். அவர்கள் ஹோமத்தில் கூறிய மந்திரங்கள், அவர்கள் ஹோம குண்டங்கள் அமைத்த விதம் அனைத்தையும் அவர்களிடம் நேரிடையாகவும், அவர்கள் காட்டிய போட்டோக்களையும் கனிந்த கனி பார்வையிட்டு பின்னர், “நீங்கள் மந்திரங்களை தெளிவாகத்தான் ஓதியிருக்கிறீகர்கள் இதில் எந்த பிழையும் இல்லை, ஆனால், இந்த ஹோம குண்டத்தில் வருண மூலைதான் சற்றே பின்னம் அடைந்துள்ளது. அதை இப்படி நீங்கள் சரி செய்ய வேண்டும்...,” என்று அவர்களுக்கு தன் திருக்கரங்களை தரையில் வைத்து காட்டினார். அது போதும் நல்ல மழை பொழிவு ஏற்படும். ஆனால், இந்த வருண ஹோமத்தை இங்கு நான் இருக்கும்போது நிறைவேற்ற வேண்டாம். நான் இவ்விடத்தை விட்டுச் சென்ற பின்னர் நிறைவேற்றினால்தான் நீங்கள் விரும்பும் பலன் கிட்டும்..”, என்று கூறி அவர்களை வழியனுப்பினார். அவர்களும் கனிந்த கனி கும்பகோணத்தை விட்டு கிளம்பிய சில நாட்கள் கழித்து ஹோமத்தை நிகழ்த்த அனைவரும் வியக்கும் வண்ணம் அற்புத மழைப் பொழிவு ஏற்பட்டது.
மகான்களின் திருவடி பட்டாலே மழை பொழியும், பட்ட மரம் துளிர்க்கும் என்னும்போது கனிந்த கனியைப் போன்ற மகான்கள் தங்கள் இடத்தை விட்டு நகர்ந்தால்தான் மழையே பொழியும் என்று அவர்தம் வாயினாலேயே கேட்பது நமக்கு வியப்பை அளிக்கிறது அல்லவா? இதற்கு உரித்தான விளக்கத்தை நம் சற்குருவின் வார்த்தைகள் மூலம் தெரிந்து கொள்வதை விட உங்களுடைய ஆத்ம விசாரத்தின் மூலம் அறிந்து கொள்வதும் குப்த தீர்த்த மகிமையே.
கல்லில் தேரை... |
கல்லில் இருக்கும் தேரைக்கும் கருப்பையில் வளரும் சிசுவுக்கும் உணவு அளிப்பவன் இறைவனே என்ற கூற்றை பலரும் சொல்லக் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், இது அவர்கள் வாயிலிருந்து வரும் வெறும் வார்த்தைகளா இல்லை அவர்கள் உண்மையிலேயே இந்த பொன்மொழியின் பொருள் தெரிந்து இதைக் கூறுகிறார்களா என்பதைப் பொறுத்ததே அவர்கள் தெய்வீகத்தில் சாதிக்கும் முன்னேற்றம் அமையும்.
பலரும் தாங்கள் ஏற்கும் ஊட்டச் சத்து மிகுந்த மாத்திரைகள், டானிக்குகளால்தான் குழந்தை நன்றாக வளர்கிறது என்று நினைத்துக் கொண்டாலும் கல்லில் இருக்கும் தேரை யார் உணவூட்டி வளர்கிறது? கருப்பையில் குழந்தையை சுற்றி இருக்கும் நீரும், குழந்தைக்குள் உணவாக செல்லும் பால் போன்ற உணவும் தாயின் உடலிலிருந்தே சென்றாலும் இரு வெவ்வெறு தன்மைகளுடன் எப்படி ஒரே பொருள் செயல்பட முடியும்? ஒரு சில நாட்களுக்கு மலம் கழிக்கவில்லை என்றால் மக்கள் படும் பாட்டை நம்மால் வர்ணிக்க இயலாது. அவ்வாறிருக்க பத்து மாதங்கள் மலமே கழிக்காமல் எப்படி குழந்தை இருக்கிறது. மூச்சை விட மூக்கையோ, வாயையோ திறப்பதும் கிடையாது.
ஒரு வேளை தாயின் கருப்பையிலிருந்து வெளி வரும்போது மலம் கழித்து விட்டால் அதனால் தாய்க்கும் சேய்க்கும் அல்லவா உயிருக்கே ஆபத்து விளையும் நிலை ஏற்படுகிறது. இது ஏன்?
இது ஒரு புறம் இருக்க ...
மழை பெய்யும்போது அந்த மழையில் சங்கு பூச்சிகள் தோன்றுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். சாதாரணமாக, சங்கின் ஜீவ சக்தியைப் பொறுத்து ஒரு வருடம் முதல் 12 வருடங்கள் வரை ஒரு சங்கு உருவாவதற்கு காலம் தேவைப்படும். அத்தனை வலிமை உடைய ஓட்டைப் பெற்றவை சங்குப் பூச்சிகள். திருக்கழுக்குன்றத்தில் 12 வருடங்களுக்கு ஒரு முறை சங்கு தீர்த்தத்தில் தோன்றிய சங்குகளை நீங்கள் தரிசித்து இருக்கலாம். அவ்வாறிருக்க சில மணி நேரங்களே பெய்யும் மழை எப்படி நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணக்கான சங்குப் பூச்சிகளை உருவாக்குகிறது? எப்படி தாயின் கர்ப்பத்தில் பிறர் கண் படாமல் சிசு ஜீவிக்கிறதோ, கல்லுக்கள் தேரை மறைந்து வாழ்கிறதோ அப்படியேதான் வானத்தில், பரவெளியில் பிறர் கண்கள் படாமல் சூட்சுமமாக இத்தகைய சங்குப் பூச்சிகள் உருவாகின்றன.
சனிவாரத்தில் தோன்றிய
சங்குவதி உய்யக்கொண்டான்மலை
முற்காலத்தில் ஒரு பெண் கர்ப்பமுற்றிருப்பது மிகவும் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே தெரிந்த இரகசியமாக வைக்கப்பட்டிருந்த காரணம் இவ்வாறு குழந்தையின் ஆரோக்யத்தை அனுசரித்துதான். தற்போதோ மாதம் ஒரு ஸ்கேன் என்றவாறு இந்நிலை மாறி, போவோர் வருவோரெல்லாம் குசலம் விசாரிக்கும் நிலை உருவாகி உள்ளதால் நல்ல மனவள, உடல்வள ஆரோக்யம் உள்ள குழந்தைகளையே காண முடியாத நிலை உருவாகி விட்டது.
ஸ்ரீதட்சிணாமூர்த்தி
மலைக்கோட்டை திருச்சி
நீங்கள் இங்கு காணும் சங்குப் பூச்சி சுபகிருது வருட புரட்டாசி மாதத்தில் உய்யக்கொண்டான்மலை ஸ்ரீஉஜ்ஜீவநாதர் திருத்தலத்தில் உருவானதாகும். புரட்டாசி சனிக் கிழமை பெருமாள் மூர்த்திக்கு உரியது என்று கூறுகிறோம். இத்தகைய புரட்டாசி மூன்றாம் சனிக் கிழமை தோன்றியதே இங்கு நீங்கள் காணும் அபூர்வ சங்கு வதி. மூன்று அடிப்படை ஜீவ சக்திகளைக் கொண்டு உருவான தெய்வ மூர்த்தியாக ஸ்ரீஉஜ்ஜீவநாதர் துலங்குவதால் 108, 1008 என்ற எண்ணிக்கையில் சோழிகளை இறைவனுக்குப் படைத்து அல்லது திருவெள்ளியான்குடி ஸ்ரீசோழீஸ்வர மூர்த்திக்கு அர்ப்பணித்து அந்த சோழிகளை சிறுவர்களுக்கு தானம் அளிப்பதால் கர்ப்பமுற்று விளங்கும் பெண்கள் நன்னிலை அடைவர்.
கர்ப்பிணிப் பெண்கள் அல்லது அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள்,
தாயுமான வெண்ணையாகி தயை கூர்ந்து உருகி
மாய மான் மழுவும் ஏந்தி மயிர்க் கூச்செறிந்து
ஏழை என் உடல் வலி தெரிந்திடாமல் பிழை பொறுத்து
மகவு ஈந்திட அருள்வாயே
என்ற சிரஞ்சீவி துதியை ஓதியவாறே திருச்சி மலைக்கோட்டையை வலம் வந்து வணங்குவதால் எத்தகைய கர்ப்பம் சம்பந்தமான குறைபாடுகளும் நீங்கி நன்முறையில் தாயும் சேயும் நலம் பெற தாயுமான ஈசனின் அருள் சுரக்கும்.
தாயுமான வெண்ணை என்பது தாயிடமிருந்து குழந்தைக்கு செல்லும் தாயுமான பிரசாதத்தின் உணவு வடிவைக் குறிப்பதாகும். இதற்கு ஈடு இணையான உணவு ஈரேழு உலகத்திலும் இல்லை. பத்து கோடி மக்களில் ஒருவர்தான் இறைவனை அடைகிறார்கள் என்பது சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம். அத்தகைய பத்து கோடி மாந்தர்களில் ஒருவராகச் செல்லும் உத்தம நிலையை அடைய வேண்டுமானால் அவர்கள் இறையருளால் இந்த தாயுமான வெண்ணை பிரசாதத்தை ஏதாவது ஒரு பிறவியில் ஏற்றிருக்க வேண்டும் என்பதே உஜ்ஜீவ உண்மையாகும். உஜ்ஜீவம் என்பது பதி பசு பாசம் என்ற ஜீவ சக்திகளின் ஒருங்கிணைப்பே. இவ்வாறு பஞ்ச பூதங்களின் இணைப்பாக தோன்றிய மனிதனை கரையேற்றும் முகமாகவே திருச்சி மலைக்கோட்டை தாயுமான ஈசர் சன்னதியில் அபூர்வமாக ஐந்து சீடர்களுடன் ஸ்ரீதட்சிணா மூர்த்தி எழுந்தருளி உள்ளதும் கலியுக மக்கள் பெற்ற பெரும் பேறே.
தத்த சூரிய மங்கள ஜோதி |
தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தை இருட்டைத்தான் சந்திக்கிறது என்று நாம் நினைக்கிறோம். திருத்தலங்களில் இறை மூர்த்திகள் உறையும் கருவறைகளும் மின்சார பல்போ, விளக்கு தீபங்களோ இல்லா விட்டால் இருளில் மூழ்கி விடும் என்று மக்கள் நினைப்பது இயற்கையே. இந்தக் கருவறைகளில் எல்லாம் இறை சக்தி ஒளிமயமாய்த் தோன்றி அருள் கூட்டுகிறது என்பதே உண்மை. இறை மூர்த்திகளுக்கு தீபாராதனைகள் நிகழும் போது ஒரு தீபம், இரண்டு தீபம், சகஸ்ர தீபங்கள், பஞ்ச தீபங்கள் என்று உபசாரம் நிறைவேற்றும்போது இந்த கருவறை இறை சக்தியை மக்கள் பெரும் முகமாக நம் முன்னோர்களால் நிறைவேற்றப்பட்ட ஏற்பாடே இது. இத்தகைய ஒளி கூடும் உபசாரங்களில் தோன்றும் ஒவ்வொரு எண்ணிக்கை உள்ள தீபமும் ஒவ்வொரு விதமான அனுகிரகத்தை பக்தர்களுக்கு வாரி வழங்கும் தன்மை உடையது.
ஸ்ரீமங்கள விநாயகர்
செருகுடி
மின்சாரம் இல்லாத காரணத்தால் நாம் கண்களை மூடிக் கொண்டு ஒரு இருண்ட அறையில் அமர்ந்திருந்தாலும் அப்போது திடீரென்று மின்சாரம் வந்து வெளிச்சம் வந்து விட்டால் நாம் கண்களை மூடிக் கொண்டு இருந்தாலும் மின்சார பல்புகள் ஒளி வீசுவதை உணர முடிகிறது அல்லவா? அதேபோல்தான் கருப்பைக்குள் இருக்கும் சிசுவும் அது கண்ணை மூடி இருந்தாலும் கருவறைக்குள் இருக்கும் ‘ஒளி பிரகாசத்தை’ அதனால் நிச்சயமாக உணர முடியும். தற்காலத்தில் ‘வாடகைத் தாய்’ என்ற முறையிலோ அல்லது செயற்கையாக டெஸ்ட் ட்யூப் குழந்தை என்ற முறையில் குழந்தை தோன்றும்போது அது பலவிதமான இருண்ட, வெளிச்ச சூழ்நிலைகளை அனுபவிக்க வேண்டி உள்ளதால் இது அந்த சிசுவின் ஆரோக்யத்தையும் தாயின் ஆரோக்யத்தையும் பாதிக்கும் என்பது உண்மையே.
எதிர்காலத்தில் இத்தகைய சூழ்நிலைகள் வெகுவாக சமுதாயத்தில் பரவும் என்பதால் வருமுன் காப்பாக நம் சற்குரு மேற்கூறிய தாயுமான துதியையும் வழிபாட்டையும் அருளியுள்ளார்கள் என்பதே அவர்தம் கருணையை பறைசாற்றுகிறது.
இது போன்ற சூரிய மங்கள ஜோதி ஒன்றே வரும் 25.10.2022 செவ்வாய்க் கிழமை அன்று தோன்ற உள்ளது என்பதே சித்தர்கள் அறிவிக்கும் மகாத்மியமாகும். சூரிய கிரகணத்தின்போது அன்று தோன்றும் ஜோதியே இவ்வாறு சித்தர்களால் தத்த சூரிய மங்கள ஜோதி என்ற நாமத்துடன் திகழ்கிறது. தத்தம், தத்து என்ற வார்த்தைகள் எல்லாம் தத்த என்று வார்த்தையிலிருந்து தோன்றியவையே. சூரிய ஒளிப் பிரவாகத்தில் திகழும் சக்திகள் 25.10.2022 அன்று தோன்றும் சூரிய கிரகணத்தால் கொள்ளும் மாற்றத்தையே இவ்வாறு ‘தத்த’ சக்திகளாக வர்ணிக்கிறார்கள்.
சூரியன், செவ்வாய் என்ற நவகிரக மூர்த்திகள் உஷ்ணத்தை, வெப்பத்தை அளிக்கவல்லவை. சுவாதி நட்சத்திர மூர்த்தி சுவாதி ஜோதி என்ற அக்னி சக்தியை, ஒளி வெள்ளத்தை அருளவல்லவள். இந்த ஒளிப் பிரவாக சங்கமம் தத்த சங்கமம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஒளிப் பிரவாக சங்கமத்தில் சுக்ர ஜோதியும், சந்திர ஜோதியும் குளிர்ந்த கிரண சக்திகளாக இணைய அப்போது தோன்றும் சக்தியே சௌம்யம் என்று சித்தர்களால் அழைக்கப்படுகிறது. அபூர்வமான இந்த சௌம்யம் என்ற ஜோதி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறையே தோன்றுவதால் இந்த சௌம்யம் ஜோதி தரும் சக்திகளை பக்தர்கள் நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
படம்பக்கநாதர் தரிசனம்
திருஅண்ணாமலை
சௌம்யம் என்றால் சாந்தம், அழகு, அமைதி என்றெல்லாம் பொருள் உண்டு. இந்த சௌம்ய சக்திகளை அடியார்கள் அனைவரும் பெற வழிவகுப்பதே சூரிய கிரகணம் நிகழும் 25.10.2022 அன்று செருகுடி திருத்தலத்தில் நிகழ்த்தும் வழிபாடுகள் ஆகும். 25.10.2022 அன்று மதியம் சுமார் 2.30 மணிக்கு ஆரம்பமாகும் சூரிய கிரகணம் அன்று மாலை சூரிய அஸ்தமன நேரமான சுமார் 6.30 மணி வரை நீடிக்கிறது. தீபங்கள் ஒளி கூட்டும் நாளில் சூரிய கிரகணம் அமைவது என்பது நம் வாழ்வில் ஒரே ஒருமுறை சித்திக்கும் இனிய மகாத்மியமாகும். செருகுடி, சிறுகுடி என்ற பெயருடைய பல திருத்தலங்கள் அமைந்துள்ளன என்றாலும் இங்கு நாம் குறிப்பிடுவது கேது தலமான திருப்பாம்புரம் அருகில் உள்ள செவ்வாய் பகவான் தனிச்சன்னதி கொண்டு அருளும் செருகுடி ஆகும்.
சௌம்ய சக்திகளை
பிரதிபலிக்கும் கரடிகள்
மதியம் 2.30 மணி என்ற சூரிய ஹோரை நேரத்தில் கிரகண காலம் அமைந்தாலும், நம் பாரத திருநாட்டில் மாலை 5 மணி அளவில் மட்டுமே சூரிய கிரகணத்தைக் காணும் வாய்ப்புள்ளதால் அடியார்கள் கிரகண சமயமான மதியம் 2.30 மணி முதலே வழிபாடுகளை இயற்றுதல் நலமாகும். பலரும் சூரிய கிரகணம் அமையும் நேரமான மாலை 5 மணிக்கு வழிபாட்டை ஆரம்பிப்பதும் தவறு கிடையாது. பெரும்பாலான திருத்தலங்களில் சூரிய கிரகணத்தின்போது நடைசார்த்தும் வழக்கம் இருப்பதால் சூரிய கிரகணத்திற்குப் பின் செருகுடி சிவத்தலத்தில் அமைந்துள்ள செவ்வாய் பகவானுக்கு ஆபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றி வழிபடுவதால் அபூர்வமான இந்த சௌம்யம் என்ற சக்திகளை அடியார்கள் பெற ஏதுவாகும்.
சூரிய கிரகணத்தின்போது கேது பகவான் பாம்பு வடிவில் சூரிய மூர்த்தியைத் தீண்டுவதால் கேது பகவானுக்குரிய திருத்தலமாக அருகிலுள்ள திருப்பாம்புரம் என்ற கீழ்பெரும்பள்ளம் அமைவது நமக்குக் கிடைத்த எத்தகைய பேறு. எனவே செருகுடி மங்கள தீர்த்தத்திலும், திருப்பாம்புரம் ஆதிசேஷ தீர்த்தத்திலும் தீர்த்தம் பெற்று செருகுடி செவ்வாய் பகவானுக்கு அபிஷேகம் இயற்றி வழிபடுவதால் நாம் மேற்கூறிய சௌம்யம் சக்திகளை எளிதில் பெறலாம். ஸ்ரீஅகத்தியர், சூரியன், சந்திரன் போன்றோர் வழிபட்ட தலமாக திருப்பாம்புரம் அமைவதால் இத்தகைய பெருமை வாய்ந்த ஆதிசேஷ தீர்த்தத்தால் சூரிய கிரகணத்தின்போது அபிஷேகம் இயற்றுவது என்பது வாழ்வில் கிடைத்தற்கரிய எத்தகைய பேறு?
செருகுடி திருத்தலத்தில் செவ்வாய் பகவானுக்கு அபிஷேகம் நிறைவேற்றும்போது பசும்பாலில் குங்குமம், குங்குமப்பூ கலந்து செம்பால் அபிஷேகம் இயற்றுதல் நலமே. இத்தகைய அபிஷேகத்திற்குப் பின் ஆதிசேஷ குள தீர்த்தம், செருகுடி மங்கள தீர்த்தம் என்ற வரிசையில் அபிஷேகத்தை நிறைவு செய்ய வேண்டும்.
திருவெள்ளியான்குடியில் தர்ப்பண பூஜைகள் நிறைவேற்றும்போது சுக்ர நாகக் கொடியை தாங்கி திருத்தலத்தை வலம் வருமாறு நம் சற்குரு அறிவித்ததன் பின்னணியில் எத்தனைய பிரம்மாண்டமான முன்னேற்பாடுகள் துலங்குகின்றன என்பதற்கு இந்த சூரிய கிரகணமும் ஒரு சாட்சியே. சூரிய கிரகணம் சம்பவிக்கும் துலா ராசியில் சுக்ர பகவான் ஆட்சி பீடத்தில் அமர்வதே சுக்ர தீர்த்தம் குளக் கரையில் வைத்து பூஜித்த நாகக் கொடியின் மகிமையாகும். செருகுடியில் நிகழ்த்தும் வழிபாடுகளின்போது இந்த நாகக் கொடிகளைத் தாங்கி திருத்தலத்தை வலம் வருதல் சிறப்பாகும்.
ஆதிசேஷ தீர்த்தம்
திருப்பாம்புரம்
ஆலயத்தை, திருக்குளத்தை வலம் வரும்போது,
ஓம் சௌம்ய சௌம்யாய வித்மஹே
சௌம்ய தேவாய தீமஹி
தந்நோ சௌம்யநாராயண ப்ரசோதயாத்
என்ற சௌம்யம் சக்தி துலங்கும் காயத்ரி மந்திரத்தை ஓதியவாறே வலம் வருதல் சிறப்பாகும். இதில் மற்றோர் அதிசயம் என்னவென்றால் சோமனின் புதல்வனே சௌமன், அதாவது சந்திரனின் புதல்வனே புதன். இந்த சௌமனும் தாயைக் கண்ட சேயைப் போல் மறுநாள் புதன்கிழமை இந்த கிரக சஞ்சாரத்தில் இணைய, அது ஐந்து கிரகங்கள் இணையும் கிரக அமைப்பாக விளங்குகிறது. 25 என்பது எண் கணித ரீதியாக கேது கிரகத்திற்கு உரியதாக அமைய, புத கிரகத்திற்குரிய புதன் கிழமையில் ஐந்து என்ற புத கிரகத்திற்கு உரிய எண் கணித சக்தி பெறுவது என்றால்...?!
கிருஷ்ண பகவானின் நிறம் கருப்பு என்று நாம் கூறுகிறோம் அல்லவா? சித்தர்களோ கிருஷ்ண பகவானின் நிறம் பொன்னிறம் என்று சொல்கிறார்கள். இந்த கருப்பு நிறமே சௌம்ய ஜோதியாகத் திகழ்கிறது என்பது சித்தர்கள் கூற்று. கிருஷ்ண பகவானை தரிசனம் செய்து இந்த சௌம்ய நிறத்தை நாம் உறுதி செய்து கொள்ள முடியாது என்றாலும் இங்குள்ள சௌம்ய ஜோதியைப் பிரதிபலிக்கும் கரடிகளைப் பார்த்து நம் அபிலாஷையைப் பார்த்து பூர்த்தி செய்து கொள்ளலாமே. கிருஷ்ண பகவான் ஜாம்பவான் என்ற கரடி உருவம் கொண்ட பக்தரின் அருமை மகள் ஜாம்பவதியைக் கரம் பிடித்த மகாத்மியமும் நமக்குத் தெள்ளென விளங்குமே.
தலவிருட்சம் வன்னி
திருப்பாம்புரம்
இந்த கரடிகள் சௌம்ய ஜோதிகளைப் பிரதிபலிப்பது ஒரு புறம் இருக்க, ஒரு மனிதன் தன் குருநாதரை எப்படிப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதைத் தெரிவிக்கின்றனவே. இந்த ‘கரடிப் பிடியையே’ ஒவ்வொரு சாதகனும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய கரடி சித்தர் பாடமாகும். கரடி சித்தர் என்னும் உயர்ந்த மகான் தினமும் குறிப்பிட்ட ஹோரை நேரத்தில் திருவாசி திருத்தல அன்னமாம் பொய்கை திருக்குளத்தில் நீராடி ஸ்ரீபாலாம்பிகையைத் தரிசனம் செய்கிறார். இவ்வாறு ஸ்ரீகரடி சித்தர் பெறும் அனுகிரக சக்திகளை நாம் மேற்கண்ட சூரிய கிரகணத்தின்போது செருகுடி திருத்தல வழிபாட்டால் பெறமுடியும் என்பதும் இந்த கிரகண மகாத்மியங்களுள் ஒன்றாகும்.
மனிதன் உலகியலில் கொள்ளும் நாட்டத்தைப் பொருத்து அமையும் ஒரு கதையைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம். ஒரு மனிதன் நடக்கும்போது ஒரு பாழுங்கிணற்றில் தவறி விழுந்து விடுகின்றான். அப்போது அதிர்ஷ்டவசமாக ஒரு ஆலமரத்தின் விழுது ஒன்றைப் பற்றிக் கொண்டு கீழே விழுந்து விடாமல் கிணற்றின் உள்ளே தொங்கிக் கொண்டிருக்கிறான். கிணற்றின் உள்ளே தவறி விழுந்து விட்டாலோ உள்ளே படம் எடுத்து ஆடிக் கொண்டிருக்கும் ஒரு கருநாகத்திற்கு இரையாக வேண்டி வரும். அந்நிலையில் ஆலமரத்தில் உள்ள ஒரு தேன் கூட்டிலிருந்து தேன் துளிகள் இவன் வாய்க்கு அருகிலேயே சொட்டிக் கொண்டு இருக்கின்றன. அதைப் பார்த்த அவன் தானிருக்கும் ஆபத்தான சூழ்நிலையை மறந்து அந்த தேனைச் சுவைக்க தன் நாக்கை நீட்டி நீட்டி முயற்சி செய்தானாம். இதுவேதான் நம்முடைய நிலையும்.
ஆனால், இது மனிதனின் இயற்கையான சுபாவமாக இருப்பதால் இதையும் மாற்ற கருணை கொண்டு நம்மைக் காக்க துணைபுரிவதே நம் சற்குரு நமக்காக அளிக்கும் செருகுடி திருத்தல வழிபாடு. செறுகுடி செவ்வாய் பகவானுக்கு இயற்றும் வழிபாட்டில் முதலில் தேனை அபிஷேகிப்பதால் பக்தர்கள் இத்தகைய தற்காலிக சுகத்திற்கு அடிமை ஆகாமல் இறைவனையே பற்றிக் கொள்ள இது துணை நிற்கும்.
ஸ்ரீதட்சிணாமூர்த்தி
திருப்பாம்புரம்
மற்ற எந்த சூரிய கிரகணத்திற்கும் இல்லாத இத்தகைய சிறப்பு இந்த கிரகணத்திற்கு மட்டும் அமைவது இந்த சூரிய கிரகணம் நிகழும் ராசி அம்சமாகும். துலா ராசியில் இந்த கிரகணம் தோன்றுகிறது. கனிந்த கனியின் கூற்றின்படி துலா ராசி என்பது 12 ராசிக் கட்டங்களில் மத்தியில் வரும் ராசியாகும். அதனால் எத்தகைய இடர் வரினும் நடுநிலை தவறாத பண்பை தருவது இந்த இராசியில் நிகழும் சூரிய கிரகண வழிபாட்டு பலனாகும். 25, 26 அக்டோபர் தேதிகளில் நான்கு கிரகங்களும், ஐந்து கிரகங்களும் துலா ராசியில் கூடுகின்றன. உண்மையில் இந்த 4, 5 கிரகங்களின் சங்கமம் ஒன்பது கிரகங்களின் சங்கமமாகவே திகழ்கின்றது. நவாம்ச ரீதியாக குரு பகவான் சந்திரன் கூடுதல், துலா ராசியில் உச்சம் கொள்ளும் சனி பகவான் தன் விசேஷமான மூன்றாம் பார்வையால் குருவைப் பார்த்தல் போன்ற பல ஜோதிட அம்சங்களும் ஒன்பது கிரகங்களும் துலா ராசியில் கூடும் மகத்துவத்தைக் குறிக்கின்றது. எனவே லோகா சமஸ்தா சுகினோ பவந்து என்ற சித்தர்களின் கோட்பாட்டை முழுக்க முழுக்க அங்கீகரிப்பதாகவே வரும் சூரிய கிரகணம் அமைகிறது. மத்திய ராசியான துலாவில் சங்கமமாகும் அனைத்து நவகிரகங்களின் சக்திகளும் நன்மையையே வர்ஷிக்கும் என்பதே இங்கு தோன்றும் குசா சக்திகளின் மகிமையாகும்.
தத்த சூரிய மங்கள பூஜையை செருகுடி திருத்தலத்தில் மட்டுமல்லாது கீழ்க் கண்ட தலங்களிலும் நிறைவேற்றி பலன் பெறலாம்.
1. ஆதிசேஷ தீர்த்தம் அமைந்த திருபாம்புரம், கீழ்பெரும்பள்ளம்
2. சுவாதி நட்சத்திரக் கோயிலான சித்துக்காடு, சென்னை
3. பெரிய பாம்பு உருவில் கேது திகழும் திருச்செங்கோடு
4. வைத்தீஸ்வரன் கோயில்
5. கர்நாடகா குக்க சுப்ரமண்யா திருத்தலம்
6. திருஅண்ணாமலை
7. திருக்கோஷ்டியூர்
25, 26 அக்டோபர் என்ற இரண்டு தினங்களிலுமே மேற்கண்ட திருத்தலங்களில் வழிபாடுகளை இயற்றி பக்தர்கள் பலன் பெறலாம். ஏதாவது ஒரு தலத்தில் ஒரு நாள் வழிபாடு என்ற முறையில் நிகழ்த்துவதும் ஏற்புடையதே.
ஸ்ரீசேஷபுரீஸ்வரர்
திருப்பாம்புரம்
சேஷம், சேடம் என்றால் மிச்சம், மீதி, கழிவு என்றெல்லாம் பொருள் உண்டு. திருப்பாம்புரம் திருத்தல இறைவனின் திருநாமம் ஸ்ரீசேஷபுரீஸ்வரர் என்பதாகும். பூமியில் தோன்றிய உயிர்கள் அனைத்தும் மிச்சம், மீதி என்ற கர்ம வினை பாக்கிகளைக் கொள்ளாமல் விரைவில் இறைவனை அடைய வேண்டி பிரம்ம மூர்த்தியே திருப்பாம்புரம் திருத்தல ஆதிசேஷ தீர்த்தத்தில் நீராடினார் என்றால் இதன் மகிமைதான் என்னே ? தீரா சுவை காரணமாகவே மனிதர்கள் தொடர்ந்து பிறப்பு எடுப்பதால் எவ்வளவுக்கு எவ்வளவு சுத்தமான தேனால் இங்கு இறைவனுக்கு அபிஷேகம் நிறைவேற்றுகிறோமோ அந்த அளவிற்கு பிறவிச் சுமைகள் தணிந்து இறைவனை எளிதில் அடையலாம்.
சென்னையிலுள்ள சித்துக்காடு திருத்தலத்தில் சுவாதி நட்சத்திரம் தோறும் குந்தள ஜோதி என்ற அபூர்வ ஜோதி பிரகாசிக்கின்றது. எனவே சுவாதி நட்சத்திரம் அமையும் நேரமான 25.10.2022 மதியம் 2.30 மணி முதல் மறுநாள் 26.10.2022 மதியம் 1.30 மணி வரை இங்கு தொடர்ந்து தீப சேவை நிறைவேற்றுதல் சிறப்புடையதாகும். இத்திருத்தலத்தில் மட்டும்தான் என்றல்லாது இங்குள்ள தீர்த்தக் கரையிலும் எத்தனை தீபங்களை வேண்டுமானாலும் தொடர்ந்து ஏற்றி பக்தர்கள் பயன் பெறலாம். சௌம்யம், குந்தளம் என்ற இரண்டு விதமான அபூர்வ அக்னி சக்திகள் இந்த சூரிய கிரகண சக்தியால் இத்தலத்தில் தோன்றுகின்றன என்பதே நம் சற்குரு நமக்காக பரிந்தளிப்பதாகும்.
திருச்செங்கோடு திருத்தலத்தில் படிகளில் எல்லாம் மேற்கூறிய இரண்டு நாட்களிலும் தீபங்கள் ஏற்றி பலன் பெறலாம். இந்த தீப ஒளியில் இரவில் திருச்செங்கோடு மலை திருமேனி செந்நிற ஒளியில் பிரதிபலிக்கும் என்பதே இந்த ஜோதிகளின் தன்மையாகும்.
தனி சன்னதி கொண்டு வைத்தீஸ்வரன் கோயில் திருத்தலத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீசெவ்வாய் பகவானுக்கு 25.10.2022 அன்று வழிபாடுகள் இயற்றி இங்குள்ள சித்தாமிர்த தீர்த்தத்தால் அல்லது ஆதிசேஷ குள தீர்த்தால் அபிஷேகம் இயற்றுவது நலமே. இதிலும் மலைத் தேனை ஆரம்ப அபிஷேக பதார்த்தமாக சேர்த்துக் கொள்தல் நலம்.
வசதியின்மை காரணமாக அல்லது வேறு பல காரணங்களால் கர்நாடக மாநிலத்தில் உள்ள குக்க சுப்ரமண்யர் திருத்தலத்திற்கு செல்ல இயலாதவர்கள் கனக சுந்தராக்னி என்ற நாகதேவதை வலம் வரும் குளித்தலை ஐயர்மலையை சௌம் என்ற பீஜாட்சரம் ஓதி செவ்வாய்க் கிழமை தோறும் ஓதி வலம் வருதல் நலம். குறைந்தது ஏழு செவ்வாய்க் கிழமைகளில் இத்தகைய வழிபாடுகளை தொடரவும்.
ஸ்ரீபிருத்வி நந்தி மூர்த்தி
திருஅண்ணாமலை
திருஅண்ணாமலையில் பிருத்வி நந்தி எதிரே அமைந்துள்ள தரிசனமே படம்பக்கநாதர் தரிசனம் ஆகும். பிருத்வி நந்தியில் கிரிவலத்தை தொடங்கி, சூரிய கிரகணம் அமையும் நேரம் முழுவதும் கிரிவலம் வந்து மீண்டும் பிருத்வி நந்தியிடம் நிறைவு செய்வது சிறப்பாகும். அபிஷேக ஆராதனை பூஜைகளை ரமணாஸ்ரமம் அருகிலுள்ள ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி கோயிலிலோ அல்லது பிருத்தி நந்தி மூர்த்திக்கோ இயற்றுவதும் சிறப்பே.
திருக்கோஷ்டியூர் திருத்தலத்தில் ஸ்ரீசௌம்ய நாராயண மூர்த்தி எழுந்தருளி உள்ளதால் இங்குள்ள திருப்பாற்கடல் தீர்த்தத்தில் (தேவபுஷ்கரிணி) நீராடி தீபங்கள் ஏற்றி வழிபடுவது சிறப்பாகும். சௌம்ய பெருமாள் காயத்ரீ மந்திரத்தை 24 மணி நேரமும் இங்கு வாய் விட்டு ஓதுதல் மிகவும் சிறப்பாகும். ராமானுஜர் ஓதிய அஷ்டாட்சர மந்திர சக்திகள் இன்றும் இத்திருத்தலத்தில் திகழ்வதால் தொடர்ந்த சௌம்ய காயத்ரீ மந்திர ஜபத்தால் இந்த மந்திர சக்திகள் எட்டெழுத்து நாராயண நாமத்துடன் திகழும் மகிமைகளை கண் கூடாகக் காணலாம்.
மனித பிறவிகள் ஏழு என்று கூறுவதுண்டு. உண்மையில் இவை மனிதப் பிறவியின் ஏழு நிலைகளைக் குறிப்பதாகும். இந்த ஏழு நிலைகளைக் குறிப்பதாகவே வராகமிஹிரரின் ஜாதக விளக்கங்கள் பெரும்பாலும் ஏழு கிரகங்களின் அம்சங்களையே விளக்குகின்றன. சூரிய கிரகண நாளான 25.10.2022 அன்று ஆரம்பித்து மேற்கண்ட ஏழு திருத்தலங்களை ஏதாவது ஒரு வரிசையில் வழிபட்டு வந்தால் பக்தர்களின் பிறவிக் கடன்கள் சிறிது சிறிதாகத் தீர்ந்து இறைவனின் திருவடியை நிச்சயம் சேர்வார்கள் என்பதே நம் சற்குரு பரிந்தளிப்பதாகும்.
ஸ்ரீசூர்ய லிங்க மூர்த்தி
திருஅண்ணாமலை
பூர்வீக செவ்விந்தியர்களிடம் ஒரு கிரகண கதை பிரசித்தம். அதாவது ஒரு கரடி சூரியனைச் சாப்பிட முயன்றதாம். அப்போது சூரிய பகவான், “என்னைச் சாப்பிட முயற்சிக்காதே, நானோ கொதிக்கும் அனல் பிழம்பு. அதோ அங்கே தெரிகிறாளே அந்த கன்னியைச் சாப்பிடு அவள் ஐஸ் மாதிரி சுவையாக இருப்பாள்...”, என்று சந்திரனைச் சுட்டிக் காட்டியதாம். இந்த விஞ்ஞான உண்மையை உறுதி செய்வதாகவே சூரிய கிரகணத்தை அடுத்த பதினைந்து நாட்களில் சந்திர கிரகணமும் அமைவதால் அடியார்கள் இந்த சந்திர கிரகணத்தையும் நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 8.11.2022 செவ்வாய்க் கிழமை அன்று அமையும் இந்த சந்திர கிரகணத்தை திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து சூரிய சந்திர பகவான் மூர்த்திகளின் பூர்ண அனுகிரகத்தைப் பெறலாம்.
40 வருடங்களாக ஒரு லட்சம் முறை திருஅண்ணாமலையை வலம் வந்து வணங்கியவரே சேஷாத்ரி சுவாமிகள். இந்த 40 வருடங்களில் சுவாமிகள் எத்தனை சூரிய கிரகணங்களையும் சந்திர கிரகணங்களையும் தரிசனம் செய்து அவற்றின் பலன்களை எல்லாம் திருஅண்ணாமலையாரின் குறித்த முகடு தரிசனங்களில் பதித்து வைத்திருப்பார் ? அந்த தரிசன பகுதிகளின் அனுகிரகங்களைப் பெறவே நாம் சௌம்ய நாராயணப் பெருமாளின் காயத்ரீ மந்திரத்தை ஜபிக்கும்படி நம் சற்குரு அருளியுள்ளார் என்ற இரகசியம் தற்போது உங்களுக்குத் தெளிவாகி இருக்கலாம்.
எனவே வரும் சந்திர கிரகண நாள் அன்று ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமத்தில் கிரிவலம் ஆரம்பித்து சூரிய லிங்கத்திற்கு செம்பால் அபிஷேகம் நிறைவேற்றி வழிபட்டு, சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமத்தில் கிரிவலத்தை நிறைவு செய்தல் சிறப்பாகும்.
மிச்சப் பிழை அறுக்கும் பேரருளாளன் தரிசனம் என்று ஐயர்மலையில் ஒரு தரிசனப் பகுதி உண்டு. மிச்சப் பிழை என்றால் என்ன? ஒரு மனிதன் தான் பிற பெண்களிடம் தவறாக நடந்த கொண்ட நிகழ்ச்சிகளை தன் மனைவியிடமோ நண்பர்களிடமோ தெரிவித்து மன்னிப்பு கோரலாம். ஆனால், வேலைக்காரி, குருடர்கள், முடவர்கள் போன்றோரிடம் தவறாக நடந்து கொள்தல், அவர்கள் சொத்தை அபகரித்தல் போன்ற தவறுகளை யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாதே. இவ்வாறு பிறரிடம் கூற முடியாத தவறுகளே மிச்சப் பிழை என்பதாகும். இத்தகைய தவறு புரிந்தோருக்கும் அருள்காட்டிய அண்ணலே சேஷாத்ரி சுவாமிகள் ஆவார். சேஷம் என்றால் மீதம், அத்ரி என்றால் மலை. மலைபோல் குவிந்த பாவ வினைகள் தீரவும் அருள்புரிபவரே ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஆவார்.
செவ்வாய்க் கிழமையுடன் சந்திர கிரகணம் இணையும்போது திருஅண்ணாமலையார் அளிக்கும் விமோசனமே இதுவாகும். “சோனாத்ரியை வலம் வந்த அத்திரியே சேஷாத்ரி...”, என்பார் நம் சற்குரு. குளம், ஆறுகள் போன்றவை தங்கள் கரையாகிய எல்லைக்குள் அடங்கி இருத்தலே அனைவருக்கும் நன்மை பயப்பதாகும். ஆனால், சமுதாய குற்றங்கள் பெருகும்போது இத்தகைய தீர்த்தங்களும் எல்லை மீறுவதை பலரும் கேள்விப்பட்டுள்ளோம், அதன் விளைவுகளை அனுபவித்தும் உள்ளோம். அத்தகைய “எல்லை மீறல்” தோஷங்களுக்கும் நிவர்த்தி நல்கவல்லதே இவ்வாறு செவ்வாயும் சந்திர கிரகணமும் இணையும் நாளாகும்.
ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள்
ஜாதகம்
ஒரு வயதான மாது தீரா தலைவலியால் அவதிப்பட்டார். அவர் பார்க்காத மருத்துவர் இல்லை, செய்யாத வைத்தியம் இல்லை. பல வருடங்கள் ஓடி விட்டன... ஒரு முறை ஒரு வைத்தியரைப் பார்த்தபோது அந்த அம்மணி தான் பல வருடங்களாகப் பார்த்த வைத்தியர்களைப் பற்றியும், மேற்கொண்ட வைத்தியங்களைப் பற்றியும் கதை கதையாய் கூற அனைத்தையும் கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்த அந்த வைத்தியர் சட்டென அந்த அம்மணியின் முகத்தில் டால் அடித்து பிரகாசித்த வைரக் கல் மூக்குத்தியைப் பார்த்து, “ஏனம்மா, இந்த மூக்குத்தியை எவ்வளவு நாள் அணிந்திருக்கிறீர்கள்?” என்று வினவ அந்த அம்மணியும் தன்னுடைய திருமணத்திலிருந்தே அந்த மூக்குத்தியை அணிந்து கொண்டிருப்பதாகக் கூற அந்த வைத்தியரும் அந்த மூக்குத்தியைக் கழற்றி விட்டு சில நாட்கள் கழித்து மீண்டும் தன்னை வந்து பார்க்குமாறு கூறினார்.
என்ன ஆச்சரியம், அந்த மூக்குத்தியைக் கழற்றிய அடுத்த நாளே இத்தனை வருடங்களாக அந்த மாதைத் துரத்திய தலைவலி பறந்தோடி விட்டது.
இது ஒரு புறம் இருக்க ...
சேஷாத்ரி சுவாமிகள் எப்போதும் திருஅண்ணாமலையை இரவு பகல், வெயில் மழை என்று பாராது எந்நேரமும் வலம் வந்து கொண்டிருப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு நாள் ஒரு பக்தர் இவ்வாறு வலம் வந்து கொண்டிருந்த சேஷாத்ரி சுவாமிகளைப் பார்த்து, “சுவாமி, நீங்கள் தொடர்ந்து வலம் வந்து கொண்டிருப்பதை நான் பல காலம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இத்தனை முறை வலம் வந்து பார்ப்பதற்கு இந்த மலையில் என்ன அதிசயம் இருக்கிறது, பார்ப்பதற்கு இதில் கல், மண், செடி கொடிதானே தெரிகிறது?” என்று கேட்கவே, சுவாமிகளும், “அப்படியா...” என்று கேட்டு அந்த பக்தர் தன் மேல் போர்த்தியிருந்த கனத்தை துண்டை அவர் முகம் கண்கள் மறையும் அளவிற்கு போர்த்தி விட்டு, “இப்போது அண்ணாமலையானைப் பார்...”, என்றார்.
திருவானைக்கோவில்
என்ன அதிசயம்...?
அந்த பக்தர் பார்த்தார்... பார்த்தார்...பார்த்துக் கொண்டே இருந்தார்...
திருஅண்ணாமலையைப் பார்த்த பக்தருக்கு அந்த மலையில் ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள் தோன்றி பிரகாசித்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியதாம். ஆச்சரியத்துடன் பல நிமிடங்கள் அந்த அற்புத காட்சியை கண்ணாரக் கண்டு தரிசித்த பக்தர் துண்டை விலக்கி சேஷாத்ரி சுவாமிகளுக்கு நன்றி கூற அவரைப் பார்த்தாராம்...
அவர் எங்கே அங்கு இருந்தார். கிரிவலப் பாதையில் பல மைல் தூரம் கடந்து சென்று விட்டிருந்தாராம் சுவாமிகள். சேஷாத்ரி என்ற வைரம் தூரத்தில் சென்று மறைந்து விட்டது. ஆம், அந்த பக்தர் திருஅண்ணாமலையில் தரிசனம் செய்தது சேஷாத்ரி சுவாமிகள் அத்தனை காலம், அதாவது சுமார் 20 வருடங்கள் திருஅண்ணாமலையை கிட்டத்தட்ட 50000 முறை வலம் வந்த கிரிவலப் பலன்களை சூரிய சக்தியாகவும், அதன் பிரதிபலிப்பான சந்திர சக்தியாகவும் மலை முகடுகளில் சேர்த்து வைத்த நட்சரத்திரங்களாகத் துலங்கிய புண்ணிய சக்திகளைத்தான்.
வைரத்தின் பிரதிபலிப்பு சரியான கோணத்தில் அமையாதபோது அது ஒருவருக்கு தலைவலியைத் தருகிறது. அந்த கோணம் சேஷாத்ரி சுவாமிகள் போன்ற உத்தமர்களால் சீரமைக்கப்படும்போது அது சூரிய சந்திர கதிர்களாக மக்கள் சமுதாயத்திற்கு அனுகிரகங்களை வாரி வாரி வழங்குகிறது.
இந்த உண்மையை அறிவிப்பதே சுவாமிகளின் ஜனன ஜாதகமாகும். லக்னத்தில் சனீஸ்வர பகவான் அமர்ந்தால் அந்த ஜாதகர் நிரந்தர கடனாளியாக இருப்பார். இது உண்மையே. இத்தகைய நிரந்தர கடனாளியான சுவாமிகள் யாருக்கு கடன்பட்டிருந்தார்? இதை உணர்த்துபவர்களே இரண்டில் அமைந்த சூரிய பகவானும் பத்தில் அமைந்த சந்திர பகவானும். ஆம், சிவபெருமானை பக்தியுடன் சாக்த பரபிரம்மமாக வலம் வந்து வணங்கிய பெருமை சுவாமிகள் ஜாதகத்தின் மூலமும் தெளிவாகின்றதே. இந்த அனுகிரகங்களை மற்றவர்களுக்கு அளிக்க வேண்டுமானால் அந்த ஜாதகர் குருவின் அனுகிரகத்தைப் பூரணமாக பெற்றிருக்க வேண்டும். இது உண்மைதான் என்று பறைசாற்றுவதே சுவாமிகள் ஜாதகத்தில் ஐந்தில் மேஷ ராசியில் எழுந்தருளிய குரு பகவான் ஒன்பதாம் விசேஷ பார்வையாக ஜாதகரின் லக்னத்தைப் பார்க்கும் அம்சமும் ஆகும்.
ஸ்ரீசப்தவாலி மகரிஷி |
திருவானைகோவில் திருத்தலத்தில் ஐந்தாவது பிரகாரமாக அமைந்துள்ளது விபூதி பிரகாரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பிரகாரத்தை எழுப்ப கூலியாட்களாக வந்த உத்தமர்களுக்கு எல்லாம் சிவபெருமானே அவர்கள் நிறைவேற்றிய திருப்பணிக்கு விபூதியை அளித்தாராம். அது அவரவர் அன்று நிறைவேற்றிய பணியைப் பொறுத்து தங்க நாணயங்களாக மாறின. இறைவனின் பிரசாத்தைப் பெற்ற அனைவரும் உடலும் உள்ளமும் மகிழ்ந்தனர் என்பது ஆச்சரியம் அளிக்கும் செய்தி அல்லவே. ஆனால், இதில் ஆச்சரியம் அளிக்கும் செய்தி என்னவென்றால் அங்கு வேலைக்காக வந்த எவரும் மற்றவர் என்ன கூலி பெற்றார் என்பதையே அறிய ஆவல் கொண்டு அவர் கைகளைப் பார்க்கவில்லை என்பதுதான். அனைவரும் அவரவர் நிறைவேற்றிய திருப்பணியைப் பொறுத்து ஐந்து, ஏழு என்ற எண்ணிக்கையில் பொற்காசுகளையே கூலியாகப் பெற்றனர்.
சப்தவாலி தரிசனம்
திருஅண்ணாமலை
இவ்வாறு விபூதி பிரகாரம் கட்டும் திருப்பணி 48 நாட்கள் தொடர்ந்து நிறைவேறியது. 48ம் நாள் அங்கு கூலியாளாக ஒருவர் சேர்ந்தார். அவருக்கும் மாலையில் கூலி வழங்கப்பட்டபோது அவர் கையில் வாங்கிய விபூதி பொற்காசுகளாக மாறாமல் விபூதியாகவே திகழ்ந்ததாம். அப்போதுதான் அனைவரும் அந்த உத்தமரின் கையில் துலங்கிய விபூதியைக் கண்டு ஆச்சரியத்துடன் அவரிடம், “சுவாமி, நாங்கள் அனைவரும் பொற்காசுகளைக் கூலியாகப் பெற தாங்கள் மட்டும் விபூதியைப் பெற்றது ஏனோ?” என்று வினவ, அவரோ, “எல்லாம் ஈசன் செயல்...,”.
“நீங்கள் அனைவரும் பொற் காசுகளை கூலியாகப் பெற அடியேன் மட்டும் விபூதியைக் கூலியாகப் பெறுகிறேன் என்றால் இந்தக் கூலியை அளித்தவர் நிச்சயம் எம்பெருமானாகத்தான் இருக்க வேண்டும்...”, என்று உறுதியாகக் கூற அனைவரும் கூலி தந்த அந்த உத்தமரைத் தேட ஆரம்பித்தனர். அங்கு உத்தமரைக் காண இயலவில்லை. இது என்ன அதிசயம் என்று அவர்கள் இது பற்றிய சந்தேகத்தை உறுதிப் படுத்திக் கொள்ள விபூதி பெற்ற உத்தமரிடம் கேட்க நினைத்தபோது அந்த உத்தமரும் மறைந்து விட்டார். அந்த பிரகாரமே பிற்காலத்தில் விபூதி பிரகாரம் என்று பெயர் பெற்றது. அந்த உத்தமரின் உருவச் சிலை இன்றும் திருவானைக்கோவில் திருத்தலத்தில் பக்தர்களின் வழிபாட்டிற்காக எழுந்தருளி உள்ளது.
விபூதி பெற்ற உத்தமர் என்ன ஆனார்...?
கருணை வழங்கும்
காருண்ய மூர்த்தி!
அந்த உத்தமர் ஸ்ரீசப்தவாலி மகரிஷி என்ற நாமத்துடன் திருஅண்ணாமலையில் இன்றும் உலவி தான் சிவபெருமானிடம் பெற்ற விபூதி சக்திகளை விருத்தி செய்து ஒவ்வொரு வருடம் ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்று திருஅண்ணாமலையில் நிறைவேறும் அன்னதான பிரசாதத்தில் தூலமாகவும் சூட்சுமமாகவும் இந்த விபூதி சக்திகளை அளித்து மக்களுக்கு, கிரிவல அடியார்களுக்கு அருள்புரிகின்றார். எனவே ஐப்பசி மாத பௌர்ணமி அன்று (7.11.2022 திங்கட் கிழமை) குதிரைவால், பாசுமதி, சீரகச் சம்பா போன்ற நீண்ட காலம் விளையும் அரிசி வகைகளால் சமைத்த சாதத்துடன் ஏழு விதமான காய்கறிகள் கலந்து அன்னதானம் நிறைவேற்றுவதால் ஸ்ரீசப்தவாலி மகரிஷியின் அனுகிரகத்தை அனைவரும் பெற இது வழிவகுக்கும். சப்த என்றால் ஏழைக் குறிப்பதால் அடுத்த நாள் செவ்வாய் கிழமை சூரிய கிரணத்தில் துலங்கும் ஏழு கிரண சூரிய சக்திகளுடன் சப்தவாலி மகரிஷியின் அனுகிரக சக்திகளும் நிரவி ஏழேழ் பரம்பரையைச் சேர்ந்த அடியார்களுக்கும், அன்னதானம் பெறும் பக்தர்களுக்கும் அருள்வழங்கும். இவ்வாறு சப்தவாலி மகரிஷியின் அருள்சக்திகள் பெற்ற சந்திர அமுத கிரணங்களால், செவ்வாய் பகவானின் அருளால் தீராத நோய்களே இல்லை என்பதும் ஸ்ரீசப்தவாலி மகரிஷியின் அனுகிரக சக்திகளில் ஒன்றாகும்.
பொதுவாக ஸ்வேதம் என்பது வெண்மை என்ற பொருள் தரக் கூடியது என்றாலும் ஸ்வேதம் என்பதற்கும் வெண்மை என்பதற்கும் ஒரு ஆழ்ந்த வித்தியாசம் உண்டு. நம் சற்குரு ஆரம்பத்தில் சிறுவயதில் லுங்கி அதாவது கைலி கட்டிக் கொண்டு உலவி வருவார். காலம் செல்லச் செல்ல வார வண்ண ஆடைகளில் வலம் வந்து பின்னர் தூய வெண்ணிற ஆடைகளில் காட்சி தந்தார். இது பொதுவாக ஒரு மனிதன் கைக்கொள்ள வேண்டிய ஆடை முறையாக அமைந்து மக்களுக்கும் அடியார்களுக்கும் பக்தர்களுக்கும் குருவருளை வாரி வழங்கியது. நம் சற்குரு மட்டும் அல்லாது வள்ளலார், மாதா அமிர்தானந்தா போன்ற பலரும் இந்த முறையைக் கைக்கொண்டனர். ஆனால், இவர்கள் அணிந்த ஆடை வெள்ளை என்று கூறுவதை விட ஸ்வேத சக்திகள் நிறைந்த ஆடை அலங்காரம் என்று கூறுவதே முறையாகும்.
கனிந்த கனி போர்த்தியிருந்த காவி உடையும் இவ்வாறு வெள்ளை ஆடையை காவி வண்ணத்தில் தோய்த்து எடுக்கப்பட்டதே ஆகும். நாம் காணும் சூரிய ஒளியில் ஏழு நிறங்கள் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இந்த ஏழு நிறங்கள் தோன்றுவதற்கு முன்னால் அந்த ஒளிக் கற்றைகள் ஒலியுடன் சேர்ந்து துலங்கும் போது ஏற்படும் ஒலி ஒளிக் கலவையே ஸ்வேதம் என்பதாகும். அதனால்தான் இதை மகான்கள் அணியும் வெள்ளை ஆடை என்று கூறாமல் ஸ்வேத அலங்காரம் என்று வர்ணிக்கிறோம். மனிதர்கள் சூரிய ஒளியில் துலங்கும் ஏழு வண்ண சக்திகளைப் பெற்றாலும் இறை மூர்த்திகளுக்கு சூரிய பகவான் ஸ்வேத ஒளிக் கிரணங்களாலேயே அபிஷேகம் நிகழ்த்துகிறார் என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் சித்தர்கள் கூறும் பாஸ்கர பூஜை மகத்துவங்களில் ஒன்றாகும்.
ஹரஹர ஹரஹர சங்கரா !
நம் சற்குரு உழவாரப் பணிகள் மேற்கொண்ட லால்குடி திருத்தலத்தில் சூரிய பகவான் ஸ்ரீதட்சிணா மூர்த்திக்கு இவ்வாறு தன் ஸ்வேத சூரிய கிரணங்களால் அபிஷேகம் நிறைவேற்றும் அற்புதத்தை நீங்கள் இங்கு வீடியோவில் கண்டு இரசிக்கலாம்.
சிவபெருமான் விபூதி பிரகாரத்தை நிர்மாணித்தபோது அப்போது அந்தத் திருப்பணியில் கலந்து கொண்டவர்கள் எழுப்பிய ஹரஹர ஹரஹர சங்கர என்ற வான்பிளந்த சிவகோஷமே இங்கு வீணை கானமாக ஒலிக்கிறது.
திருஅண்ணாமலையில் ஆஸ்ரம கட்டுமானப் பணிகள் நிறைவேறியபோது ஜல்லி, செங்கல் போன்றவைகளை ஆஸ்ரம மேல் தளத்திற்கு ஏற்றும்போது நம் சற்குருவும் அடியார்களுடன் சேர்ந்து கொண்டு கல், செங்கற்களை சுமந்து சென்றார். அந்த திருப்பணியில் கலந்து கொண்ட அடியார்கள் இங்கு கேட்கும் கானம் மூலம் பேரின்பம் அடைவார்கள் என்பதும் இந்த சிவ கோஷத்தின் மகிமையாகும்.
கட்டிவயல் சூரிய
பூஜையில் நீராடும் இறைவன்!
இறைவனின் மகிமையை ஒரு தூசி தூசி தூசி அளவு கூட நம்மால் அறிய முடியாது என்பதற்கு சூரிய பகவான் இயற்றும் பூஜையும் ஒரு உதாரணமாகும். பூமிக்கு ஏழு கதிர்களை மட்டும் வழங்கும் சூரிய பகவானோ இறை மூர்த்திகளை பூஜிக்கையில் நம் சிந்தனைக்கு எட்டாத பலவிதமான வண்ணக் கதிர்களால் வழிபடுகின்றார். எப்படி ஸ்வேத கதிர்கள் என்பவை திருவெள்ளியான்குடி திருத்தலத்தில் மட்டுமே நாம் தரிசிக்கக் கூடிய வகையில் பொலிகின்றனவோ, அதே போல் வேறு வகையான அனுகிரக சக்திகளை அளிக்கக் கூடியதே ராமநாதபுரத்தில் உள்ள கட்டிவயல் சிவாலயத்தில் சூரிய பகவான் இயற்றும் பூஜையின் மகிமையுமாகும். கட்டிவயல் திருத்தலத்தில் வீசும் கதிர்கள் கட்டிவயல் என்ற சூரிய சக்திகளைப் பூண்டிருக்கும்.
ஸ்ரீயோகாம்பிகை கட்டிவயல்
திரவ வடிவில் இருக்க வேண்டிய இரத்தமானது உடலில் காயங்கள் ஏற்படும்போது அது உறைந்தால்தான் அதனால் அதிகப்படியான இரத்தம் வீணாவது தடுக்கப்படும். அதே சமயம் திரவ வடிவில் உள்ள இரத்தம் கட்டியாக இரத்தக் குழாயில் உறைந்து விட்டால் இதயம் பழுதடைந்து உயிருக்கே ஆபத்தான நிலை உருவாகி விடுமே. இத்தகைய கோளாறுகள் அனைத்தும் கட்டிவயல் திருத்தலத்தில் நிகழும் சூரிய பூஜையில் பங்கு பெற்று இறைவனை வேண்டுவதால் நயம் பெறும், அடியார்கள் நலம் பெறுவார்கள்.
இறைவனின் பெருங்கருணையை உணர்த்துவதே கட்டிவயல் திருத்தலமாகும். வெப்பம் என்பது கண்ணுக்குத் தெரியாத சக்தியாக இருந்தாலும் அது தழலாக, அனல் பிழம்பாக, ஆதிஅந்தம் இல்லாத அருட் பெருஞ் ஜோதியாக, திருஅண்ணாமலையாக, அண்ணாமலையானாக, ஜோதி அலங்கார பீடாதிபதி என்னும் வெங்கடரமண தாயாக, சற்குருவாக மிளிரும் வண்ணம் பிரகாசிப்பதே இறைவனின் பெருங்கருணை. இவ்வாறு வயல் என்ற கண்ணுக்குத் தெரியாத பெருங்கருணை உணர்வு, கண்ணுக்குத் தெரியும் வகையில் லிங்க வடிவில் இறைவன் பிரகாசிக்கும் தலமே கட்டி வயல் திருத்தலமாகும். தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற முறையில் அதை உலகம் முழுவதற்கும் கட்டிவயல் சக்திகளாக அளிப்பவரே சூரிய பகவான்.
யோகம் என்றால் ஜீவ சக்தி கொண்ட மனிதனை பரமாத்வாவுடன் இணைப்பதுதானே. இதற்கு துணையாக நின்று உதவி செய்வதில் சூரிய பகவானுக்கு நிகர் சூரிய பகவானே என்று உறுதி செய்வதாக அமைவதே நம் சற்குரு அளித்த சூரிய நமஸ்கார பூஜையாகும். இதை நிறைவேற்ற முடியாதவர்கள் தெய்வ சக்தியாய் ஒளிரும் கட்டிவயல் ஸ்ரீயோகாம்பிகையிடம் சரணடைவதும் எளிய யோகமே.
திருவானைக்கோயில் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீசப்தவாலி மகரிஷியின் திருவுருவம் நம் சற்குருவால் அளிக்கப்படவில்லை ஆதலால் இதற்கு மாற்றாக சுக்ர பகவான் துலா ராசியில் எழுந்தருளும் காலம் முழுவதும் ஏதாவது ஒரு நாள் திருவானைக்கோயில் ஸ்ரீகுபேர லிங்க மூர்த்தியை அபிஷேக ஆராதனைகளுடன் வழிபடுவதாலும் சப்தவாலி அனுகிரக சக்திகளை பெறலாம். சுபகிருது வருடத்தில் சுக்ர பகவான் துலா ராசியில் அக்டோபர் 19ந் தேதி முதல் நவம்பர் 11ம் தேதி வரை எழுந்தருள்வதால் இதை நன்முறையில் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் பக்தர்கள் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் காவிரி நதியில் நீராடி மேற்கூறிய வகையில் வழிபாடுகளை நிறைவேற்றுதல் சிறப்பாகும். இதனால் ஸ்ரீசப்தவாலி மகரிஷி பெற்ற நிரந்தர செல்வமான இறைவனின் விபூதி சக்திகளைப் பெறலாம்.
நம் அடியார்கள் திருவானைக்கோவில் ஸ்ரீகுபேர லிங்க மூர்த்தியை அபிஷேக ஆராதனைகளுடன் வழிபட்ட காட்சியை இங்குள்ள வீடியோவில் கண்டு இரசிக்கலாம்.
அன்பில் விளைந்த ஆரமுதே |
மனித உறவுகளில் மிகவும் பலமானது கணவன் மனைவி உறவே என்பர் பெரியோர்கள். நடைமுறையில் மனைவி பேச்சைக் கேட்காத பலரும் அம்மா, அப்பா சொல்வதையோ, நண்பர்களை நம்பியோ, சகோதர சகோதரிகள் வார்த்தைக்கு முக்கியத்துவம் அளிப்பதையோ நாம் காண்கிறோமே, இதன் காரணம் என்ன ? எல்லா உறவுகளுக்கும் அடிப்படையானதே ஆண்டான் அடிமை என்ற உறவாகும். இந்த உறவின் பல பரிமாணங்களே மேற்கண்ட உறவுகளில் நிலவுவதால் இவ்வாறு அதிகப் பரிமாணம் கொண்ட உறவுகளுக்கு மனிதன் நடைமுறையில் முக்கியத்துவம் கொடுக்கும் சந்தர்ப்பம் தோன்றுகிறது.
மனிதர்களுள் மாணிக்கமாகத் தோன்றிய ராமபிரான் வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் ராமபிரானுக்கும் சீதைக்கும் இடையே அமைந்த திருமண வாழ்க்கை வேறு எந்த மனிதனுக்குமே அமைந்ததில்லை, இனி அமையப் போவதுமில்லை என்று உறுதியளிப்பவரே நம் சற்குரு. இதற்கு அடிப்படையாக பல காரணங்களுள் ராமபிரான் ஜாதகத்தில் அமைந்த அபய களத்திர சுகம் அல்லது அபய களத்திர சுபம் என்ற அரிதிலும் அரிய அம்சமாகும்.
ஸ்ரீஉலகளந்த பெருமாள்
காஞ்சிபுரம்
அபய களத்திர சுகம் என்றால் என்ன ?
ஸ்ரீகுபேரலிங்க மூர்த்தி
திருவானைக்கோவில்
சுவையான சுகமான குடும்ப வாழ்வை ஒருவர் பெற வேண்டுமானால் அவர் ஜாதகத்தில் ஏழாமிடம், ஏழாமிடத்தில் அமைந்த கிரகங்கள், ஏழாமிடத்தைப் பார்க்கும் கிரகங்கள், திருமண வாழ்விற்கு உரிய சுக்ர பகவானின் தன்மைகள் இவையெல்லாம் முறையாக, பலமாக, தோஷமின்றி அமைதல் வேண்டும். பொதுவாக, செவ்வாய் பகவான் களத்திர தானத்தில் அமைந்தால் களத்திர தோஷம் என்று கூறுவார்கள். இவ்வாறு களத்திர தானத்தில் கனிந்த கனியின் ஜாதகத்தில் செவ்வாய் அமர்ந்ததால் அவர் திருமணமாகாத சந்நியாச வாழ்வைப் பெற்றார் என்று பலரும் கூறுவார்கள். அப்படியானால் அனைத்து திருமண பத்திரிகைகளிலும் காஞ்சி ஸ்ரீசங்கராச்சாரியாரின் அனுகிரகத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றே கூறி கனிந்த கனியின் ஆசியைக் கோருவதன் அவசியம் என்ன?
இதுவே சூரிய பகவானும் குருவும் இணைந்த சிவராஜ யோகத்தின் தன்மையாகும். எனவே ஆன்மீக சக்கரவர்த்தியாக மட்டும் காஞ்சி கனிந்த கனி திகழவில்லை, அனைத்து சாம்ராஜ்ய செல்வங்களையும், சக்கரவர்த்தியாகப் பெறும் சுகபோகங்கள் அனைத்தையுமே பகவான் கிருஷ்ணரைப் போல் மக்களுக்கெல்லாம் தாரை வார்த்து அளித்தார் கனிந்த கனி என்பதே நாம் அன்னாரின் திருவடிவடிகளை உறுதியாகப் பற்றிப் பெரும் சுகமாகும், சுவையாகும்.
ஒரு முறை ஒரு அடியார் நம் சற்குருவிடம், “வாத்யாரே, தாங்கள் ஒரு யுகத்தில் கிருஷ்ண பகவானின் திருக்கரங்களில் சுதர்சன ஆழ்வாராகத் திகழ்ந்ததாக ஒரு முறை கூறினீர்கள். இது எந்த யுகத்தில் நடந்தது, அப்போது அருள் புரிந்த கிருஷ்ண லீலைகளைப் பற்றி மேலும் அடியார்கள் தெரிந்து கொள்ள முடியுமா?” என்று வினயத்துடன் வினவினார். இதைக் கேட்ட சற்குரு தனக்கே உரிய மந்தகாச புன்னகையை உதிர்த்து, “இது ஒரு சிறிய வைபவம்... ஒரு பெரிய வைபவத்தை உங்களுக்கு விளக்கட்டுமா?” என்று கேட்டார். ஒருவர் கடவுளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால், கடவுள் அவரை நோக்கி பத்து அடி எடுத்து வைப்பார், குரு அவரை நோக்கி ஆயிரம் அடி எடுத்து வைப்பார் என்பர் பெரியோர். இவ்வாறு ஒரு அனுகிரகம் கேட்டால் ஆயிரம் அனுகிரகத்தை அள்ளி வீச நம் சற்குரு தயாராக இருந்தார் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமே.
நம் சற்குரு தொடர்ந்து, “கிருஷ்ண பகவான் யசோதைக்கு மட்டுமல்லாமல் அர்ஜுனன், அக்ரூரர், பீஷ்மர் போன்ற பலருக்கும் “தன்” விஸ்வரூப காட்சியைக் காட்டி அருளினான். அடியேனின் உருவ தரிசனத்தைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்வதை விட, அந்த பரமாத்மாவின் விஸ்வ ரூப காட்சியை நீங்கள் காண முடிந்தால் அது எவ்வளவு சுவையாக இருக்கும்?” என்று ஒரு அர்த்தமுள்ள, ஆணித்தரமான கேள்வியை பதிலாகக் கூறினார். கேள்வி கேட்ட அடியார் அகமகிழ்ந்து நம் சற்குருவின் முகத்தை பார்த்துக் கொண்டே இருந்தார். ஆனால், நம் சற்குருவிடமிருந்து அப்போது எந்த பதிலும் வந்ததாகத் தெரியவில்லை.
காலம் கடந்தது ...
நம் சற்குருவும் பூலோகத்தில் தன் திருஉடலை மறைத்துக் கொண்டார். ஆனால், அப்போது இருந்த அடியார்களுக்கு பல வருடங்கள் கழித்துதான் சற்குருவின் விஸ்வரூப தரிசனம் புரிய ஆரம்பித்தது. இந்த சுவையை நீங்கள் அறிந்து கொள்ளலாமே.
விஜய் டீவி நிறுவனத்திற்கு நம் சற்குரு பேட்டி அளித்து திருஅண்ணாமலையாரின் மகிமைகளை விவரித்தார். அந்த விவரங்களை டீவியில் ஒலி பரப்பியபோது அதில் முக்கியச் செய்தியாக (flash news) ஓரிடத்தில் வெடிகுண்டு வெடித்து பலர் பலியான சம்பவமும் தொடர்ந்து ஒலி பரப்பு ஆகிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட அடியார்களுக்கெல்லாம் நம் சற்குரு இவ்வளவு அருமையாக திருஅண்ணாமலையாரின் மகிமைகளை விளக்கிக் கொண்டிருக்கும்போது தொலைக்காட்சி நிறுவனத்தார் இந்த குண்டு வெடிப்பையும் ஒலி பரப்பி தெய்வீகச் சுவையின் மகத்துவத்தைக் கெடுக்கிறார்களே...?” என்று தோன்றியது உண்மைதான்.
ஸ்ரீஸ்ரீமதி அம்மன்
லால்குடி
ஆனால், பல வருடங்கள் கழித்த பின்னரே நம் சற்குரு அளித்த விஸ்வரூப காட்சியே அது, அதாவது நல்லதல்ல கெட்டதல்ல நடுவில் நிற்பது ஒன்றுதான், அதாவது சற்குருவே அனைத்துமாய் ஆகி உள்ளார் என்பதைக் கூறாமல் கூறிய நம் சற்குருவின் ‘விஸ்வரூப தரிசனத்திற்கு’ ஈடு இணையான ஒன்றை நாம் கனவிலும் அறிய முடியுமா, காண முடியுமா?
அபய களத்திர சுகத்தை பெற்ற தம் வாழ்வில் பெற்ற உத்தமரே ஸ்ரீராமர் ஆவார். ராமரின் களத்திர தானமான மகரத்தில் செவ்வாய் பகவான் உச்சம் பெற, மகர அதிபதியான சனி பகவான் துலாவில் உச்சம் பெற, துலா அதிபதி கிரகமான சுக்ரன் மீனத்தில் உச்சம் பெற்று நிற்க, மீன தன அதிபதியான குரு பகவான் நீர் ராசியான கடகத்தில் உச்சத்தில் பொலிய அந்த ராசியில் சந்திர பகவான் ஆட்சி பீடத்தில் அமர அது லக்கினம் அமரும் தலமாகவும், தளமாகவும் ஆனதால் இது ஜோதிட ரீதியாக ராம பிரான் அபய களத்திர சுகத்தை பெற்றதற்கு சான்றாகும். இவ்வாறு ஆறு களத்திர சுப அம்சங்கள் நிரவுவதால்தான் இந்த ஆறு எண்ணிற்கு உரிய 2022 வருடத்தில் எல்லையில்லா மகிமை உடைய ராமபிரானின் ஜாதக அம்சத்தில் ஒரு துளி மகிமையை இங்கு அளிக்கிறோம்.
வாலிக்கு பயந்து மலை, காட்டில் ஒளிந்து வாழ்ந்த சுக்ரீவன் ராம பிரான் ஊட்டிய தைரியத்தால் வாலியை சண்டைக்கு அழைத்து அறைகூவல் விடுத்தான். ஆச்சரியமடைந்த வாலி சுக்ரீவனை எதிர்கொள்ள விழைந்தபோது வாலியின் மனைவி தாரா, “சுவாமி, உங்கள் காற்று பட்டாலே பயந்து ஓடும் சுக்ரீவன் இன்று உங்களை வலிந்து சண்டைக்கு அழைக்கிறான் என்றால் இதில் ஏதோ மர்மம் இருக்கிறது. அதனால் அதைத் தெரிந்து கொண்டு அவனை எதிர்க்கத் துணிவதே அறிவுடைய செயலாகும்...”, என்று தன் கணவனுக்கு அறிவுரை கூறினாள்.
சிவ பக்தையான மண்டோதரி சீதையைப் பற்றி அறிந்தபோது ராவணனிடம், “சுவாமி, உங்கள் கடைக்கண் பார்வைக்காக ஏங்கி உங்கள் அந்தப்புரத்தில் எத்தனையோ ராணிகள் காத்திருக்க ஒரு மானிடப் பெண்மேல் ஆசை கொள்வதால் உங்களுக்கு அவமானமே ஏற்படும்...”, என்று கூறி அவனைத் தடுக்க முனைந்தாள். இவை எல்லாம் அபய களத்திர சுகம் என்பதைக் குறிக்கும் புராண சம்பவங்கள் ஆகும். பெண் புத்தி பின் புத்தி, அதாவது பின்னால் நடக்க இருக்கும் சம்பவங்களை தன் கூரிய அறிவால், கணவன் மேல் கொண்ட பத்தினித் தன்மை என்ற அருந்தவத்தால் விளைவதே இத்தகைய தொலை நோக்குப் பார்வையாகும். இத்தகைய அரிய தொலை நோக்குப் பார்வையைப் பெற்றாலும் அதைப் பற்றி சிறிதும் கர்வம் கொள்ளாது கணவன் பின்னால் தஞ்சம் கொள்வதையே தாரா, மண்டோதரி போன்ற உத்தமிகள் விரும்பினர். இதுவே அபய களத்திர சுகம் ஆகும். இத்தகைய தெய்வீக அனுகிரகம் கனியும் காலமே வரும் சூரிய கிரகணமும் அதைத் தொடரும் சந்திர கிரகணமும் ஆகும்.
கனிந்த கனியும் கனிவான
சற்குருவும் ஒன்றே!
ஒரு முறை நம் சற்குரு, காஞ்சி கனிந்த கனி பெரியவாளைப் பார்க்க காஞ்சி மடத்திற்கு தன் அடியார்கள் புடை சூழ சென்றிருந்தார்கள். நம் சற்குரு தன்னை எப்போதுமே வெளிக்காட்டிக் கொள்ளும் இயல்பு இல்லாததால் காஞ்சி மடத்தில் இருந்த ஒரு பணியாள் மடத்து வழக்கப்படி பெரியவாளின் தரிசனத்திற்காக வரிசையில் நின்ற நம் சற்குருவிடம் சட்டையைக் கழற்றி விடுமாறு கூறினார். அப்போது பக்தர்களுக்கு தரிசனம் அளிக்க அங்கு வந்த பெரியவரோ, “எங்கே திருஅண்ணாமலை சன்னிதானம், எங்கே திருஅண்ணாமலை சன்னிதானம்...,” என்று உரத்த குரலில் கேட்டாராம். உடனே அனைவரும் நம் சற்குருவைப் பற்றிக் கூறியவுடன் மிகவும் அகமகிழ்ந்து, “நீங்கள் நிறைவேற்றும் தெய்வீக காரியங்கள் தொடர்ந்து நற்பலன்களை வர்ஷிக்கட்டும்...,” என்று கூறி தன் இரு கரங்களை உயர்த்தி நம் சற்குருவையும் உடன் சென்ற அடியார்களையும் வாழ்த்தினாராம்.
ஸ்ரீகோமதீஸ்வரர்
சிரவணபெலகோலா
இதுவும் ஒருவிதமான அபய களத்திர சுகம் தரும் அனுகிரகமாகும். கனிந்த கனியின் களத்திர தானத்தில் செவ்வாய் பகவான் எழுந்தருள எட்டில் சுக்ரன் உச்சம் பெற்று இரண்டில் சனி பகவானைப் பார்க்கும் தெய்வீக அம்சமே இங்கு அபய களத்திர சுகம் தருவதாயிற்று. தொலை நோக்குப் பார்வை கொண்ட கனிந்த கனிக்கு நம் சற்குருவை ஏன் அடையாளம் காட்ட வேண்டும், இதுவே தன் மடத்தைச் சேர்ந்த பணியாளர்களுக்கும், கனிந்த கனியின் தரிசனத்திற்காக அங்கு கூடிய பக்தர்களுக்கும் திருக்கயிலாய பொதிய முனிப் பரம்பரை 1001வது குரு மகா சன்னிதானத்தின் திரண்ட அருளை பெற்றுத் தருவதற்கான கனிந்த கனியின் கனிந்த ஏற்பாடாகும்.
இறை மூர்த்திகள், மகான்களின் விழிச் சுடர்கள் மட்டும் அல்லாது அவர்களின் திருக்கரங்களும் சூரிய, சந்திர சக்திகளைப் பொழிவதால் திருஅண்ணாமலை, திருவெள்ளியான்குடி என எங்கு கிரகண வழிபாடுகளை இயற்றினாலும் அப்போது சிவசக்தி ஐக்ய தரிசனத்தையும், காஞ்சி மகானின் இரு கரங்களையும் தியானித்தவாறு வழிபாடுகளைத் தொடர்வதால் கிட்டும் பலன்கள் அளப்பரியன.
சிரவணபெலகோலா என்ற கர்நாடக மாநிலத்தில் உள்ள திருத்தலத்தைப் பற்றி நீங்கள் அறிவீர்கள். ஸ்ரீகோமதீஸ்வரர் அருளும் இத்திருத்தலம் நம் சற்குருவின் பூர்ண அனுகிரக சக்திகள் பொலியுமிடமாகும். அனைத்து தீர்த்தங்கர்களும் இன்றும் சிலை வடிவில் அருள்பாலிக்கும் அற்புத தலம் இது. இதில் 24வது (2+4=6=2022) தீர்த்தங்கராக நம் சற்குருவின் முந்தைய அவதாரம் திகழ்வதாலும் இத்தலம் சிறப்பு பெறுகிறது. சிரவண பெல கோலா என்றால் கேட்கும், ஒலி வடிவில் உள்ள, வெள்ளைக் குள சக்திகள், அதாவது ஸ்வேத சக்திகள் பொலியும் திருத்தலம் என்பது பொருள். அபூர்வ ஸ்வேத சக்திகள் பொலியும் அக்டோபர் 25, 26, நவம்பர் 7, 8 தேதிகளில் இங்கு வெண்ணிற பால்கோவா அல்லது பால்பேடா தானம் அளிப்பதால் கிட்டும் அனுகிரக சக்திகள் அமோகம்.
பகவான் கிருஷ்ணர் பௌர்ணமியில்தான் ராசலீலையைப் புரிந்தார் என்பதும் அப்போது பொலிந்த சந்திர கிரணங்களே ஸ்வேத கிரணங்கள் என்பதும் இந்த தானத்தின் பின்னணியில் அமைந்த திடக்ஷீர சுவையாகும்.
தற்காலத்தில் பல குடும்பங்களில் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் தோன்றிக் கொண்டே இருப்பதும், சந்ததிகள் இல்லாமை அல்லது சந்ததிகள் குறையோடு பிறத்தல் போன்ற துன்பங்கள் எங்கும் சூழ்ந்திருப்பதைக் காண்கிறோம். இதன் முக்கிய காரணங்களுள் இளம் வயதில் பெறும் தவறான காம சுகம், தேவையற்ற மருந்துகளை ஏற்றல், ஆரோக்யம் தரும் எண்ணெய்க் குளியலை நிராகரித்தல் போன்றவையும் அடங்கும். மேற்கண்ட சூரிய, சந்திர கிரகண நாட்களிலோ அல்லது ரோகிணி, ஹஸ்தம், திருவோண நாட்களிலோ, சிறப்பாக இந்த நட்சத்திர நாட்கள் வெள்ளிக்கிழமையுடன் இணையும் நாட்களிலோ சிரவணபெலகோலாவில் உள்ள தீர்த்தங்கர்களை வணங்கி, இத்தலத்தில் குறைந்தது மூன்று நாழிகைகள் (72 நிமிடங்கள்) வழிபாடுகளை இயற்றி பால்பேடா தானம் பக்தர்களுக்கு அளித்தலால் மேற்கண்ட குறைபாடுகள் நீங்க வழிபிறக்கும்.
சிரவணபெலகோலாவில் உள்ள அனைத்து தீர்த்தங்க உருவங்களும் சந்திரகாந்தகல்லால் உருவான மூர்த்திகள் என்பதே நம் சற்குரு நமக்காக பரிந்தளிக்கும் இதுவரை மக்கள் அறியா ஆன்மீக இரகசியமாகும். சந்திர பகவான் உச்சம் பெற்ற ரிஷப ராசியில் தோன்றியவரே நம் சற்குரு என்பதை நீங்கள் அறிவீர்கள்தாமே?
பெண் புத்தி பின் புத்தி |
எப்போதோ நடக்க இருக்கும் செய்திகளை இப்போதே அறிய வல்ல திறமை பெண்களுக்கு உண்டு என்றால் சீதா தேவி மட்டும் ஏன் இவ்வாறு மாரீசனனின் மாயக் குரலைக் கேட்டு லட்சுமணனை நிராகரித்தாள் என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றலாம். கிட்டத்தட்ட இது போன்ற கேள்வியைத் தான் நவநாத சித்தர்களிடம் ஒரு முறை தேவர்கள் கேட்டார்களாம். வசிட்டர் முக்காலமும் உணர்ந்த மகரிஷி என்று கூறுகிறோம், அப்படிப்பட்ட திறமை உடைய மகரிஷி குறித்த பட்டாபிஷேக முகூர்த்த நேரத்தில் ராமருக்கு பட்டாபிஷேகம் நிகழாவிட்டால் கூட பரவாயில்லை, அவர் பதினான்கு வருடம் வனவாசத்திற்காக சிற்றன்னையால் துரத்தப்பட்டார் என்றால் வசிஷ்டரை எப்படி திறமை உடையவர் என்று கூற முடியும்?
ஸ்ரீஅகத்திய பிரான்
திருக்குற்றாலம்
அதற்கு நவநாதசித்தர்கள், “இது ஒன்றும் பிரமாதமில்லை. நீங்கள் விரும்பியபடியே வசிட்டர் குறித்த முகூர்த்த நேரத்தில் ராமருக்கு பட்டாபிஷேகம் நிகழ்த்தி விடுவோமே…” என்றார்களாம். உடனே அங்கிருந்த முனிவர்கள் எல்லாம் கரம் கூப்பி, “சுவாமி, அவ்வாறு செய்து விடாதீர்கள்…”, என்று நவநாத சித்தர்களை வணங்கி கேட்டுக் கொண்டார்களாம்.
காரணம் என்ன ?
வசிட்டர் குறித்த முகூர்த்த நாளில் ராமருக்கு பட்டாபிஷேகம் நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும். ராமர் காட்டிற்குப் போக மாட்டார், ராமர் பத்தினி சீதையை ராவணன் கடத்திச் செல்லும் சந்தர்ப்பமே தோன்றி இருக்காது, அதனால் ராமர் சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனைக் கொல்ல வேண்டிய அவசியமும் உண்டாகாது. அதனால் ராவணனின் சிம்மாசனப் படிகளாகக் கிடந்து வாடிய நவகிரக தேவதைகளுக்கு விமோசனமே கிட்டாமல் போய்விடும். இது அனைத்தையும் ஒரு நொடியில் முனிவர்கள் அறிந்ததால்தான் நவநாத சித்தர்களிடம் மேற்கண்ட வேண்டுகோளைச் சமர்ப்பித்தனர்.
அது மட்டுமல்லாமல் ராம பிரானின் தரிசனத்திற்காக ஏங்கிக் கிடந்த பல முனிவர்களும் தங்கள் தவக் குடிலை விட்டு வெளியே வராமல் தவத்திலேயே மூழ்கி இருந்ததால் அவர்களுக்கு தரிசனம் அளிக்கவும், வானர வடிவு எடுத்து ராம தரிசனத்திற்காகக் காத்திருந்த தேவர்களுக்காகவும், சபரி போன்று மலைகளில் வசித்த மூத்த தவசிகளுக்காகவும், ஸ்ரீஅகத்திய பிரான் அளிக்கும் ஆதித்ய ஹ்ருதயம் விஜய சக்திகளை கோடிக் கணக்கான பக்தர்கள் பெறவும் தோன்றியதே ராம பிரானின் வனவாசம்.
அனைத்திற்கும் மேலாக
ஒரு வில்
ஒரு இல்
ஒரு சொல்
என்ற குரு தத்துவத்தை வார்த்தைகளில் மட்டும் அல்லாது நடைமுறையில் ராமபிரான் நிரூபித்துக் காட்டவும் ஒரு உபாயமாக அமைந்ததே சீதாராம வனவாசம்.
இவ்வாறு இறைவனின் சாம்ராஜ்யத்தில் நடக்கும் அனைத்தும் நன்மைக்கே என்பதற்கு நிரூபணமாக உள்ள பல விஷயங்களில் இதுவும் ஒன்றாகும். எதிர்காலத்தில் புண்ணிய நதிகள் மட்டுமல்லாது அனைத்து நீர் நிலைகளும் மாசு அடையும் என்பதை தீர்க தரிசனமாக உணர்ந்த வசிட்டர் போன்ற மகான்கள் ராமபிரானின் பட்டாபிஷேகம் என்ற ஒன்றைக் காரணம் காட்டி பாரத பூமியில் இருந்த அனைத்து தீர்த்தங்களையும் கலசங்களில் நிரப்பி அதைக் குதிரைகளில் ஏற்றி அயோத்திக்கு எடுத்துச் சென்றனர். ராமரின் பட்டாபிஷேக வைபத்திற்காக அயோத்தியை அடைந்த இந்த தீர்த்த யாத்திரைக்கு தலைமை வகித்து நடத்திச் சென்றவரே நம் சற்குரு என்பதை அயோத்தி சென்ற நம் ஆஸ்ரம அடியார்கள் அவர்தம் திருவாக்கினால் அறிவர்.
ஸ்ரீநந்தீஸ்வர மூர்த்தி
திருக்குற்றாலம்
அப்போது வெள்ளைக் குதிரை ஒன்றில் பவனி வந்த நம் சற்குரு அதே பரம்பரையைச் சேர்ந்த ஸ்வேத அஸ்வதம் என்ற வெள்ளைக் குதிரையில்தான் அயோத்திக்குச் சென்றார் என்பதும் நம் அடியார்கள் நெஞ்சை விட்டு நீங்கா நிகழ்ச்சியாகும். கைகேயி தசரதரிடம் வரம் கேட்கும்போது இராமன் பதினான்கு வருடங்கள் காட்டிற்குச் செல்ல வேண்டும் என்று கூறாமல் ஈரேழு வருடங்கள் என்று கூறினாள் அல்லவா? இவ்வாறு ஈரேழு என்பது அது கணவன் மனைவி இருவரின் களத்திர தானத்தைக் குறிப்பதாக அமையும் என்பதால் ராமரும் சீதையும் திரும்பி வரும் வரையான பதினான்கு வருட காலத்திற்கு அயோத்தியில் கலச பூஜைகள் ஆற்றிய நம் சற்குரு தெரிவிக்கும் ராம காதையாகும்.
இத்தகைய சீதா ராம சக்திகள் ராமரின் பட்டாபிஷேகத்தோடு பூர்ணம் அடைந்ததா என்ன?
இல்லவே இல்லை…
யுகங்கள் கடந்ததன்றோ ராம நாம சக்திகள். சீதை வால்மீகி ஆஸ்ரமத்தில் லவனைப் பெற்றெடுத்தபோது லவனுக்குத் துணையாக இருப்பதற்காக வால்மீகி மற்றோர் குழந்தையை குசா என்ற தர்ப்பை சக்திகளைக் கொண்டு குசனை உருவாக்கினார் என்பது நீங்கள் அறிந்ததே.
பல யுகங்கள் தான் ஜபித்த ராம தாரக மந்திரத்தின் வெளிப்பாடாகத் தோன்றியதே குசன் என்ற குழந்தை என்றால் இந்த ராம தாரக மந்திரத்திற்கு ஈடு இணையாக நாம் எதைக் கூற முடியும்.
ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சகஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வராணனே
என்று ஒரு முறை கூறும் ராம நாமமே ஆயிரம் பெருமாள் நாமத்திற்கு இணையான பலனைத் தரக் கூடியது என்றால் யுகங்கள் கடந்த வால்மீகியின் ராம நாம சக்திகளால் உருவான குழந்தையின் மகிமையை வர்ணிப்போர் யார் உளர்? இதுவே அன்பில் விளைந்த ஆர் அமுது.
சூரிய கிரகணத்தில் திருஅண்ணாமலையில்
அடியார்கள் இசைத்த கம்பி இசை !
பலரும் இரவில் தங்களால் தூங்க முடியவில்லை என்று தூக்க மாத்திரைகளைப் போட்டுக் கொண்டு உறங்குவது வழக்கமாகி விட்டது. முதியவர்கள் மட்டுமே இத்தகைய துன்பங்களை அனுபவித்து வந்தார்கள் என்பதுபோக தற்போது சிறுவயதில் உள்ளவர்களே இத்தகைய பழக்கங்களுக்கு ஆளாகி வருவது சகஜமாகி விட்டது. இதனால் முறையான தூக்கத்தால் கிட்டும் மன ஓய்வையும் உடல் ஓய்வையும் பெற முடியாததால் பலவிதமான மனநோய்களுக்கு இத்தகையோர் ஆட்படுகின்றனர். திருத்தலங்களை, மலைத் தலங்களை தொடர்ந்து வலம் வருவதால் நிச்சயம் இத்தகய துன்பங்களிலிருந்து விடுபடலாம். அவ்வாறு திருத்தலங்களை வலம் வருவதற்குக் கூட முடியாத அளவிற்கு வயதாகி விட்டாலோ, வியாதிகளால் உடல் பாதிப்பு அடைந்தவர்களோ இங்கு ஒலிக்கும் இசையை தினமும் உறங்கும் முன் கேட்டு வருவதால் நலம் அடைவர். Schizophrenia, காக்காய்வலிப்பு, தூக்கத்தில் உளறுதல் போன்ற துன்பங்களுக்கு ஓரளவு நிவாரணத்தை அளிப்பதே இங்கு நீங்கள் கேட்கும் கம்பி இசையாகும்.
25.10.2022 செவ்வாய்க் கிழமை அன்று திகழ்ந்த சூரிய கிரகண வழிபாட்டை செருகுடி திருத்தலத்தில் நம் அடியார்கள் நிறைவேற்றி மகிழ்ந்த காட்சியை அனைவரும் இரசித்து பயன்பெறும்பொருட்டு இங்கு வீடியோ படத்தில் அளித்துள்ளோம். ஸ்ரீமங்கள விநாயகர், ஸ்ரீமங்களாம்பிகை, ஸ்ரீமங்களேஸ்வரர், மங்கள தீர்த்தம் இவர்களுடன் ஸ்ரீமங்கள பகவானான செவ்வாய் நவகிரக மூர்த்தியும் இத்திருத்தலத்தில் தனிச் சன்னதி கொண்டு எழுந்தருளி இருப்பது எத்தகைய மகா விசேஷம். இவ்வாறு கோடி கோடியாய்ப் பெருகும் மங்கள சக்திகளை அடியார்களும் அவணியும் பெறும் பொருட்டே மங்கள பகவானுக்கு சர்வ மங்களம் பொருந்திய செம்பால் அபிஷேகம் நிறைவேற்றப்பட்டது.
26.10.2022 புதன் கிழமை அன்று ஐந்து கிரகங்களும் துலா ராசியில் கூட, இந்த துலா ராசியில் ஒன்பது கிரக சக்திகளும் இணைந்தன. பல நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறையே நிகழும் அற்புத கிரக சஞ்சார அமைப்பான இதை நன்முறையில் பயன்படுத்தும் முகமாக 25, 26 தேதிகளில் அடியார்கள் கிரிவலம் வந்து திருஅண்ணாமலையாரை வழிபட்ட நிகழ்ச்சியை இங்கு வீடியோவில் அளித்துள்ளோம்.
ஸ்ரீபாதாள லிங்கேஸ்வரர்
திருஅண்ணாமலை
இது சம்பந்தமாய் அடியார்கள் ரசித்த ஆனந்த நிகழ்ச்சி. ஒரு அடியார் கார்த்திகை தீப எண்ணெய் ஆஸ்ரம சார்பாக அளிப்பதற்காக திருஅண்ணாலையார் கோயிலிக்குச் சென்றிருந்தார். அப்போது கோயிலில் உள்ள பாதாள லிங்க வாசலில் சற்று நேரம் அமர்ந்திருந்தார். அப்போது அவருக்கு ஒரு எண்ணம் தோன்றியது. அது என்ன?
“நம் சற்குரு நமக்காக எவ்வளவோ ஆன்மீக விஷயங்களை தன்னுடைய மௌனத்தின் மூலமாக, மௌன குருவாய், அளித்துக் கொண்டுதான் இருக்கிறார்... ஆனால், நாமோ நம்முடைய அறியாமையால் இந்த ஆன்மீகப் பொக்கிஷங்களை எல்லாம் அவ்வளவாகப் பெற்று பயனடையாமல் முடியும்போது, நம் சற்குரு நமக்காக அந்த ஆன்மீக விஷயங்களை எல்லாம் நாம் வார்த்தைகள் மூலமாய் பெறும் பொருட்டு தன் திருவாய் திறந்து உபதேசமாக அளிக்கிறார்...”, என்பதே.
ஸ்ரீதட்சிணாமூர்த்தி பாதாளலிங்கம்
திருஅண்ணாமலை
அந்த அடியார் மீண்டும் ஆஸ்ரமத்தை அடைந்தபோது தன்னுடைய கருத்து சரிதானா என்பதை உறுதி செய்யும் முகமாக சற்குருவிடம் வினவ சற்குருவோ சிரித்த முகத்துடன், “ஆமாம், இது என்ன ஐயாவுக்கு (அடியாருக்கு) அவர் பாதாள லிங்கத்தின் வாசலில் உட்கார்ந்து இருந்தபோது தோன்றியதாக்கும்...”, என்று கேட்கவே அந்த அடியாரும் முகத்தில் அசடு வழிய சற்குருவின் கூற்றை ஒப்புக் கொண்டதற்கு அடையாளமாகத் தலையாட்டினார். நம் சற்குரு தொடர்ந்து, “அது ஒன்னும் இல்லை, ஐயா, அங்கு ரமணர் உட்கார்ந்து பல காலம் தவம் பண்ணின இடம்... அதனால்தான் ஐயாவுக்கு இந்த ஆத்ம விசார சிந்தனைப் பரல்கள் தெறித்து விழுந்தன...”, என்றார். எனவே ஒரே ஒரு அடியாருக்கு மட்டும்தான் இத்தகைய ஆன்மீகச் சிந்தனைப் பரல்கள் தெறிக்குமா என்ன?
நம் சற்குருவை, ரமண மகரிஷியை, இறைவனை நம்பும் அனைவருக்குமே இத்தகைய ஆத்ம விசார சிந்தனை களை கட்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆத்ம விசார சிந்தனை தெளிவு பெற முடியவில்லை என்று தவிக்கும் பலரும் இந்த சுபகிருது வருடத்தில் முடிந்தபோதெல்லாம் திருஅண்ணாமலை பாதாள லிங்க வளாகத்தில் அமைதியாக அமர்ந்து தங்கள் தியானத்தைக் கைக்கொள்வதால் நற்பலன் பெறுவார்கள்.
ரமண மகரிஷி திருஅண்ணாமலை பாதாள லிங்கத்தில் பல நாட்கள் தொடர்ந்து அன்ன ஆகாரமின்றி தவமியற்றியபோது அவருடைய தொடை பகுதிகளை எல்லாம் எறும்புகள், பூச்சிகள், பூரான்கள் கடித்து உடலின் பல பகுதிகளையும் தின்றே விட்டன. அந்நிலையில் காமாட்சி அம்மனாக அங்கு தோன்றிய சேஷாத்ரி சுவாமிகள் பாலமுருகனான ரமண மகரிஷியை பாதாள லிங்கத்திலிருந்து வெளியே கொண்டு வந்து அவர் காயங்களை ஆற்றி உணவளித்து சீராட்டிய நிகழ்ச்சியைப் பற்றி பலரும் அறிவீர்கள். மகான்களின் தவ நிலைகள் அனைத்தும் பூலோக மக்களின் நன்மைக்காகவே அமைவதால், இன்றும் பக்தர்கள் தம்பதி சகிதமாக கைகோர்த்தபடி பாதாள லிங்கத்தை மூன்று முறை அடிப்பிரதட்சணமாக வலம் வந்து வணங்கி தேனில் ஊறிய செவ்வாழைப் பழத் துண்டுகளை பக்தர்களுக்கு தொன்னையில் வைத்து தானமாக அளிப்பதால் குடும்ப ஒற்றுமை பெருகும்.
எமதீர்த்தம் திருஅண்ணாமலை
வெளியே சொல்ல முடியாத பல இரகசிய தவறுகளால், பிரச்னைகளால் வருந்துவோர்களும் தனியாக பாதாள லிங்க மூர்த்தியை வலம் வந்து மேற்கூறிய தானத்தை நிகழ்த்தி பயன் பெறலாம்.
நீ இறைவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் கடவுள் உன்னை நோக்கி பத்து எடுத்து வைப்பார், சற்குரு உன்னை நோக்கி ஆயிரம் அடி எடுத்து வைப்பார் என்பதற்கு சான்றாக அமைவதே திருஅண்ணாமலையில் உள்ள எம தீர்த்தமாகும். பிருத்வி நந்தியின் பின்னால் எமலிங்கத்தின் அருகில் பலரும் அறியாத வகையில் மறைவாக அமைந்துள்ளதே எமதீர்த்தமாகும். கிரிவலம் வரும் அடியார்கள் இந்த உண்மையை அறியாவிட்டாலும் அவர்கள் நம் சற்குரு கூறிய முறையில் அனைத்து திருஅண்ணாமலை தரிசனங்களையும் சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து வணங்குவதால் அந்த தரிசனப் பகுதியைச் சுற்றியுள்ள அனைத்து தெய்வ மூர்த்திகளின் அனுகிரகத்தையும் பெறலாம் என்பதற்கு எமதீர்த்தமும் ஒரு உதாரணமாகும்.
ஒரு அடியார் திருஅண்ணாமலை படம் பக்க நாதர் தரிசனத்தையும் பிருத்வி நந்தி மூர்த்தியையும் முறையாக வணங்கி தரிசிக்கும்போது, அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றும்போது அவரையும் அறியாமல் எம தீர்த்த தேவதைகளின் அருளாசியையும் பெறுகிறார், அதனால் அவருக்கும் அவருடைய பரம்பரையைச் சார்ந்த பலரும் அகால மரணம் போன்ற மிருத்யு தோஷங்கள் அண்டாமல் காப்பாற்றப்படுகிறார்கள் என்பது இத்தரிசனப் பலன்களில் ஒன்றாகும்.
ஒரு முறை கிரகணத்தைப் பற்றி நம் சற்குரு கூறும்போது, “சூரிய கிரகணமாக இருந்தாலும் சரி, சந்திர கிரகணமாக இருந்தாலும் சரி, கிரகணத்தைப் பற்றி மனிதர்களால் புரிந்து கொள்ளவே முடியாது. சித்தர்கள் நிலையில்தான் இந்த கிரகணங்களில் தோன்றும் தெய்வீக சக்திகள் புலனாகும். அதனால்தான் கிரகண காலம் முழுவதும் ஆறு, கோயில் திருக்குளங்கள், கடல், கிரிவலப் பாதை போன்றவற்றில் தங்கி அவரவர் பித்ருக்கள் அளிக்கும் கிரகண அனுகிரக சக்திகளை பெறும்படிக் கூறுகிறோம். கிரகணத்திற்குப் பின் அளிக்கும் தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றில் விளையும் சக்திகளையே அடியார்கள் வரங்களாக, பித்ரு மூர்த்திகளின், இறை மூர்த்திகளின் அனுகிரக சக்திகளாகப் பெறுகின்றனர். குறிப்பாக உபதேச மந்திரங்களின் பலன்கள் ஆயிரமாயிரமாகப் பெருகும் நேரமே அண்ணாமலை கிரகண கிரிவல நேரம் ஆகும்...” என்றார்.
திருஅண்ணாமலையில் பொலிந்த சூரிய கிரகண சக்திகளையே நீங்கள் இங்குள்ள வீடியோக்களில் உங்கள் பித்ருக்கள் வழங்கும் அனுகிரக சக்திகளாக கண்டு களிக்கிறீர்கள்.
விற்குடி விஜயராமன் |
தியாகராஜ சுவாமிகள் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை தோத்திரம் செய்வதாக அமைந்துள்ள துளசி தளமுலசே என்ற பாடல் வரிகளை நாம் அறிவோம்.
சிரவணபௌகோளா
பரமாத்மாவான ராமச்சந்திர மூர்த்தியே,
உன் திருவடிகளை துளசி தளங்களாலும் பல முறை பல காலம் பூஜித்துக் கொண்டே இருப்பேன்.
தர்மத்தில் நிலைகொண்டவனே
அயோத்தி மாநகரில் நிலைத்தவனே
தாமரை, புன்னாகம், சண்பகம், மல்லிகை, அல்லி மலர்களை
உனக்கு அர்ப்பணிக்கின்றேன்.
இரண்டு வரிகளில் அமைந்த இந்த தோத்திரத்தை விரித்தால் அது பிரம்மாண்டமான ராம காவியமாக மலரும் என்பதே இதன் சிறப்பு. இந்த தோத்திரத்தில் இலயித்து சுவாமிகள் பாடிய பின்னர் வீட்டு வாசலுக்கு வெளியே வந்து பார்த்தபோது அங்கே தெருவில் ராமச்சந்திர மூர்த்தி சீதை லட்சுமண சமேதராக தகிக்கும் வெயிலில் வெற்றுக் கால்களுடன் நடந்து செல்லும் காட்சியைக் கண்டு மயிர்க் கூச்செறிய அந்த தெய்வ மூர்த்திகளுக்கு தரையில் வீழ்ந்து வணங்கி வணக்கம் தெரிவித்தார் தியாகராஜ சுவாமிகள்.
இந்த கீர்த்தனை உணர்த்தும் சுவையில் சற்று நனைவோமே.
துளசி தளங்களை ராமர் திருப்பாதங்களுக்கு அர்ப்பணிக்கிறார் சுவாமிகள். இறை மூர்த்திகளை வர்ணிக்கும்போது இரு முறைகளை பெரியோர்கள கையாளுகின்றனர். ஆண் தெய்வங்களை வர்ணிக்கும்போது பாதாதி கேசமாகவும், பெண் தெய்வங்களை வர்ணிக்கும்போது கேசாதி பாதமாக வர்ணிப்பதுண்டு.
ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி
சிரவணபௌகோளா
நம் சற்குரு இதையொட்டியே திருப்பதி வெங்கடாசலபதியை தரிசனம் செய்யும்போது, என்னதான் கும்பலாக இருந்தாலும் சரி, சாக்குப் போக்கு சொல்லாமல், பெருமாளின் திருப்பாதங்களிலிருந்து தரிசனத்தை ஆரம்பித்து, கால், முழங்கால்கள், தொடை, வயிறு, புஜங்கள், முகம், நாமம், கேசத்தை அலங்கரிக்கும் கிரீடம் என்றவாறாக தரிசனத்தை பூரணம் செய்ய வேண்டும்.
பெண் தெய்வங்களை தரிசனம் செய்யும்போது கூந்தலில் மணம் வீசும் மலர்களை முதலில் தரிசித்து முகம், தனங்கள், வயிறு, இடை, முழங்கால், பாதங்கள் என்பதாக தரிசனத்தை பூரணம் செய்ய வேண்டும். ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் தியானம் லலிதா சகஸ்ரநாமத்தில் இவ்வாறு அமைந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள்.
துளசி தளமுலசே என்ற தியாகராஜ கீர்த்தனையில் இம்முறைதான் சுவாமிகளால் கையாளப்பட்டுள்ளது. துளசி தளங்களால் ராமர் பாதங்களுக்கு அர்ச்சிக்கும்போது ராமரை பாதாதி கேசமாக வழிபடத் துவங்குகிறார் சுவாமிகள். அவ்வாறு வழிபட்டு கிரீடப் பகுதியை அடையும்போது அங்குள்ள மலர்களில் ஒன்றாக சௌகந்திகம் என்பதை வர்ணிக்கிறார்.
சௌகந்திகம் என்பது அல்லி மலர். இரவில் மலர்வதுதானே அல்லி, இரவு ராணியாக, பெண் தெய்வமாக, முழுமையான அவதார மூர்த்தியாக சுவாமிகள் இங்கு ராமச்சந்திர மூர்த்தியை தரிசிக்கிறார் என்பது புலாகின்றது அல்லவா?
தியாகராஜ சுவாமிகள் வழிபாட்டில் ராமச்சந்திர மூர்த்தியின் பாதாதி கேச வழிபாடும், கேசாதி பாத வழிபாடும் ஒருங்கே சங்கமம் கொள்கின்றன என்பதே சுவாமிகளின் கீர்த்தனை உணர்த்தும் சுவையாகும்.
இது உண்மைதான் என்பதை உறுதி செய்யும் முகமாக அமைந்ததே அடுத்து சுவாமிகள் பெற்ற இறை தரிசனம். ஆம், பெருமாள் பாதத்தில் எந்நேரமும் எக்காலமும் பாத சேவை செய்யும் லட்சுமி தேவியின் அவதாரமான சீதா தேவியையும், தலைப் பாகத்தில் இருந்து நிழல் தந்து சேவை செய்யும் ஆதிசேஷன் அவதாரமான லட்சுமண சுவாமியையும்தானே தியாகராஜர் தரிசனம் செய்தார்? ராம நாமம் ஒன்றே மனிதர்களை எக்காலத்தும் காக்கக் கூடிய உண்மையான இரட்சை, தலை முதல் பாதம் வரை அமையும் பாதுகாப்பு கவசம் என்பதை உணர்த்த இதை விடச் சிறந்த ஒரு கீர்த்தனையை நாம் காண முடியுமா?
ஸ்ரீகௌதம முனி ஆஸ்ரமத்தில்
ஸ்ரீஅகத்திய முனி திருஅண்ணாமலை
காலையில் பாட வேண்டிய சம்பூர்ண ராகமான மாயாமாளவ கௌளை ராகத்தில் இப்பாடலை இசைத்தார் தியாக பிரம்மம். பூர்ண அவதாரத்திற்கு ஒரு பூர்ண ராகப் பாடலை அமைத்தார் என்றால் அவர் தம் தொலைநோக்கு பார்வைக்கு ஈடாக எதைக் கூற முடியும்? பிருந்தை என்றால் துளசி. துளசியை பாதத்தில் அர்ப்பணிப்பது என்றால் துளசி தேவியை ராமச்சந்திர மூர்த்திகளுக்கு திருவடி சேவை செய்யும்படி பிரார்த்திப்பதாகும். இதை உணர்த்துவதே துளசி கல்யாண வைபவத்தில் பெருமாள் துளசி தேவியை மணக்கும் பின்னணியில் அமைந்த தெய்வீக சுவையும் ஆகும். இது நிகழ்ந்த திருத்தலமே திருவிற்குடி சிவத்தலம்.
ஸ்ரீராமபிரான் சந்திர குலத்தில் உதித்தவர். ராம பாணமும் மூன்றாம் பிறைச் சந்திர வடிவில்தான் அமைந்திருக்கும். தீய சக்திகளை அழித்தல் என்ற அவதார நோக்கம் ராமருடையது என்றாலும் வெறுமனே தீய சக்திகளை அழித்தல் என்றல்லாது ஒவ்வொரு முறை ராம பாணத்தை பிரயோகம் செய்யும்போதும் மூன்றாம் பிறையை அணிந்த ஈசனை வணங்கி உத்தரவு பெற்றே தன் அவதார லீலைகளைப் புரிந்தார் என்பதே நம் சற்குரு உணர்த்தும் ராம லீலையாகும்.
திருவிற்குடி
இந்த ராம லீலைக்கு உறுதுணையாக அமைந்த எண்ணற்றோரில் அகலிகை, சீதை, துளசி என்ற பிருந்தை போன்றோரும் ஆவர். அகலிகையின் சாப விமோசனத்தில் ராமபிரானின் பாதணிகள் இல்லாது இருந்த வெற்றுக் கால்களிலிருந்து எழுந்த தூசி மண்ணே அகலிகைக்கு சாப விமோசனத்தைத் தந்தது. அந்த ஒரு துளி தூசி மண்ணும் தன்னை ஆசீர்வதிக்கையில் ராமர் பாதங்களுக்கு அர்ச்சனை நிறைவேற்றி மகிழ்ந்தவளே அகலிகை ஆவாள்.
அதனால்தான் இன்றளவும் உத்தமிகளில் முதன்மையாக அகலிகையை வைத்து
அகல்யா திரௌபதி சீதா தாரா மண்டோதரி
ததா பஞ்ச கன்யா ஸ்மரேந் நித்யம்
மகா பாப விநாசனம்
என்ற பஞ்ச கன்னிகை தோத்திரத்தை ஓதி நம் பாவங்கள் அனைத்தையும் போக்கிக் கொள்கிறோம்.
ராமச் சந்திர மூர்த்தியோ சந்திர வம்சத்தைச் சேர்ந்தவர். அவருக்கு ஸ்ரீஅகத்திய பிரானால் உபதேசிக்கப்பட்டதோ ஆதித்ய ஹ்ருதயம் என்ற சூரிய துதி. இதுவே சூரியனின் பிரதிபலிப்பு சக்தியாக சந்திரன் இணையும் பாங்காகும். இவ்வாறு சந்திர கிரகண சக்திகள் இணையும் வேளையில் நம் அடியார்கள் ஸ்ரீகௌதமர் ஆஸ்ரமத்தில் அன்னதானம் நிறைவேற்றினார்கள் என்றால் இந்த அரிய காரியத்திற்கு துணை நின்ற தெய்வீக அற்புதத்தை நாம் வார்த்தைகளால் வர்ணிக்க இயலுமா?
சுவையைக் குறைக்க வேண்டாமே... |
நம் சற்குரு கோவணாண்டியுடன் திருஅண்ணாமலையை எத்தனை முறை வலம் வந்தார் என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது, எத்தனை பிறவிகளில் இந்த வலம் தொடர்ந்தது என்பதையும் நாம் அறுதியிட்டுக் கூற முடியாது. இரவு நேரங்களில் திருஅண்ணாமலையை வலம் வந்த காலத்தில் எல்லாம் வெகுநேரம் நடந்து களைப்படைந்து விட்டால் நம் சற்குருவை ஒரு சுமைதாங்கியின் மேல் படுக்க வைத்து விட்டு தான் கீழே உள்ள கல்லில் படுத்துக் கொள்வார். “நீ சின்னப் பிள்ளை அப்பர் பர்த்தில் படுத்துக் கொள், நான் லோயர் பர்த்தில் படுத்துக் கொள்கிறேன்...”, என்ற காரணம் கூறி விடுவார்.
சித்த குரு வேத சூக்த
மாமந்திர மாமேரு சோழீஸ்வரம்
2022ம் ஆண்டில் அடியார்கள் எத்தனை சுமைதாங்கிக் கற்களை நிறுவ முடியுமோ அத்தனை சுமைதாங்கிக் கற்களை நிறுவுமாறு நம் சற்குரு தெரிவித்திருந்தார். விருத்தசீர சுமைதாங்கி என்ற இந்த அழியாச் சின்னங்கள், சித்த அவதாரச் சின்னங்களாய் நம் கோவணாண்டி, சிறுவன் மகிமைகளை என்றென்றும் நிலைநாட்டும் என்பதே இந்த சுமைதாங்கிகளின் பின்னணியில் அமைந்த ஆன்மீகச் சுவையாகும்.
திருவெள்ளியான்குடி ஸ்ரீகோலவில்லி வெள்ளி ராமர் ஆலயத்தின் முன்பாகவும், ஸ்ரீசோழீஸ்வரர் ஆலயத்தின் முன்பாகவும், திருச்சி சோமரசம்பேட்டை அருகில் உள்ள பெருங்குடி ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயத்தின் அருகிலும் இத்தகைய விருத்தசீர சுமைதாங்கிகள் நம் அடியார்களால் 30.12.2022 வெள்ளிக் கிழமை அன்று நிறுவப்பட்டன என்பதே நம் உள்ளம் பூரிக்கும் செய்தியாகும்.
மேலோட்டமாகப் பார்த்தால் இவை வெறும் சுமைதாங்கிகள் என்று தோன்றினாலும் வெள்ளிக் கிழமை, ரேவதி நட்சத்திரம், 30ந் தேதி, மார்கழி 15ம் நாள், சித்த யோகம் என்ற இணைப்பை சற்றே ஆத்ம விசாரம் செய்து பார்த்தால் இதன் தெய்வீக பிரதிஷ்டை சக்திகள் நம்மை பிரமிப்புக்குள்ளாக்கும். 2022 என்று குருவும் சற்குருவும் (3+3) இணையும் ஆண்டில் இவ்வாறு அப்பர் பர்த்தும் லோயர் பர்த்தும் இணைவது என்பது எத்தகைய மகத்துவம் வாய்ந்த ஒரு ‘birth’ ஆக அடியார்களுக்கு அமையும் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
சித்த குரு வேத சூக்த
மாமந்திர மாமேரு திருவெள்ளியான்குடி
விருத்தசீரம் என்றால் முதிர்ந்த அனுபவம், கனிந்த கனி என்றெல்லாம் பொருளுண்டு. நம் அடியார்கள் சந்திக்கும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் இந்த சுமைதாங்கியில் விடை உண்டு, நிவாரணம் உண்டு. ஒரு கோயிலில் மூல மூர்த்தியை தரிசிக்க முடியாவிட்டாலும் அங்குள்ள தீர்த்தம், கொடி மரம், தலமரம் இவற்றை தரிசனம் செய்து தங்கள் மனக் குறைகளைக் கூறினாலும் அந்தக் குறைகள் இறையருளால் தீர்க்கப்படும் என்பதுபோல தொற்றுநோய், கலவரம், ஊரடங்கு என்ற எதிர்மறை சக்திகள் தோன்றி சகஜ வாழ்க்கையை பாதித்தாலும் அடியார்கள் இத்தகைய சுமைதாங்கிகளை வணங்கி வழிபாடு இயற்றுவதால் தகுந்த வழிகாட்டுதலை, மன அமைதியைப் பெறுவார்கள் என்பது உறுதி.
இந்த சித்த குரு வேத சூக்த மாமேருவிற்கு பச்சை, மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, மணமுள்ள மலர் மாலைகள் அணிவித்து, எண்ணெய் தீபங்கள், ஊதுபத்தி, மெழுகுவர்த்தி என்று எந்த வழிபாட்டு அம்சங்களையும் இந்த சுமைதாங்கிகளின் மேல் ஏற்றி வைத்து, நின்றோ, அமர்ந்தோ, முழங்காலிட்டோ, ஏன் படுத்த நிலையில் கூட இந்த சுமைதாங்களின் அருகில் பிரார்த்தனை செய்து பயன்பெறலாம். சர்க்கரைப் பொங்கல், மஞ்சள் கேசரி, டைமண்ட் கல்கண்டு படைத்து தானமளித்தலும் சிறப்பே.
தலையில், இடுப்பில், முதுகில் சுமை தூக்கி வருபவர்கள் தங்கள் சுமைகளை இந்தச் சுமைதாங்கிக் கற்களில் இறக்கி வைத்து இளைப்பாறுவது வழக்கம். இது பழைய கதை. தற்காலத்தில் இவ்வாறு சுமை தூக்குபவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து விட்டது எனலாம். அதே சமயத்தில் பொறாமை, நோய், இயலாமை, தள்ளாமை போன்ற காரணங்களால் மக்களின் மனச் சுமை பல மடங்கு அதிகரித்து விட்டது, மலிந்து விட்டது என்பது உங்களைச் சுற்றிலும் காணக் கூடிய ஒரு சாதாரண விஷயமே. இத்தகைய மனச் சுமைகளை நீக்கும் மாமருந்தே இந்த சுமைதாங்கிக் கற்களாகும். இந்த சுமைதாங்கி கற்கள் தாங்கும் மந்திரத்தைப் பார்த்துக் கொண்டு, ஜபித்துக் கொண்டே இருந்தால் போதும். உங்கள் மனச் சுமை அனைத்தும் நீங்கி விடும், மாயமாய் மறைந்து விடும். இது ஒரு உத்தம குருவின் ஆறுதல் வார்த்தைகள் மட்டும் அல்ல, இரு உத்தம ஆன்மீகச் சிகரங்களின் இணைந்த உத்திரவாதம் ஆகும்.
முதுமையோ, இயலாமையோ ஒரு வேதனை அல்ல, தாங்கி பொறுத்துக் கொள்ள வேண்டிய ஒரு நிர்ப்பந்தமான அனுபவமும் கிடையாது. நம் சற்குரு ஒரு முறை, “சார், இறைவனிடம் வேண்டினேன், அடியேன் அனுபவிக்காத சுகம் கிடையாது, ஓட்டாத உள்ளூர் வெளிநாட்டுக் கார்கள் கிடையாது, அனுபவிக்காத வசதியும் கிடையாது, சென்ட்ரலைஸ்டு ஏர்கண்டிஷனர் முதற் கொண்டு அனைத்து வசதிகளையும் அனுபவித்துப் பார்த்து விட்டேன். அதனால் கொஞ்சம் உடல் வேதனையையும், மன வேதனையையும் கொடு என்றேன் ... அதுதான், ஐயா, அடியேன் இப்போது அனுபவிக்கும் வேதனைகள்...”, என்பது மிகவும் மோசமான உடல் நிலையில் இருந்து கொண்டு வேதனைகளை அனுபவித்த நம் சற்குருவின் ‘அடிமை கண்ட ஆனந்தம்’.
சித்த குரு வேத சூக்த
மாமந்திர மாமேரு பெருங்குடி
இந்த வேதனைக்கு (?!) எல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்போல் அமைந்ததே நம் சற்குரு இந்தப் பூமி வாழ்க்கையை உகுத்த அந்த கடைசி நொடி அனுபவமும். இரு குரு சக்திகளை குறிக்கும் மருத்துவமனையில் இருந்த நம் சற்குருவை ஸ்கேன் எடுக்கும் மெஷினில் படுக்க வைத்தனர். உடலில் துணி அனைத்தும் அகற்றப்பட்டு இருந்தாலும் சற்குருவுடன் ஒட்டி இருந்தது நம் கோவணாண்டி அளித்திருந்த குருவைக் குறிக்கும் மூன்று ருத்ராட்சங்கள் மட்டுமே. அவற்றையும் கழற்ற முடியுமா என்று நம் சற்குருவைக் கேட்டபோது நம் சற்குருவோ, “அம்மா, இந்த ருத்ராட்சத்தை எங்கள் ஐயா கொடுத்தார், அவர் ஞாபகமாக இந்த ருத்ராட்சங்களை அடியேன் இன்று வரை அணிந்து கொண்டிருக்கிறேன். நீங்கள் ஸ்கேன் செய்வதற்கு இடையூறாக இருக்கும் என்றால் இதை அடியேன் தலைமேல் வைத்துக் கொள்கிறேன், போதுமா?” என்று கேட்டு அந்த ருத்ராட்சங்களை தன் தலை மேல், நெற்றி உச்சியில் மாட்டிக் கொண்டார்.
பொறுப்பில் இருந்த பணியாட்கள் ஸ்கேன் எடுக்க ஆரம்பித்தனர். CT Scanner வடதிசை என்ற குரு திசை நோக்கி நகர ஆரம்பித்தது. “பூஜ்யம் என்பது நேர்கோடு!” என்ற ஆசானின் அனுபவ மொழியை தன் வாழ்நாள் முழுவதும், முழுவதுமாகக் கடைபிடித்து வந்த நம் சற்குரு தன் வாழ்வின் கடைசி நொடியிலும் கடை பிடித்தார். ஆம், பூஜ்யம் என்ற வளைவு கோட்டு விசை, நேர் கோட்டு விசையாக மாறி ஸ்கேனர் செல்ல, upper berth, lower berthஉடன் இணைய, தன் வாழ்வின் கடைசி மூச்சை உலகத்தவர் நன்மைக்காக தன் சற்குருவின் மடியில் பள்ளிகொண்டவாறே தாரை வார்த்து அளித்தார் நம் சற்குரு.
எப்போதாவது சுமக்கும் தலை பாரமே சிரமம் என்றால் வாழ்நாள் முழுவதும் pacemaker போன்ற சாதனங்களை உடலில் பொருத்தி இருப்பவர்களும், மூத்திரப்பை போன்றவற்றை எப்போதும் தங்களுடன் தூக்கிச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பவர்களும் என் செய்வது? இத்தகையோர்க்கும் ஓரளவு நிவாரணம் அளிக்க வல்லதே இத்தகைய சுமைதாங்கி வழிபாடாகும்.
ஸ்ரீஅகத்தீசன் பெருங்குடி
இதுவே கொடுமை என்றால் ... ?
மனிதன் சுமக்கும் சுமைகளில் ‘தான்’ அகந்தையே மிகவும் கொடியது என்பார் மாதா அமிர்தானந்தா. கொடுமையான அந்த ஆணவத்தையும் அழிக்க வழிகாட்டுவதே இந்தச் சுமைதாங்கியின் தொடர்ந்த வழிபாடு.
நம் சற்குருவை நேரில் தரிசனம் செய்யாதவர்கள் சிவ குடும்பமாகத் திகழும் இந்த மாமேருவிடம் பிரார்த்தனை செய்து வந்தால் உரிய சற்குருவை அவர்கள் நிச்சயம் பெறுவார்கள்.
அமிர்தானந்தா அன்னை
அருளும் அமிர்தவர்ஷினி சக்திகள் !
அவரவர் பிறந்த நாட்கள், திருமண நாட்கள், ஒவ்வொரு மாதமும் 21ந் தேதி, ரோகிணி நட்சத்திர நாட்களில் நம் அடியார் மூர்த்திகள் இந்த சித்த குரு வேத சூக்த மாமந்திர மாமேருவை வணங்கி வழிபடுதலால் அவர்கள் விஜய மூர்த்திகளாய்த் திகழ்வார்கள் என்பதில் ஐயமில்லை, ஐயமில்லையே!
நீங்கள் இங்கு தரிசனம் செய்யும் வலம்புரிச் சங்கு 21 தலைமுறைகளாக ஸ்ரீஅகத்தீசனுக்கு சேவை செய்து மகிழ்கிறது என்றால் இது சங்கா இல்லை விஜய சங்கா ?!
‘லப் டப்’ என்ற இதய ஒலியைக் கேட்கவல்லவர்களும், உணரவல்லவர்களும், ஸ்டெதாஸ்கோப் மூலம் இந்த ஒலியை தினமுமே கேட்கும் மருத்துவர்களும் பாக்கியசாலிகளே. காரணம் இந்த வேத ஒலி இறைவனின் உடுக்கை ஒலியின் பிரதிபலிப்பாக, ஆன்மாவின் குரலாக ஒலிப்பதே ஆகும். இதயத்தின் ஆரோக்கியத்தை உள்ளொலி இணைப்பான இதய ரேகைகள் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம். அதே போல் கால் ரேகைகளும் இதயத்தின் ஆரோக்யத்தை உணர்விப்பவையே. இவ்வாறு கால் மூலமாக ஆரோக்யத்தைப் பெருக்கும் முகமாகவே ஆலய பிரதட்சிணங்கள், கிரிவலங்கள், பாத யாத்திரை போன்றவை நம் முன்னோர்களால் வகுக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆடையூர்
பக்தர்களுக்கு அனுகிரகம் அளிப்பதற்காக அபய முத்திரை தரிசனங்கள் இறை மூர்த்திகளால் அளிக்கப்பட்டாலும் நடராஜ மூர்த்தி அளிக்கும் அரிதிலும் அரிய அபய பாத தரிசனம் நம் சற்குருவால் அளிக்கப்பட்டுள்ளது அல்லவா? ஆனால் இந்த தரிசனப் படத்தைப் பெறாதவர்கள் என் செய்வது? அவர்களுக்கும் அருள்புரிவதாக அமைந்துள்ளதே சித்த குரு வேத சூக்த மாமந்திர மாமேருவாகும். இதன் lower berth அபய பாத தரிசன சக்திகளை அளிப்பதாகும். பாறையாய் இறுகிய பிறவித் தளைகளை மாயம் செய்யும் இதுவா lower berth ?
நம் சற்குருவின் 51வது ஜீவ சமாதி அமைந்த திருஅண்ணாமலை ஆடையூர் திருத்தலத்தில் இரு விருத்தசீர சுமைதாங்கிகள் நம் அடியார்களால் நிறுவப்பட்டன. நம் கோவணாண்டி பெரியவரே சிறுவன் வெங்கடராமனின் 51வது ஜீவ சமாதி அமையும் இடத்தைச் சூட்சுமமாகக் குறிப்பிட்டார். இதன் காரணம் என்ன? மகரிஷிகள் அனைவருக்கும் பாத பூஜைகைள் நடைபெற்றதே குபேர லிங்கம் அமைந்துள்ள கிரிவலப் பாதை பகுதியாகும். சற்குருவின் பாதக் கமலங்களை குறிக்கும் விதமாக நம் அடியார்களால் இரு விருத்தசீர சுமைதாங்கிகள் அமைக்கப்பட்டன, இதுவே நம் சற்குருவின் தொலை நோக்குப் பார்வை அடியார்களுக்கு சுட்டிக்காட்டும் மகத்துவமாகும். ஆடையூர் திருத்தலத்தில் துலங்கும் இந்த இரு சுமைதாங்கிகளையும் நம் சற்குருவின் திருப்பாதங்களாக பாவித்து வழிபாடுகள் நிகழ்த்துவதால் திரளும் பலன்களை வர்ணிக்கத்தான் இயலுமா?
பெற்றோர்களுக்கு பாதபூஜைகளை அவர்கள் உயிருடன் இருக்கும்போதே ஆற்ற இயலாதவர்கள், தங்கள் கணவன்மார்களுக்கு பாத பூஜைகளை நிறைவேற்ற விருப்பமில்லாதவர்கள் இந்த இரு மாமேரு சின்னங்களை வணங்கி வழிபடுதலால் நற்பலன் பெறுவார்கள். தொடர்ந்த வழிபாடு அவர்களுக்கு கடவுள் நம்பிக்கையைப் பெருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், நடராஜ மூர்த்தியின் ஆடிய பாதமும் அபய பாதமும் ஒன்றாய்த் துலங்குவதே ஆடையூர் திருத்தல மாமேரு பிரதிஷ்டையாகும்.
இந்த மாமேருவை தரிசனம் செய்து வழிபட விரும்புவோர் தேவநந்தல் கிராமம், ஆடையூர் என்று விசாரித்து கிரிவலப் பாதையிலிருந்து விலகி காஞ்சி செல்லும் சாலையில் செல்லும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஒவ்வொரு மாமேருவும் பூமியில் நிலைகொள்ளும்போது எத்தனையோ சுவையான வரலாறுகளை உள்ளடக்கித்தானே பிரகாசிக்கும். அதுபோல் திருச்சி கிள்ளுக்கோட்டை அருகில் உள்ள ஸ்ரீகண்ணிறைந்த பெருமாள் தலத்தில் எழுந்தருளிய மாமேருவின் தோற்றத்தில் உள்ள சுவையே அழிஞ்சில் என்னும் என்றும் வற்றாத, மறையாத சுவையாகும். அழிஞ்சில் மரத்தின் விதைகள் எங்கும் பரவி மறையாது அந்த மரத்தின் உள்ளேயே சென்று மறைந்து விடும் இயல்புள்ளதால் அழிஞ்சில் மரத்தை தல விருட்சமாக உடைய மலையடிப்பட்டி சிவாலயத்தின் மலையடிப்பகுதியாக ஸ்ரீகண்ணிறைந்த பெருமாள் தலம் விளங்குவதே மலையடிப்பட்டியின் தனிச் சிறப்பாகும். விருத்த என்றால் பழைமை வாய்ந்த, முதிய என்று பொருள். சீரம் என்றால் வளமையான, பால் சுரக்கும், இளமையான என்றெல்லாம் பொருள். எனவே கோவணாண்டி பெரியவரையும் பாலகனான நம் சற்குருவையும் குறிக்கும் இந்த விருத்த சீர சுமைதாங்கி பழைமையான சிவத்தையும் பாலகனான பெருமாளையும் இணைக்கும் தலத்தில் தோன்றியிருப்பது எத்தகைய பெருமை தரும் சீர்மை. மேலும் பெற்றோரின் சுமையாக வளரும் ஒரு குழந்தை அந்த பெற்றோர்களைத் தாங்கும் சுமை தாங்கியாக, தம் பெற்றோரைத் தாங்குவதாக இங்கு ஆலமரத்தின் விழுதுகளாக மாறித் தாங்குவதும் நாம் இரசிக்கக் கூடிய மற்றோர் சுவையே.
கண்ணன் என்ற பெருமாள் நாமத்திற்கு ஆயிரமாயிரம் அர்த்தங்கள் உண்டு. நம் சற்குரு அளிக்கும் சுவையோ இவை எல்லாவற்றிலும் அமிர்தமயமானது என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. அது என்ன?
கிருஷ்ணன் சிறு குழந்தையாக இருக்கும்போது தன் தலைக் குடுமியில் மயிலிறகு சூடி காட்சி அளிப்பது வழக்கம் என்பதை நாம் அறிவோம். ஆனால், இதன் பின்னால் அமைந்த தெய்வீக இரகசியத்தை சித்தர்கள் மட்டுமே அறிவர். சிவபெருமான் எப்போதும் தன் இதயத்தில் பெருமாளைச் “சூடி”
ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வராணனே
என்று நாம உச்சாடனம் செய்து கொண்டே இருப்பார்.
தேவபாண்டலம்
அதுபோல் பெருமாளும் எப்போதும் ஒரு சிவநாமத்தை கூறி அதை ஒவ்வொரு இமைப் பொழுதும் மற்றவர்களின் நலனுக்காக அர்ப்பணிப்பதையே தம் நித்திய கடமையாகக் கொண்டிருந்தார். இதுவே கண்ணன் என்ற நாமத்தின் பொருளாகும். ஒவ்வொரு கண்ணிமைக்கும் நேரத்தில் பெருமாள் உச்சரிக்கும் சிவ நாமத்தின் பலா பலன்களை மற்றர்களின் நலனுக்காக அளிப்பதே கண்ணன் என்ற பெருமாள் நாமத்தின் பொருள் என்பதே நம் சற்குரு உவந்தளிக்கும் நாம மகிமை. பூமியில் பெருமாள் எடுத்த ஒவ்வொரு அவதாரத்திலுமே இந்த நாம உச்சாடன மகிமை தொடர்ந்தது. கிருஷ்ணாவதரத்தில் ஏகலைவனின் அம்பு தன் சிவந்த பாதத்தில் பதிந்து தான் வைகுண்டம் திரும்பும் தருணம் வந்தபோது, “தனித் துணை சிவவே, அடியேன் வழித்துணை சிவமே,” என்று சிவநாம தியானத்தில் பெருமாள் இலயித்துத்தான் வைகுண்டம் ஏகினார். இதுவே திருஅண்ணாமலை அருகில் உள்ள தேவபாந்தலம் திருத்தலம் சுட்டிக் காட்டும் மகிமையாகும்.
பந்தலம், பாந்தலம் என்ற சொற்கள் எல்லாம் சிவ பந்தலாய் பெருமாளுக்கு அமைந்து பெருமாளைக் காத்த, சிவனடியார்களைக் காத்த பாந்தவ சக்திகளே ஆகும். மேலோட்டமாக பார்ப்பதற்கு பெருமாள் தன் ஆயுள் முழுவதும் தேவ அற்புதங்களை நிறைவேற்றியது போல் தோன்றினாலும் இந்த அற்புதங்கள் அனைத்தின் பின்னணியிலும் சிவபெருமானின் காக்கும் சக்திகளே ஆதாரமாக அமைந்தன என்பதை நாம் அறிவோம். அது போல் பெருமாளுக்கு பாதுகாப்பு பந்தலாய் காத்த சக்திகளே தேவபந்தல திருத்தலத்தில் இன்றும் பக்தர்களைக் காக்கும் சக்திகளாக தொடர்ந்த பரிணமிக்கின்றன. இதை சாதாரண மக்களும் புரிந்து கொள்ள உதவி செய்வதே தேவபாந்தல திருத்தலத்தில் நம் அடியார்கள் பிரதிஷ்டை செய்த விருத்தசீர சுமை தாங்கி ஆகும்.
ஓம் ஸ்ரீகுருவே சரணம்